For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிபிஎம் மீது ஜெ. கடும் பாய்ச்சல்: கூட்டணி 'பணால்'!

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தற்கு அதிமுக தான் காரணம் என்று குற்றம் சாட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்களவை தேர்தல் படுதோல்வியைத் தொடர்ந்து கொடநாட்டில் 'ரெஸ்ட்' எடுத்து வரும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அதிமுக தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்கள்வை பொதுத் தேர்தலின்போது, அதிமுக தன்னிச்சையாக செயல்பட்டதும், மத்தியில் மூன்றாவது மாற்று அரசை ஏற்படுத்துவது என்ற முடிவை பிரச்சாரத்தின்போது அதிமுக வலுவாக எடுத்துச் செல்லாததும் தான் மக்களவைத் தேர்தலில் மோசமான முடிவை சந்திக்கக் காரணமாக அமைந்தது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் குற்றம் சாட்டியிருப்பது வேதனைக்குரிய விஷயமாகும்.

நடந்து முடிந்த மக்களவை பொதுத் தேர்தலின்போது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அனைத்து கூட்டணிக் கட்சியினரையும் ஒருங்கிணைத்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்தார்.

அவரது சூறாவளி சுற்றுப் பயணத்தையடுத்து அதிமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என அனைத்துப் பத்திரிகைகளும், ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

இருப்பினும், ஆளும் திமுக அரசின் பண பலம், படை பலம், அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றின் காரணமாக திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுவிட்டது. இது தான் உண்மை நிலைமை.

உண்மை இவ்வாறு இருக்க, மத்தியில் மூன்றாவது மாற்று அரசை ஏற்படுத்துவது என்ற முடிவை தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக வலுவாக எடுத்துச்செல்லாதது தான் தோல்விக்குக் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருப்பது முற்றிலும் தவறான செய்தியாகும்.

2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அகில இந்திய அளவில் 69 இடங்களில் போட்டியிட்டு 43 இடங்களில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, 2009ம் ஆண்டு 81 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

குறிப்பாக, கேரளாவில் 14 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களையும், மேற்கு வங்காளத்தில் 32 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களையும் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியிருக்கிறது.

இதன்படி, அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பலத்த சரிவை சந்தித்திருக்கிறது. இந்தச் சரிவிற்குக் காரணம், மத்தியில் மூன்றாவது மாற்று அரசை ஏற்படுத்துவது என்ற முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே வலுவாக எடுத்துச் செல்லவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?.

அகில இந்திய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடைந்த தோல்விக்கு, அதிமுகவை குறை கூறுவது எப்படி பொருத்தமாக இருக்கும்?.

ஒரு குற்றச்சாட்டை மற்றவர்கள் மீது சுமத்துவற்கு முன்பு யோசித்துக் கூறுவது சிறந்தது. வெற்றி பெற்றால் அதற்குக் காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் என்று மார்தட்டிக் கொள்வதும், தோல்வி ஏற்பட்டால் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவதும், கூட்டணி தர்மத்திற்கு எதிரானது.

திரிபுராவில் 2 இடங்களில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாட்டில் 3 இடங்களில் போட்டியிட்டு, ஓரிடத்திலாவது வெற்றி பெற்றது.

மேற்கு வங்காளம், கேரளா, திரிபுரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைத் தவிர, ஆந்திரப் பிரதேசம், அஸ்ஸாம், அந்தமான் நிக்கோபர், லட்சத் தீவுகள், பிகார், குஜராத், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், கர்நாடகம் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒரிஸ்ஸா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. ஆனால், அந்த மாநிலங்களில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

கூட்டணி பலத்துடன் போட்டியிட்ட ஆந்திரப் பிரதேசம், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இந்த மாநிலங்களில் எல்லாம் வெற்றி பெறாததற்குக் கூட அதிமுகதான் காரணமா?.

இன்னும் சொல்லப் போனால், தன்னுடைய ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறது என்று சொல்வதற்கு ஒரு மாநிலம் வேண்டுமென்றால் அது தமிழ்நாடு மட்டும் தான்!.

இந்த உண்மை நிலையை மறந்து, அதிமுக மீது குற்றம் சுமத்தியிருப்பது விஷமத்தனமானது, நகைப்புக்குரியது, கேலிக்கூத்தானது, அரசியல் நாகரிகமற்றது.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதற்கு அதிமுகதான் முழு முதற் காரணம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் உணர வேண்டும்.

சேது சமுத்திரத் திட்டம் போன்ற சில பிரச்சனைகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் இருந்த நிலையிலும், அதிமுக தனது நிலைப்பாட்டை தன்னிச்சையாக முன்னெடுத்துச் சென்றது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது.

சேது சமுத்திரத் திட்டத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்பது தேர்தல் கூட்டணி அமைக்கும் முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்கு தெரியும். எனவே, இதைக் காரணம் காட்டி, இது தான் தேர்தல் முடிவுக்குக் காரணமாக அமைந்து விட்டதாகக் கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவின் போதும், வாக்கு எண்ணிக்கையின் போதும் நிகழ்த்தப்பட்ட ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் செயல்களை மக்கள் நன்கு அறிவர்.

எனவே, இந்தத் தேர்தல் தோல்விக்கு யார் காரணம் என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் மூலம் மார்க்சிஸ்ட்-அதிமுக இடையிலான கூட்டணி 'பணால்' ஆகியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X