For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களை சந்திக்கவே அஞ்சுகிறார் ஜெயலலிதா - ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீவைகுண்டம்: ஜெயலலிதாவுக்கு தேர்தல் என்றாலே பயம் வந்து விட்டது. மக்களை சந்திக்கவே அஞ்சுகிறார். தேர்தல் தோல்விகளை அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கினார்.

பழையகாயலில் பிரச்சாரத்தை தொடங்கி, தொடர்ந்து முக்காணி, உமரிக்காடு, வாழவவல்லான், ஏரல், சிறுத்தொண்டநல்லூர், சாயர்புரம், பெருங்குளம், சிவகளை, பேட்மாநகரம், பேரூர், திருப்புளியங்குடி சென்று ஸ்ரீவைகுண்டத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தினை முடித்தார்.

பிரசாரத்தின்போது ஸ்டாலின் பேசுகையில், தேர்தல் என்றால் பல கட்சிகள் பங்கேற்கும். இந்த தேர்தலில் சில கட்சிகள் பங்கேற்கவில்லை. ஏன் தேர்தலில் பங்கேற்கவில்லை என்பது உங்களுக்கே தெரியும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யார், யாருடன் கூட்டணி வைத்திருந்தார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருந்தன. இன்று அந்த கட்சிகளின் நிலை என்ன?

அதிமுக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஜெயலலிதா அறிவித்திருக்கின்றார். இந்த இடைத்தேர்தலில் மதிமுகவும், பாமகவும் போட்டியிடவில்லை. ஜெயலலிதா போட்டியிடவில்லை என்றவுடன், வைகோவும், ராமதாசும் போட்டியிடவில்லை.

ஜனநாயகத்தின் மாண்பைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஜனநாயகத்தைப் பற்றி கவலைப்படாத ஜெயலலிதாவா மக்களைப் பற்றி கவலைப்பட போகின்றார்.

ஜெயலலிதாவிற்கு தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம். மக்களை சந்திப்பதிலே பயம். ஆனால், கம்யூனிட்ஸ்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணியில் இன்று குழப்பம் ஏற்பட்டுள்ளது.

2004ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தல், அதனை தொடர்ந்து 2006ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல், தற்போது 2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் என்று இடையறாது தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்த ஜெயலலிதாவிற்கு இன்று தேர்தல் என்றாலே பயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் தோல்விகளை ஜீரணிக்க முடியாதவராக ஜெயலலிதா இருக்கிறார்.

ஆனால், தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாவிட்டாலும், மக்களின் நலனைப்பற்றி சிந்திப்பவர், தேர்தலில் தோற்றாலும், வெற்றி பெற்றாலும், அவர் தேர்தலில் போட்டியிட தயங்கியது கிடையாது. 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து தலைவரை முதல்வராகப் பொறுப்பேற்க செய்தீர்கள்.

தேர்தலின் போது அவர் வழங்கிய உறுதிமொழிகள் அத்தனையும் தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அப்போது அவர் வழங்கிய ஒரு கிலோ அரிசி 2 ரூபாய் என்பது தற்போது ஒரு ரூபாய்க்கே ஒரு கிலோ அரிசி வழங்கப்படுகிறது. விவசாயிகளின் கடன் ரூ.7 ஆயிரம் கோடியை ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்தவர் கருணாநிதி. ஏழை பெண்களின் திருமண உதவித் தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்குவேன் என்று அறிவித்திருந்தார், ஆனால் தற்போது, ரூ.20 ஆயிரமாக வழங்கிவருகிறார். கர்ப்பிணி பெண்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.6000 வழங்கிவருகிறார்.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கிராமபுறங்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும், தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. அதுபோல ஊரக வேலை வாய்ப்பு உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விவசாய தொழிலாளர் நல வாரியம் உட்பட 25க்கும் மேற்பட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியங்கள், 6 லட்சத்திற்கு மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சத்துணவில் வாரம் மூன்று முட்டைகள், கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ்பாஸ், தொழில் கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து.

சுமார் 4 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள். இத்தனைக்கும் மேல் ஒரு கோடி ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ரூ.517 கோடியே 30 லட்சம் செலவில் நிறைவேற்றப்பட்டுவருகிறது.

இப்படி எண்ணற்ற பல்வேறுத் திட்டங்கள் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக முதல்-அமைச்சர் கருணாநிதியால் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இந்த இடைத்தேர்தலில் முதல்வரின் கரத்தை பலப்படுத்தவும், அரசின் பல்வேறு திட்டங்களை நல்ல வகையில் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளவும், பல்வேறு அடிப்படைப்பணிகள் நிறைவேறவும், சோனியா காந்தியின் ஆதரவைப் பெற்ற, தலைவர் கருணாநிதியின் அன்பைப் பெற்ற வேட்பாளர் எம்.பி. சுடலையாண்டிக்கு கை சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை வழங்கி வெற்றிபெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.

இந் நிலையில் இன்று காலை தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற பனிமயமாதா ஆலயத் திருவிழாவில் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வந்திருந்தார். அங்கு நிருபர்களிடம் பேசிய ஸ்டாலின், வரும் இடைத் தேர்தலில் 5 இடங்களிலும் திமுக கூட்டணியே வெல்லும். ஸ்ரீவைகுண்டம் காங்கிரஸ் வேட்பாளர் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X