For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லஷ்கர் தலைவர் கைது - சென்னை இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி!

By Staff
Google Oneindia Tamil News

Omar Madni
டெல்லி: மிகப் பெரிய சதித் திட்டத்துடன் டெல்லிக்குள் ஊடுறுவிய லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முகம்மது உமர் மத்னி என்கிற தீவிரவாதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிக்க மத்னி திட்டமிட்டிருந்த திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு டெல்லியில் உள்ள குதுப்மினார் அருகே இவரை போலீசார் பிடித்தனர். இந்தியா மற்றும் நேபாளத்தில் கடந்த சில ஆண்டுகளாக லஸ்கர்-இ-தொய்பா இயக்கத்தை நடத்தி வந்த மத்னியை போலீசார் தேடி வந்தனர்.

மத்னியிடமிருந்து ஒரு டைரி, நேபாள நாட்டில் எடுக்கப்பட்ட டிரைவிங் லைசென்ஸ், அடையாள அட்டை, நேபாள நாட்டின் போலி ரூபாய் நோட்டுகள் ரூ.50 ஆயிரம், 8 ஆயிரம் அமெரிக்க டாலர் நோட்டுகளும், இந்திய ரூபாய் நோட்டுகள் ரூ.50 ஆயிரமும் கைப்பற்றப்பட்டன.

50 வயதான மத்னி, பீகாரை சேர்ந்த பட்டதாரி என்பது தெரிய வந்து இருக்கிறது. இவருக்கு 4 சகோதரர்கள் இருக்கிறார்கள். மத்னி, 1997 மற்றும் 1998-ம் ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு இரு முறை சென்று பயிற்சி பெற்றவர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

மற்றொரு தகவல் அவர் பாகிஸ்தானை சேர்ந்தவன் என்றும் கூறுகிறது. ஜமாத்-உத்-தவா (லஷ்கர் இ தொய்பா அமைப்பின் புதிய முகமூடி) அமைப்பின் தலைவரும் லஷ்கரை நிறுவியவருமான ஹபீஸ் சயீத்தின் உதவியாளராக செயல்பட்டு வந்தார் என்றும் அத்தகவல் கூறுகிறது. அதுகுறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நேபாள நாட்டில் இருந்து கொண்டு, மத்னி தனது தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். நேபாளத்தில் இருந்து அலிகார் வந்து, அங்கிருந்து டெல்லிக்கு வந்துள்ளார் மத்னி. இதற்கான ரயில் டிக்கெட் பிடிபட்டுள்ளது.

மத்னி கைது குறித்து டெல்லி இணை போலீஸ் கமிஷனர் பி.என்.அகர்வால் கூறுகையில்,

கைதான மத்னியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டோம். மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமான, பாகிஸ்தானில் இருக்கும் ஜமாத்-உத்-தவா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத்துடன் அவனுக்கு, கடந்த 9 ஆண்டுகளாக நெருக்கமான தொடர்பு இருப்பது உறுதிபட்டு இருக்கிறது.

கடந்த 6 மாதமாக வீட்டு காவலில் இருந்த ஹபீப் சயீத், பாகிஸ்தான் கோர்ட்டு உத்தரவு படி, சமீபத்தில் வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜமாத்-உத்-தவா இயக்கத்தை சேர்ந்த ஜகீ-உர்-ரகமான், மொகமது யாகூப் ஆகியோரிடமும், மத்னிக்கு தொடர்பு உண்டு. தீவிரவாத இயக்கத்துக்கு தேவையான சில கம்ப்யூட்டர் நிபுணர்களை தேடி அவன் டெல்லி வந்து இருக்கிறான்.

சென்னை இளைஞர்களுக்கு பயிற்சி...

சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களைச் சேர்ந்த, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற பட்டதாரி இளைஞர்கள் தலா 2 பேர் வீதம், மொத்தம் 8 பேரை தேர்ந்தெடுத்து, தீவிரவாத பயிற்சிக்காக பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க மத்னி திட்டமிட்டு இருந்தான்.

