இது தான் நிர்வாகமா?-சட்டசபையில் விஜய்காந்த்!
சென்னை: எங்களை போன்ற எம்எல்ஏக்கள் கூறியும் எந்த நடவடிக்கை எடுக்காதது தான் இந்த அரசின் நிர்வாகமா? என்று சட்டசபையில் கேள்வி எழுப்பினார் தேமுதிக தலைவரான நடிகர் விஜயகாந்த்.
சட்டசபையில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய அவர்
தமிழ்நாட்டில் இன்று மின்சாரம் எப்போது வரும், போகும் என்றே தெரியவில்லை. மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தங்கு தடையின்றி வோல்டேஜ் குறையாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
என்னுடைய விருத்தாசலம் தொகுதியில் கோ. பூவனூரில் உள்ள துணை மின் நிலையம் எரிந்து 10 நாட்கள் ஆகியும் இன்னும் சரி செய்யப்படவில்லை. இதனால் அந்தப் பகுதியில் உள்ள 22 கிராமங்களில் மின்சாரம் இல்லாத நிலை.
அங்குள்ள மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. மாணவ- மாணவிகள் படிக்க முடியவில்லை. விவசாயம் பார்க்க முடியவில்லை.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டசபையில் நான் பேசியபோது விருத்தாசலம் பகுதியில் உள்ள மின்சார கம்பிகளையும், துணை மின் நிலையங்களையும் புதுப்பிக்குமாறு கூறினேன்.
இதே பூவனூர் துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மர்களின் திறன் அளவை உயர்த்த வேண்டும் என்றேன். மின்துறை அமைச்சருக்கும் இதை தெளிவாகப் பட்டியலிட்டு கடிதமும் அனுப்பினேன்.
இதற்கு செப்டம்பர் மாதம் கடலூர் கண்காணிப்பு என்ஜினீயர் எனக்கு பதில் அனுப்பினார். டிரான்ஸ்பார்மர்கள் திறனை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை.
எங்களை போன்ற எம்எல்ஏக்கள் கூறியும் எந்த நடவடிக்கை எடுக்காதது தான் இந்த அரசின் நிர்வாகமா?
என் தொகுதியில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமே மக்கள் மின்தடை காரணமாக அவதிப்படுகின்றனர்.
இலவச கலர் டி.விக்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்கப்படுகிறது. ஆனால் மின் வெட்டு காரணமாக இந்த இலவசங்களால் எந்த பயனும் இல்லை. மின்சார தேவை முயல் வேகத்தில் ஏறுகிறது. ஆனால் உற்பத்தி திட்டங்கள் ஆமை வேகத்தில் நடக்கின்றன.
வரும் மார்ச் மாதம் வரை மின்சாரத் தேவை 10,400 மெகா வாட். ஆனால், உற்பத்தி 6,300 மெகா வாட் அளவுதான் இருக்கும் என்கிறார்கள். இந்தப் பற்றாக்குறையை அரசு எப்படி சரி செய்ய போகிறது?.
2012ம் ஆண்டு வரை மின் பற்றாக்குறை தீராது என்று சொல்கிறார்கள். இது உண்மையா? நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கு தர வேண்டும். இல்லை என்றால் மத்திய அரசு நெய்வேலி அனல் மின் உற்பத்தி நிலையங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதை தமிழக அரசு வற்புறுத்த வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த ஆண்டு ரூ. 6,500 கோடி நஷ்டத்தில் உள்ளதாக கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதைக் காரணம் காட்டி தேர்தல் முடிந்து விட்ட காரணத்தால் மின்சார கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்றார் விஜய்காந்த்.












Click it and Unblock the Notifications