கத்தார்: கடலில் கப்பல் மூழ்கி 16 இந்தியர்கள் பலி
டோஹா: துபாயைச் சேர்ந்த சப்ளை கப்பல் ஒன்று கத்தார் அருகே கடலில் மூழ்கியது. இதில் 16 இந்தியர்கள் உயிரிழந்தனர். கேப்டன் உள்ளிட்ட ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் இந்தியர்கள் ஆவர்.
மொத்தம் 35 பேருடன் இந்த சப்ளை கப்பல் சென்று கொண்டிருந்தது. இன்று காலை 6.30 மணியளவில் டோஹா கால்வாய் அருகே கப்பல் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கவிழ்ந்தது.
உடனடியாக தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. கேப்டன் உள்ளிட்ட 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் பாலகிருஷ்ணன், ஜெய்சன் வர்கீஸ், அப்புராவ் ஆகியோர் இந்தியர்கள் ஆவார். மற்ற இருவரில் கேப்டன் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர். ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டவர்.
இந்தக் கோர விபத்தில் 16 இந்தியர்கள் பலியாகியுள்ளதாக தெரிகிறது.
சமீபகாலத்தில் கத்தார் கடல் பகுதியில் நடந்துள்ள மிகப் பெரிய விபத்து இது என்று கூறப்படுகிறது.
கடற்படை உள்ளிட்ட பல்வேறு படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
விபத்து குறித்து இந்தியத் தூதர் தீபா கோபாலன் வாத்வா கூறுகையில், மொத்தம் 19 இந்தியர்கள் கப்பலில் இருந்துள்ளனர். 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்ற 16 பேரும் உயிரிழந்திருக்கலாம் என கருதுகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications