"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா!
கோவை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துள்ளது. தவெக ஆட்சிக்கு வந்த 3 வாரங்களிலேயே அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்தும், அமைச்சர்கள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஆய்வு என்கிற பெயரில் போட்டோ சூட் நடத்தி, சமூகவலைதளங்களில் ரீல்ஸ் பதிவேற்றுவதாக புகார்கள் கூறப்படுகின்றன. போட்டோ மற்றும் வீடியோக்களில் இடம் பெறுவதற்காக எல்லாம் ஆய்வு செய்ய மாட்டேன் என்று அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் கோவை மாவட்டத்தில் போதை பொருட்கள் பழக்கத்தை தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதைத் தடுப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக டாஸ்மாக் பணியாளர்களிடம் பேசி கால அவகாசம் நிர்ணயித்துள்ளோம்.

போதையில் தமிழகம்
ஜூன் மாதம் இறுதிக்குள் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதில் அரசு மாற்றி, மாற்றிப் பேசுவதாகக் கூறப்படுவது உண்மையல்ல. இந்தப் பிரச்சனையை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர அரசு முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறது. பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு அறிவிப்புகள் வரவில்லை என்று கூறுகிறார்கள். அதற்கான அறிவிப்புகள் ஒவ்வொருவருக்கும் முறைப்படி அனுப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அரசு அறிவித்தபடி முதல்கட்டமாக 461 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
எந்தெந்த ஊர்களில், எவ்வளவு கடைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறித்த முழுமையான பட்டியல் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். தற்போதைய புதிய அரசின் வழிகாட்டுதலின்படி, அதற்கான புதிய பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் அறவே இருக்கக்கூடாது என்பதே முதலமைச்சரின் உறுதியான உத்தரவாகும். போதைப்பொருள் இல்லாத உண்மையான தமிழ்நாட்டை உருவாக்குவதே நமது அரசின் இலக்கு.
சட்டப்படி நடவடிக்கை
குறிப்பாக கோவை மாவட்டத்தில் கூட போதைப்பொருட்கள் புழக்கம் ஒரு சதவீதம் கூட இருக்கக்கூடாது என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த தலைமுறையைக் காப்பாற்றி, அவர்களை ஆரோக்கியமான தலைமுறையாக உருவாக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் லட்சியம். அதற்காக மிகவும் தீவிரமான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். என்னுடையது மிகப்பெரிய துறை. நான் எனது துறையை முழுமையாகக் கற்றுக்கொண்டு வருகிறேன்.
தற்போது டாஸ்மாக் துறை குறித்து முழுமையாகத் தெரிந்து வைத்துள்ளேன். இனி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட மற்ற பிரிவுகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். நான் முதலமைச்சரைப் பின்பற்றி அவர் வழியில் செல்பவன். வெறுமனே புகைப்படம் மற்றும் வீடியோக்களில் இடம்பெற வேண்டும் என்பதற்காக நான் திடீரென எந்த இடத்திற்கும் ஆய்வுக்குச் செல்ல மாட்டேன். நான் ஒரு இடத்திற்கு நேரில் செல்கிறேன் என்றால் அங்கு தவறு நடந்தால் சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications