For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

18ம் தேதி விமானங்கள் ஸ்டிரைக்!-அரசை மிரட்டும் தனியார் விமான நிறுவனங்கள்

By Staff
Google Oneindia Tamil News

Jet Airways
மும்பை: நஷ்டத்தைச் சமாளிக்க தங்களுக்கும் நிதிச் சலுகைகள் வேண்டும் என்றும் இல்லாவிட்டால் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதியிலிருந்து விமானங்களை இயக்குவதை நிறுத்தப் போவதாகவும் தனியார் விமான நிறுவனங்கள் மிரட்டல் விடுத்துள்ளன.

ஜெட் ஏர்வேஸ், கிங் பிஷர், ஸ்பைஸ்ஜெட், கோ ஏர், இண்டிகோ உள்ளிட்ட எட்டு தனியார் விமான நிறுவனங்கள் இந்த ஸ்ட்ரைக் மிரட்டலை அறிவித்துள்ளன.

அரசுத் துறைக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ரூ.5000 கோடி நஷ்டத்தில் தவிக்கிறது. பயணிகள் குறைந்தது, தனியார் விமான நிறுவனங்களின் போட்டிகளைச் சமாளிக்க முடியாமை போன்ற காரணங்களால் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது ஏர் இந்தியா. இதனால் அரசு இந்த நிறுவனத்துக்கு நிதியுதவி மற்றும் கடன்களை அளித்து கைதூக்கிவிடுகிறது.

அதே நேரம் தனியார் நிறுவனங்களும் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக புலம்புகின்றன. தங்களுக்கும் நிதிச் சலுகைகள் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

அரசு இந்த கோரிக்கையைக் கண்டு கொள்ளாததால், ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ளன. இதில், அரசு நிறுவனமான ஏர் இந்தியாவும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் இந்த அழைப்பு அறிவுப்பூர்வமானதல்ல என்று மறுத்துள்ள ஏர் இந்தியா நிர்வாகம், ஸ்ட்ரைக் நடைபெறும் நாளன்று பயணிகளுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதற்காக கூடுதல் விமானங்களை அனைத்து வழித்தடங்களிலும் இயக்கப் போவதாக அறிவித்துள்ளது.

அரசுக்கு எதிராக அரசு நிறுவனம் ஒன்றைத் தூண்டிவிடுவது கிரிமினல் குற்றத்துக்கு சமமானது என்று இவர்களுக்குத் தெரியாதா? என திருப்பிக் கேட்டுள்ளார் ஏர் இந்தியா இயக்குநர்களில் ஒருவர்.

இந்த ஸ்ட்ரைக் குறித்து கிங்பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையா கூறுகையில், "நிதி நெருக்கடியால் கஷ்டப்படும் நிறுவனங்களுக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் கைகொடுக்கின்றன. அந்த மாதிரி இங்கும் சலுகைகள் வேண்டும்" என்றார்.

இது அறிவீனம்...!

இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சக முதன்மை செயலாளர், "தனியார் விமான நிறுவனங்களுக்கு அரசு எப்படி உதவ முடியும்? அரசுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவுக்கு உதவவே ஆயிரம் முறை யோசித்துக் கொண்டிருக்கிறது அரசு. இதில் தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்த லாபங்களுக்காக, தங்கள் இஷ்டப்படி இயக்கும் விமான நிறுவனங்களுக்கு அரசு எதற்காக பெய்ல் அவுட் தரவேண்டும்.

அவர்கள் கோரிக்கை முட்டாள்தனமானதும் கூட. வெளிநாடுகளில் தனியார் நிறுவனங்களுக்கு பெயில் அவுட் தரும் அரசு, அந்த நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்கிறது. விஜய் மல்லையா போன்றவர்கள் அதற்குத் தயாரா...", என்றார் கோபத்துடன்.

மேலும், தனியார் விமான நிறுவனங்களின் எந்தக் கோரிக்கையையும் அரசு பரிசீலிப்பதாக இல்லை. அதற்கான அவசியமும் இல்லை என விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

எந்தக் காரணம் கொண்டும் மக்களின் பணத்தில் ஒரு சல்லிக் காசு கூட, தனியார் விமான நிறுவனங்களுக்கு சலுகையாகத் தரக்கூடாது என்றும், உலகிலேயே அதிக விமானக் கட்டணம் வசூலிப்பவை இந்திய தனியார் விமான நிறுவனங்களே என்பதால், இந்த நஷ்டம் அவற்றின் சொந்தப் பொறுப்பையே சாரும் என்றும் எதிர்கட்சிகள் இப்போதே கடுமையான நிலைப்பாட்டை அறிவித்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X