For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆக.15ல் 'விடுதலைப் பிரகடனம்' செய்யும் மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்!

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்: சித்திரவதை செய்யும் மனைவியரிடமிருந்து சுதந்திரம் பெறும் புதிய திட்ட நடவடிக்கையை ஆகஸ்ட் 15ம் தேதி சிம்லாவில் கூடி எடுக்கப் போவதாக மனைவியரால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்தியக் குடும்பங்களைக் காப்பாற்றுங்கள் என்ற அமைப்பின் தலைவர் அனில் குமார் பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நமது சுதந்திர தினம், மனைவியரின் கையில் சிக்கி சித்திரவதைக்குள்ளாகி வரும் கணவர்களுக்கு விடுதலை தரும் தினமாக அமைய வேண்டும்.

இதுதொடர்பான பிரகடனக் கூட்டம் சிம்லாவில் ஆகஸ்ட் 15ம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், நாடு முழுவதுமிருந்து 100 ஆண்கள் மற்றும் மனைவியரால் பாதிக்கப்பட்ட 30 ஆயிரம் கணவன்மார்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

தங்களை சித்திரவதைப்படுத்தும் மனைவியரிடமிருந்து எப்படித் தப்புவது என்பது குறித்தும், இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட்டு சுதந்திரம் பெறுவது எப்படி என்பது குறித்தும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது.

மகாராஷ்டிரா கணவர் பாதுகாப்பு சங்கம், உ.பி. கணவர்கள் பாதுகாப்பு சங்கம் மற்றும் கிறிஸ்ப் (Children's Rights Initiative for Shared Parenting) என்ற என்.ஜி.ஓ. அமைப்புடன் ஆகியவற்றுடன் இணைந்து நாங்கள் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

நான்கு அமைப்புகளும் இணைந்து, இந்தியாவில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்ற லட்சியத்துக்காக போராடி வருகின்றன.

பல சந்தர்ப்பங்களில், இந்திய சட்டம், ஆண்களுக்கு பாரபட்சமாகவே உள்ளது. நமது நாட்டு வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டம் முற்றிலும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பானதாக இருக்கிறது.

ஒரு தம்பதி விவாகரத்து பெறும்போது அவர்களின் குழந்தைகளை யார் வளர்ப்பது என்பதிலாகட்டும், வரதட்சணைக் கொடுமை புகார்களாகட்டும், இந்த சட்டம், பெண்களுக்கே சாதகமாக இருக்கிறது. ஆண்களின் கருத்துக்களையும், அவர்களின் உணர்வுகளையும் இந்த
சட்டம் பார்ப்பதே இல்லை.

நாங்கள் பெண்களை வெறுப்பவர்கள் அல்ல. இது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமைகள் வேண்டும் என்ற குரல் மட்டுமே.

நமது நாட்டில் கடந்த நான்கு ஆண்டுகளில் மனைவியரின் கொடுமைகளால் பாதிக்ப்பட்டு கிட்டத்தட்ட 1.2 லட்சம் கணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் உரிய தகவல்களை வைத்துள்ளது.

இது மிகவும் கவலைக்குரிய ஒன்று. பாதிக்கப்பட்ட கணவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். சித்திரவதை செய்யும் மனைவியர் தண்டிக்கப்பட வேண்டும்.

உண்மையில், கணவர்களால் கொடுமைப்படுத்தப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் மனைவியரை விட, மனைவியரால் கொடுமைக்குள்ளாகி தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கைதான் இரண்டு மடங்காக உள்ளது.

பெண்கள் மற்றும் சிறார் நலனுக்காக தனி அமைச்சகம் இருப்பது போல ஆண்கள் நலனுக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியான வரி விதிப்பு அமல்படுத்தப்பட வேண்டும். குழந்தைகளை வளர்ப்பது தொடர்பான சட்ட அம்சங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். வரதட்சணைக் கொடுமை சட்டம், பெண்கள் வன்கொடுமைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். விவாகரத்து செய்த தம்பதிகள் தங்களது குழந்தைகளை இணைந்து பராமரிக்க சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். இவை குறித்து சிம்லா மாநாட்டில் தீர்மானங்கள் கொண்டு வரவுள்ளோம்.

நாட்டில் பெருகி வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், திட்ட வடிவையும் சிம்லா மாநாட்டில் நாங்கள் திட்டமிடவுள்ளோம் என்றார்.

ஆனால் இக்காலத்து சூழ்நிலைகள்தான் பெண்களின் குண மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்கிறார் பெங்களூரைச் சேர்ந்த விமோச்சனா அமைப்பின் டோனா பெர்னாண்டஸ்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தக் காலத்துப் பெண்கள், இந்தியத் திருமணங்களின் கட்டுப்பாடுகளை பின்பற்ற மறுக்கிறார்கள்.

இந்தியத் திருமணம் என்பது மிகப் பெரிய ஒரு இடமாற்றமாக உள்ளது. அதுவரை பிறந்த வீட்டில் சுதந்திரமாக இருந்த பெண், நிரந்தரமாக புகுந்த வீட்டிற்கு இடம் பெயர வேண்டியுள்ளது.

பெண்கள்தான், அட்ஜெஸ்ட் செய்து கொண்டு போக வேண்டும் என்ற நிலை உள்ளது. ஆனால் பொருளாதார ரீதியில் சுய சார்பை கொண்டுள்ள இக்காலத்துப் பெண்கள் அதற்குத் தயாராக இல்லை. இதன் காரணமாக முரண்பாடுகள், முட்டல், மோதல் ஏற்பட்டு கருத்து வேறுபாடுகள் பெரிதாகி அது விவாகரத்து வரை போய் விடுகிறது என்கிறார் டோனா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X