கச்சத்தீவில் இலங்கை ராணுவ முகாம் - கண்காணிக்க கருணாநிதி கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: இலங்கை கடற்படை கச்சத்தீவில் மையம் அமைக்கவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து மத்திய அரசு கவனிக்க வேண்டும். இதுதொடர்பாக தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியம் என முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில், புலிகள் மீண்டும் தலை தூக்கி விடாமல் தடுக்கும் முயற்சிகளில் இலங்கைப் படைகள் இறங்கியுள்ளன.

இதன் ஒரு முயற்சியாக கச்சத்தீவில் கடற்படை தளத்தை அமைக்க இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை கச்சத்தீவுக்கு அருகே சென்று மீன் பிடித்துத் திரும்பிய தமிழக மீனவர்களும் உறுதி செய்துள்ளனர்.

கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம் அமைந்தால் அது ஒட்டுமொத்த தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்து விடும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், முதல்வர் கருணாநிதி இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது:

மாநில அரசு பல்வேறு முறை கேட்டுக்கொண்டும், இந்திய அரசுக்கு இலங்கை அரசு பலமுறை உறுதியளித்த நிலையிலும் இலங்கை கடற்படை ராணுவத்தினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது என்பது தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு நிலைமையாக உள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு வருத்தத்துடன் கொண்டு வருகின்றேன்.

உங்களின் கனிவான பார்வைக்கு சில நிகழ்வுகளை தெரிவித்து அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கின்றேன்.

மீன்களின் இனப்பெருக்கத்திற்கு பாதகம் ஏற்படக்கூடாது என்பதற்காக, இயந்திரப்படகுகளுக்கும், சாதாரண படகுகளுக்கும் ஆண்டுதோறும் குறிப்பிட்டு சில கால கட்டங்களில் மீன் பிடிக்கக் கூடாது என்று தமிழக அரசு விதித்திருந்த தடையானது 2009-ம் ஆண்டு மே மாதம் 29-ந் தேதியுடன் முடிவடைந்தது.

அந்த காலகட்டங்களில் இலங்கையில் உள்ள அரசியல் நிலைமை மாறுதலடைந்துள்ளது என்பதால், எவ்வித சிரமமுமின்றி அமைதியாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தை சீர் செய்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ராமேசுவரம் பகுதி வாழ் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

ஆனால் அவர்கள் அதிர்ச்சியுறும் வகையில், இலங்கை கடற்படையினர், தொடர்ந்து தமிழக அப்பாவி மீனவர்களை கடுமையாக தாக்கி வருகின்றனர்.

தமிழக மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை அபகரித்தும், நடுக்கடலில் வழி மறித்து அவர்களை கடுமையாக தாக்கியும், துன்புறுத்தியும் வருகின்றனர்.

இம்மாதம் 9-ந் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் இரண்டு படகுகளை கைப்பற்றி, அதிலிருந்த 9 மீனவர்களை பிடித்துச் சென்று, தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அங்கே அவர்கள் ரிமாண்டில்' வைக்கப்பட்டுள்ளனர்.

மாநில மற்றும் மத்திய அரசுகளின் தீவிர முயற்சியின் காரணமாக தூதரக மட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அவர்கள் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.

அண்மையில், இம்மாதம் 15-ந் தேதி, ராமேசுவரம் மீனவர்கள் கச்சத்தீவிற்கு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது, அவர்கள் இலங்கை கடலோர காவல் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, அவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களின் மீன்பிடி வலைகளையும், பிடிபட்ட மீன்களையும் கைப்பற்றி உள்ளனர். அதன் பிறகு அவர்கள் துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு படகு, பதிவு எண் டி.என்/10/எம்எப்பி/660 என்ற படகு, கடுமையாக தாக்கப்பட்டு மோசமாக சேதாரப்படுத்தப்பட்டு, அதில் இருந்த மீனவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மூழ்கடிக்கப்பட்டது.

இன்னொரு படகு, பதிவு எண் டி.என்/10/எம்எப்பி/573 என்ற படகும் மோசமாக சேதாரப்படுத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த இரு சம்பவங்களிலும் யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

இந்த சம்பவங்கள், உண்மையிலேயே ராமேசுவரம் பகுதி மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பதோடு, அவர்கள் பாதுகாப்பற்ற நிலையிலும், உதவி பெற முடியாத நிலையிலும் ஒரு வித அச்சத்திலும் இருந்து வருகின்றனர்.

இதுவும் தவிர, இலங்கை ராணுவத்தினர் கச்சத்தீவு பகுதியில் ராணுவ மையத்தையும், கண்காணிப்பு கோபுரத்தையும் அமைக்க விரும்பி அதற்காக திட்டமிட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது.

இலங்கை கடற்படையினரின் தன்னிச்சையான இந்த நடவடிக்கை மாநில அரசுக்கும், மீனவர்களுக்கும் பெருத்த வருத்தத்தை அளித்துள்ளது. இலங்கை கடற்படையின் அத்தகைய நடவடிக்கை, இந்திய அரசின் நிறுவனங்களால் கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்திய அரசும், இலங்கை அரசும் 26.10.2008 அன்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி சர்வதேச கடல் எல்லையை தாண்டும் இருநாட்டு மீனவர்களும் அமைதியாக, எவ்வித பாதிப்பிற்கும் உள்ளாகாதவாறு நடைமுறை ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், அவர்கள் மீன்பிடி பணியை மேற்கொள்ளவும் அந்த ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், கச்சத்தீவு பகுதியில், இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்பான சம்பவங்களை அறியும் போது அது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றது.

எனவே, தூதரக அளவில் ஒப்புக்கொண்ட முடிவுகளை எந்த வகையிலும் மீறக்கூடாது என்றும், மீனவர்களை தாக்கக் கூடாது என்றும் இலங்கை அரசுக்கு தெரிவிக்க உங்களை கேட்டுக் கொள்கின்றேன்.

இத்தகைய பதற்றமான பிரச்சினையில் மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது என்பதால், உடனடியாக இலங்கை அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்று அவர் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+