For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெற்கு மாகாணத்திற்கு திடீர் தேர்தல்-ராஜபக்சே நடத்தும் 'கருத்துக் கணிப்பு'

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கையின் தெற்கு மாகாணக் கவுன்சிலுக்கு திடீர் தேர்தலை அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது, நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு எப்படி ஆதரவு இருக்கும் என்பதை அறிய ராஜபக்சே நடத்தும் கருத்துக் கணிப்பாக கருதப்படுகிறது.

தெற்கு மாகாணத் தேர்தலில் தனக்கு சாதகமாக முடிவு வந்தால் ராஜபக்சே நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு முன்கூட்டியே தேர்தலுக்கு உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நடக்கப் போகும் தெற்கு மாகாணம், ராஜபக்சேவின் சொந்த ஊர் உள்ளடங்கிய மாகாணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பிற மாகாணங்களுக்கு ஏற்கனவே தேர்தல் நடந்து விட்டது. தெற்கில் உள்ள யுவா மாகாணத்திற்கு வருகிற சனிக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. அன்றே, வடக்கில் உள்ள யாழ்ப்பாணம், வவுனியா நகராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

இவை முடிந்த பின்னர் தெற்கு மாகாணத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் துறை கூடுதல் ஆணையர் சுமனசிறி கூறுகையில்,தேர்தல் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இன்னும் ஒரு வாரத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கான தேதி அறிவிக்கப்படும் என்றார்.

தெற்கு மாகாணத் தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ராஜபக்சே உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்துள்ள வெற்றியால் சிங்களர்களிடையே அதிகரித்துள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி முன்கூட்டியே அதிபர் தேர்தலையும் நடத்தி விட ராஜபக்சே திட்டமிட்டு வருகிறார்.

2008ம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரை இலங்கையில் ஆறு மாகாணத் தேர்தல்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் கடைசியாக தெற்கு மாகாணத்திற்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. திங்கள்கிழமை மாலை தெற்கு மாகாணக் கவுன்சில் கலைக்கப்பட்டது.

தற்போதைய நாடாளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டுதான் தேர்தல் நடைபெற வேண்டும். அதேபோல 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ராஜபக்சேவின் பதவிக்காலம் உள்ளது.

ஆனால் அதிகரித்துள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, இரு தேர்தல்களையும் முன் கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளார் ராஜபக்சே.

சீனாவில் தூதரக ஊழியர்களை அதிகரிக்கும் இலங்கை

இதற்கிடையே, சீனாவில் உள்ள தனது தூதரக அலுவலகத்தில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

கொழும்பு வந்துள்ள சீனாவின் யுனான் மாகாண துணை ஆளுநர் காவோ பெங், இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமாவை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் பொகல்லகாமா செய்தியாளர்களிடம் கூறுகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பான உறவை மேலும் வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக சீனாவில் இலங்கை தூதரகத்தின் ஊழியர்களை அதிகரிக்கவும், புதிய துணைத் தூதரகங்களைத் திறக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஷாங்காய் நகரில் புதிய துணைத் தூதரகம் அமைக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து வருகிற அக்டோபர் மாதம் செங்க்டு நகரில் இன்னொரு துணைத் தூதரகம் அமைக்கப்படும்.

இலங்கை என்ற சின்ன நாட்டுக்கும், சீனா என்ற பெரிய நாட்டுக்கும் இடையிலான உறவு மிகவும் விசேஷமானது, சிறப்பானது.

இலங்கைக்காக சர்வதேச மற்றும் பன்னாட்டு அரங்குகளில் தொடர்ந்து உறுதியாக குரல் கொடுத்து வருகிறது சீனா. இலங்கையின் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களான, சாலை அமைப்பு, மின் வசதி உள்ளிட்டவற்றுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து, உதவியும் வருகிறது. இது பாராட்டுக்குரியது.

இதேபோல சீனாவிலிருந்து இலங்கைக்கு அதிகளவில் விமானங்களை இயக்க முன்வர வேண்டும் என சீனாவைக் கேட்டுக் கொள்கிறேன். இதற்குத் தேவையான உதவிகளை இலங்கை அளிக்கும் என்றார்.

விடுதலைப் புலிகளை மையமாக வைத்து தெற்காசியாவில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்தியாவும், சீனாவும் கடுமையாக மோதி வருகின்றன.

இரு நாடுகளும் இலங்கைக்கு மாறி மாறி உதவிகளை அள்ளித் தந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வலுவாக காலூன்றும் ஒரு முயற்சியாக, கடலோர நகரமான ஹம்பனோட்டாவில் துறைமுகம் ஒன்றை கட்டி வருகிறது சீனா. இந்த நகரம், ராஜபக்சேவின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X