For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கப்பலை திருப்பி அனுப்பினால் நம்பிக்கை துரோகம்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: மத்திய அரசிடம் உறுதி அளித்த பின்னரும் ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரணக் கப்பலை இலங்கை அரசு மீண்டும் திருப்பி அனுப்பினால் அது நம்பிக்கை துரோகமாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

தமிழக சட்டசபையில் இன்று இலங்கைத் தமிழர்களுக்கு ஐரோப்பா வாழ் தமிழர்களால் திரட்டி அனுப்பப்பட்ட 800 டன் உணவு, மருந்துப் பொருட்களை ஏற்றி வந்த நிவாரணப் கப்பலான வணங்காமண்ணை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது குறித்தும், இதில் மத்திய-மாநில அரசு அரசுகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

நிவாரணக் கப்பல் சென்னை துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டது என்ற செய்தி வந்ததும், ஐரோப்பிய வாழ் தமிழர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

கருணைத் தூது என்ற பெயரில் மே மாதம் 7ம் தேதி புறப்பட்ட இந்தக் கப்பல் இம் மாதம் 4ம் தேதியில் இருந்து 6ம் தேதி வரை இலங்கை பகுதியில் சோதனை செய்யப்பட்டு பின்னர் அதை திருப்பி அனுப்பி விட்டார்கள்.

அதன்பிறகு அந்தக் கப்பல் 12ம் தேதி சென்னை துறைமுகத்துக்கு அப்பால் 4 கடல் மைல் தொலைவில் நிறபத்தப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அதை சென்னை துறைமுகத்துக்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இருப்பினும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக கடந்த 19ம் தேதி நான் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினேன். அமைச்சர் பொன்முடி, மத்திய அமைச்சர் ராசா மூலம் அதை வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் வழங்கி நிலைமையை விளக்கினோம்.

நேற்று மாலை கிருஷ்ணாவை இலங்கை அதிபரின் சகோதரர்கள் சந்திக்கிறார்கள் என்று தகவல் வந்ததும் அமைச்சர் ராசாவை தொடர்பு கொண்டு, அவர்கள் வரும் முன்பு கிருஷ்ணாவிடம் இந்தப் பிரச்சனை குறி்த்துப் பேசுமாறு கூறினேன்.

அதன்படி அவரும் கிருஷ்ணாவுடன் பேசினார். பின்னர் கிருஷ்ணா என்னுடன் பேசினார். நானும் நிலைமையை விளக்கினேன்.

இதற்கிடையே கிருஷ்ணாவை சந்தித்தபின் நிருபர்களிடம் பேசிய பாசில் ராஜபக்சே, ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் கெரிவித்தார்.

இதன் பின்னரும் அவர்கள் அந்தக் கப்பலை திருப்பி அனுப்பினால் அது கண்டிக்கத்தக்கது. அது நம்பிக்கை துரோகமாகும். இந்த நிவாரணப் பொருட்களை இலங்கைத் தமிழர்களுக்க் பெற நாம் தொடர்ந்து முயற்சி மேற்கொள்வோம்.

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நம்மிடையே ஆரம்பத்தில் இருந்தே ஒற்றுமை இல்லாததால் தான் இந்த நிலைமைகளுக்கு எல்லாம் காரணம். இனிமேலாவது நாம் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமின்றி எந்தக் கண்டத்திலும் வாழும் தமிழர்களுக்கும் உதவ நாம் ஒன்றுபட வேண்டும். கட்சி அரசியலுக்காகவோ தேர்தல் அரசியலுக்காகவோ இந்த ஒற்றுமையை நாம் கடைபிடிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.

இன உணர்வு அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றுபட தயாராக இருக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X