For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏதாவது காரணத்தைக் கூறி சட்டசபை தேர்தலையும் ஜெ. புறக்கணிக்கலாம் - ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

இளையாங்குடி: ஏதேதோ காரணத்தைக் கூறி 2011ல் நடைபெறவுள்ள சட்டசபை பொதுத் தேர்தலையும் கூட ஜெயலலிதா புறக்கணிக்கக் கூடும் என்று கூறியுள்ளார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்

இளையாங்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுப.மதியரசனை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

மக்களைப்பற்றி சிந்தித்து அவர்களுக்குதேவையான திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றும் ஆட்சி கலைஞர் ஆட்சி. இந்த இடைத்தேர்தலை அ.தி.மு.க புறக்கணித்துள்ளது. தமிழ்நாட்டை பற்றி ஜெயலலிதா கவலைப்படவில்லை.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு என்று பொய்யான குற்றச்சாட்டை கூறுகிறார். தேர்தல் கமிஷன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்தவித தில்லுமுல்லும் செய்ய முடியாது என்பதை பல முறை தெளிவுபடுத்தியும் ஜெயலலிதா மக்களை திசைத் திருப்புகிறார். ஜெயலலிதாவை தேர்தல் கமிஷன் நேரில் வர சொல்லியும், நேரில் சென்று இதுவரை குற்றச்சாட்டை நிரூபிக்கவில்லை.

ஜெயலலிதா எதிர்கட்சித் தலைவராக தனது ஜனநாயக கடமையை ஆற்றத் தவறி இருக்கின்றார். அரசியல் இயக்கம், அரசியல் கட்சி நடத்துவது என்பது அரசை ஆளுவதற்குமட்டுமோ, ஆளுங்கட்சியாக இருப்பதற்கு மட்டுமோ அல்ல.

மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடவும், மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும், அரசியல் அரங்கில் எதிர்கட்சியின் பணி முக்கியமானது. ஆனால், ஜெயலலிதா எதிர்கட்சியாக இருக்கின்ற போதும், தேர்தலில் தோல்வி அடைந்து விட்டாலும், அரசியல் அரங்கில் இருந்து முழுமையாக ஒதுங்கி விடுகிறார். ஜெயலலிதா சட்டமன்றத்திற்கும் வருவதில்லை. எதிர்கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து கொண்டு மக்களுக்காக எதையும் செய்வதில்லை.

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது மக்களை அடக்கி, ஒடுக்கி, கசக்கிப் பிழிந்தார். அரசியல் கட்சி நடத்துவது என்பது எப்போதுமே ஆளுங்கட்சியாகவே இருப்பதற்காக அல்ல. அரசியல் கட்சிகளின் முக்கிய கடமையே மக்கள் பணியும், சமூதாயத்திற்கு தொண்டு செய்வதும் ஆகும். ஆனால், ஜெயலலிதா தான் முதல்-அமைச்சராக இருந்தபோதெல்லாம் மக்கள் விரோத ஆட்சியையே நடத்தி இருக்கின்றார்.

உதாரணமாக ஏழை பெண்களுக்கு வழங்கப்படும் திருமண உதவி நிதியை தான் ஆட்சிபொறுப்பில் இருக்கும்போது எல்லாம் அறவே நிறுத்தி இருக்கிறார். 2 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தவர், 10 ஆயிரம் சாலைப் பணியாளர்களையும், 13 ஆயிரம்மக்கள் நலப்பணியாளர்களையும் பணி நீக்கம் செய்தவர் தான் ஜெயலலிதா. அதுமட்டும்அல்ல, மதமாற்ற தடைச்சட்டம், டெஸ்மா, எஸ்மா எனும் கொடும் சட்டங்களை மக்கள் மீது ஏவியவர். மக்கள் மீது அடக்குமுறையை அவிழ்த்துவிடும் எண்ணம் கொண்டவர் ஜெயலலிதா.

எதிர்கட்சி என்றால் அரசியல் அரங்கில் இருந்து ஒதுங்கி, பதுங்கி ஓய்வெடுப்பது தான் ஜெயலலிதாவின் வழக்கம்.தேர்தல் என்பது மக்கள் ஆட்சி தத்துவத்தின் அடிப்படை. மக்கள் நலனில், மக்களுக்காக பணிசெய்வதில் அக்கறை இல்லாத காரணத்தால் தான் ஜெயலலிதா இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளார்.

2011-ம் ஆண்டு வரகூடிய பொது தேர்தலிலும், தி.மு.க தான் வெற்றி பெறும் என்று ஜெயலலிதா பொது தேர்தலை புறக்கணித்தாலும், ஆச்சரியமில்லை.

தி.மு.க. வின் தொடர் வெற்றிக்கு கலைஞர் அரசின் தொடர் சாதனைகளும், மக்கள்நலத் திட்டங்களும் தான் காரணம். கலைஞர் அரசின் சாதனைகள் அடித்தட்டு மக்களையும் சென்றடைந்துள்ளது.

கலைஞர் முதல்-அமைச்சராக இருக்கும் போதெல்லாம், எண்ணற்றத் திட்டங்கள் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கை ரிக்ஷாக்களை ஒழித்தது. இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கியது, இறக்கும் அரசு ஊழியர் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கியது, குடிசை மாற்றுவாரிய திட்டம், பேருந்துகளை நாட்டுடைமையாக்கியது, தொழில் வளர்ச்சிக்காக சிப்காட் தொழில் வளாகங்களை ஏற்படுத்தியது, பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது, சுயஉதவிக் குழுக்களை உருவாக்கியது, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியது, அரசுவேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்தது, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, தமிழகம் எங்கும் டைடல் பூங்காக்களை உருவாக்கியது, சமத்துவபுரம், உழவர்சந்தைகள் ஏற்படுத்தியது, கிராமப் புறங்களுக்கு மினி பஸ் போக்குவரத்து, மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச கலர் டி.வி, தொழில் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு ரத்து, ஏழைப் பெண்கள் திருமண உதவித் தொகையாக ரூ. 20 ஆயிரம், கர்ப்பிணிபெண்களுக்கு ரூ. 6 ஆயிரம், முதியோர் உதவி தொகை இருமடங்காக உயர்த்தியது, தமிழகம் எங்கும் எண்ணற்ற மேம்பாலங்கள், தரமான தார்சாலைகள், கூட்டுக் குடிநீர் திட்டங்கள்என்று பல்வேறு தொடர் சாதனைகள் தான் தி.மு.க மற்றும் கலைஞர் அரசின் தொடர்வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

தொடர் சாதனைகளால் மக்களுக்காக தொடர்ந்து பல்வேறுத் திட்டங்களை செயல்படுத்திவரும், கலைஞரின் கரத்தை வலுப்படுத்தவும், இந்த நல்லாட்சிக்கு உறுதுணையாக இருந்து தி.மு.க வேட்பாளர் சுப.மதியரசனுக்கு பெரும் வெற்றியை தேடித்தரவும் உங்களை எல்லாம் அன்புடன், பாசத்துடன், உங்கள் வீட்டுப்பிள்ளையாக இருந்து கேட்டு கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X