திறமையான இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை பாகிஸ்தானில் உள்ள லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாத பயிற்சி முகாம்களுக்கு அனுப்பி பயிற்சி பெற வைத்து, பிறகு அவர்களை இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடத்த பயன்படுத்துவதுதான், மத்னிக்கு அளிக்கப்பட்ட பணி.

இதற்காக அவன் அந்தந்த ஊர்களில் இருந்து வந்த சிலரை டெல்லியில் சந்திக்க இருந்தான். தேர்ந்து எடுக்கப்படுபவர், நன்றாக படித்த இளைஞராகவும், நல்ல உடல் நலத்துடனும் இருக்க வேண்டும் என்பது அவனது இயக்கத்தின் உத்தரவு.

பட்டாசு தொழிற்சாலைகளில் தற்போது வேலை பார்த்து வரும் சிலரை, தங்கள் இயக்கத்துக்காக வெடி பொருள் தயாரிக்கும் பணியில் பயன்படுத்தவும், அதற்கான சரியான நபரை தேர்ந்து எடுக்கவும் அவன் திட்டமிட்டு இருந்தான். ஜார்கண்ட் மாநிலத்தை, இதற்காக அவர்கள் தேர்ந்து எடுத்து வைத்து இருக்கிறார்கள்.

மேலும், கேரளா மற்றும் கொங்கன் கடற்கரை பகுதியில் இருந்து, படகுகளை நன்கு செலுத்தும் திறமை கொண்ட சிலரை தேர்ந்து எடுக்க வேண்டும் என்பதும் அவனது நோக்கங்களில் ஒன்று.

காஷ்மீரில் ஸ்ரீநகருக்கு பணம் எடுத்துச் செல்வதற்காக ஜம்முவைச் சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்கும் பணியிலும் அவர் ஈடுபட்டிருந்தான்.

நேபாள நாட்டின் லஸ்கர்-இ-தொய்பா தலைவராக செயல்பட்ட இவன் அங்கிருந்தபடி, அந்த நாட்டின் எல்லை வழியே, ஆக்கிரமிப்பு பாகிஸ்தானுக்கு 30 பேரை தீவிரவாத பயிற்சிக்காக அனுப்பி இருக்கிறான்.

நேபாளத்தில் பாசறைகள்...

இப்படி அனுப்பப்பட்டவர்களில் ஒருவரான கமால் அன்சாரி என்பவன், மும்பை ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளான். நேபாளத்தில் முகமது உமர் மத்னி 3 பயிற்சி பாசறைகளை அமைத்து இருக்கிறான்.

நேபாள நாட்டு குடியுரிமை பெற்று இருக்கும் இவன், இந்தி, உருது, அராபிக், ஆங்கிலம், வங்காள மொழி, நேபாள மொழி ஆகியவற்றை பேசும் திறன் பெற்றவன்.

நேபாள வங்கிகளில் இவன் பல கணக்குகள் வைத்து இருந்தான். இதன் மூலம் அவன் பாகிஸ்தானுக்கு பணம் அனுப்புவது, அல்லது அங்கிருந்து பணம் பெறுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டான். தனது தீவிரவாத நடவடிக்கைகளை மறைப்பதற்காக, ஒரு டிராவல்ஸ் நிறுவனமும் தொடங்கினான். அவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட டைரியில் உருது மொழியில் சங்கேத குறிப்புகள் எழுதப்பட்டு உள்ளன. இதுபற்றி ஆய்வு செய்கிறோம்.

மத்னியின் தம்பி ஹபீப் மொகமது ஜுபேர் (40) கத்தார் நாட்டில் இருக்கிறான். அவனும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் தொடர்பு கொண்டவன் என்று அவர் கூறியுள்ளார்.

கைதான மத்னி உடனடியாக டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை போலீஸ் காவலில் அனுமதிக்கக் கோரி மனு செய்யப்பட்டது. இதையடுத்து வருகிற 19ம் தேதி வரை வைத்து விசாரிக்க போலீஸாருக்கு கோர்ட் அனுமதி அளித்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X