For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோர்ட்டுக்கு நேரில் வராமல் இருக்க விதி விலக்கு கோரி ஜெ. மனு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கைத் தமிழர்களுக்காக வசூலிக்கப்பட்ட நிதி குறித்து கருத்து தெரிவித்ததற்காக தமிழக அரசு தன் மீது தொடர்ந்துள்ள அவதூறு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாமல் இருக்க விதி விலக்கு அளிக்கக் கோரி சென்னை செஷன்ஸ் கோர்ட்டில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், இலங்கை தமிழர்களுக்காக கருணாநிதி திரட்டிய நிதி அந்த மக்களுக்கு போய் சேர்ந்ததாக இதுவரை தகவல் இல்லை. அந்த நிதியை கருணாநிதி தன்னுடைய குடும்ப நிதியில் சேர்த்துக்கொண்டுவிட்டாரோ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என்று கூறியிருந்தார்.

இதையடுத்து முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்திருந்தார். மேலும், தமிழக அரசு சார்பில், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஜெயலலிதா அறிக்கை விட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும் என்று கோரி செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்த கோர்ட், ஜுன் மாதம் 2-ம் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கோர்ட்டில் ஆஜராக விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி ஜெயலலிதாவின் வக்கீல் நவநீதகிருஷ்ணன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், இலங்கை தமிழர்களின் அவலம் குறித்து பொதுமக்களின் எண்ணத்தை பிரதிபலித்து அறிக்கையை வெளியிட்டேன். இதைத்தொடர்ந்து என்மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று எச்சரித்து கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நோட்டீசில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி பதில் அனுப்பினேன். கருணாநிதி எனது அரசியல் எதிரியாவார். எல்லா நேரத்திலும் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவராக நான் பணியாற்றுவதை தடுக்க, என்மீது பொய் வழக்கு போடுகிறார்.

இப்போது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வரும் 2-ந் தேதி கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்று முதன்மை செசன்ஸ் கோர்ட் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

இந்த வழக்கை தொடர குற்றவியல் நடைமுறை சட்டம் 199(4) பிரிவின் கீழ் சென்னை மாநகர அரசு வக்கீலுக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கி கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி உத்தரவை பிறப்பித்துள்ளது.

சரியாக மனதை செலுத்தாமல் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. நோட்டீசுக்கு நான் அளித்த பதிலை கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனது பதிலில்; எனது அறிக்கையானது அவதூறாக இல்லை என்றும், சட்ட விதிமுறைகளை மீறவில்லை என்றும், சட்டத்தின்கீழ் நிவாரணம் பெற கருணாநிதிக்கு உரிமை இல்லை என்றும் நிரூபித்துள்ளேன். மேலும் எனது அறிக்கை எந்தவிதத்தில் அவதூறானது என்று அரசு உத்தரவில் கூறப்படவில்லை.

கருணாநிதி சார்பில் அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ் அடிப்படையில் இந்திய தண்டனை சட்டம் 499-வது பிரிவின் கீழ் என்மீது வழக்கு தொடர முடியாது.

எனது அறிக்கையானது கருணாநிதியின் புகழுக்கு மற்றவர்கள் மத்தியில் களங்கம் ஏற்படுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லாத நிலையில் இந்திய தண்டனை சட்டம் 499-வது பிரிவின் கீழ் குற்றம் என முடிவுக்கு வரமுடியாது. இதன் அடிப்படையில் எனக்கு எதிராக வழக்கு தொடர சென்னை மாநகர அரசு வக்கீலுக்கு அதிகாரம் அளித்து அரசு உத்தரவிட்டது தவறானது.

அரசு வக்கீல் அலுவலகம் என்பது தனிப்பட்ட சுதந்திரமான அலுவலகமாகும். இதை தமிழக அரசும், கருணாநிதியும் இதுபோன்று தவறாக பயன்படுத்த முடியாது. வக்கீல் நோட்டீசுக்கு நான் அளித்த பதிலை அரசு வக்கீல் கோர்ட்டில் தாக்கல் செய்யாதது உள்நோக்கம் கொண்டதாகும்.

அதை தாக்கல் செய்யாததன் மூலம், சென்னை மாநகர அரசு வக்கீல் சுதந்திரமாக செயல்படவில்லை. இது அரசியல் சட்டம் 21-வது பிரிவுக்கு எதிரானது. அரசியல் நோக்கத்திற்காக இந்த உத்தரவை, அதுவும் பாராளுமன்ற தேர்தலின்போது அரசு பிறப்பித்துள்ளது.

கோர்ட்டு அனுப்பிய சம்மன் எனது நேர்முக உதவியாளர் மூலம் கடந்த 23-ந் தேதி இரவு 7.15 மணிக்குத்தான் எனது கைக்கு கிடைத்தது. எனவே தான் இப்போது அவசரமாக இந்த மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். வரும் 2-ந் தேதி இந்த சம்மன் அடிப்படையில் செசன்ஸ் கோர்ட்டில் ஆஜராக எனக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

செசன்ஸ் கோர்ட்டில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். என்மீது அவதூறு வழக்கு தொடர சென்னை மாநகர அரசு வக்கீலுக்கு அதிகாரம் அளித்து கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று கோரியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X