இலங்கைக்கு ஐஎம்எப் 'நாமம்'?-இந்தியா உதவும்??
கொழும்பு: தமிழினப் படுகொலையை வெற்றிகரமாக நடத்தி முடித்து விட்டு, போரினால் இடம் பெயர்ந்த 3 லட்சம் தமிழர்களை இப்போதைக்கு மறு சீரமைக்க முடியாது என்று கூறி வரும் இலங்கைக்கு சர்வதேச நிதியம் கடன் உதவி அளிக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளன. இதனால் எதிர்பார்த்த ரூ. 1900 கோடி கடன் உதவி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், சர்வதேச நிதியம் கைவிட்டாலும் கூட இந்தியா தனக்கு நிதியுதவி அளிக்கும் என இலங்கை கூறி வருகிறது.
புலிகளுக்கு எதிரான போர் என்று கூறிக் கொண்டு பல்வேறு நாட்டு உதவியுடன் லட்சக்கணக்கான தமிழர்களை அழித்தொழித்து விட்டது இலங்கை. இதற்கு அமெரிக்கா, ஐ.நா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், மனித உரிமை அமைப்புகள், உலகத் தமிழர்கள் பெரும் கண்டனக் குரல் எழுப்பியும் அதைக் கண்டு கொள்ளாமல் தனது பணியை செம்மையாக முடித்து விட்டு தமிழர்களின் செந்நீரின் மீது அமர்ந்திருக்கிறது இலங்கை.
இந்தக் கையோடு சர்வதேச நிதியத்திடம் ரூ. 1900 கோடி கடனுதவியையும் அது கோரியது. ஆனால் பேரினப் படுகொலையை நடத்தியுள்ள இலங்கைக்கு இப்போது இவ்வளவு பெரிய கடனுதவியை வழங்கக் கூடாது என சர்வதேச நிதியத்திற்கே பெருமளவில் நிதி வழங்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
இதனால் கேட்டபடி இலங்கைக்கு கடன் உதவி கிடைக்காது என்று கூறப்படுகிறது.
மேலும், கடன் உதவி தேவை என்றால் உங்கள் நாணய மதிப்பை குறைக்க வேண்டும் என இலங்கைக்கு நிபந்தனை போட்டது சர்வதேச நிதியம். இதை இலங்கை அரசு ஏற்கவில்லை.
மாறாக நிதி கேட்டு யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டோம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திமிராக பதிலளித்தார்.
இதன் காரணமாக சர்வதேச நிதியத்தின் கடனுதவி கிடைக்குமா என்பதில் பெரும் சந்தேகம் எழுந்துள்ளது.
இருப்பினும், சர்வதேச நிதியத்திடம் கேட்டதற்கு சமமான கடன் தொகையை தர இந்தியா சம்மதித்துள்ளதாக இலங்கை அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இலங்கை அரசிடம் இந்தியா ஏற்கனவே உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து இந்தியத் தரப்பில் இதுவரை பதில் ஏதும் இல்லை.
இலங்கையின் புதிய நன்கொடையாளர் அணி:
இதற்கிடையே ஜப்பான், ஐரோப்பிய யூனியன், நார்வே உள்ளிட்ட நாடுகள் அடங்கிய தற்போதைய நன்கொடையாளர் நாடுகளின் கூட்டணியை உதறி விட்டு, இந்தியா, சீனா உள்ளடங்கிய புதிய நன்கொடையாளர் கூட்டமைப்பை ஏற்படுத்தப் போகிறதாம் இலங்கை அரசு.
இலங்கைக்கு தற்போது ஜப்பான், ஐரோப்பிய யூனியன், நார்வே போன்ற நாடுகள் நிதியுதவி செய்து வருகின்றன. இந்த நாடுகளுக்கு நன்கொடையாளர் நாடுகள் (Donor Countries) என்று பெயர்.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகள், நார்வே போன்றவை, புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் போரின்போது இலங்கைப் படையினரின் இனப்படுகொலையை கடுமையாக கண்டித்து வந்தன.
ஜப்பான் அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் போகாமல் நடுநிலை என்ற பெயரில் எதுவும் பேசாமல், அமைதியாக இருந்து வந்தது.
இந்த நிலையில், தற்போது போர் முடிந்து விட்டதால் நான்கொடையாளர் நாடுகள் என்ற ஒன்றே தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதாம் இலங்கை. இந்த முடிவுக்கு அது வர முக்கிய காரணம், தனக்கு எதிராக திரண்ட ஐரோப்பிய யூனியனை அணியிலிருந்து நீக்குவதே.
இந்த அணியை நீக்கி விட்டு, தனக்கு சாதகமாக இருக்கும் இந்தியா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள், புத்தமத நாடுகள் உள்ளிட்டவற்றுடன் புதிய கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாம் இலங்கை.
இந்தியாவும், சீனாவும் தனக்கு போட்டி போட்டுக் கொண்டு நிதியுதவி செய்யும், கடன் வழங்கும் என்ற எதிர்பார்ப்புடன் இலங்கை உள்ளதால், விரைவில் தற்போதைய நன்கொடையாளர் நாடுகள் கூட்டணியை அதிகாரப்பூர்வமாக இலங்கை கலைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications