For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பன்றிக் காய்ச்சல் - மேலும் ஒரு சிறுமி பலி - சாவு எண்ணிக்கை 10 ஆனது

By Staff
Google Oneindia Tamil News

Swine flu
சென்னை: பன்றிக் காய்ச்சலுக்கு இன்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் படு வேகமாக பரவி வருகிறது. இங்குதான் உயிரிழப்பும் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.

நேற்று மட்டும் இந்தியாவில் நான்கு பேர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளனர். புனேவில் இருவர், குஜராத்தில் ஒருவர், சென்னையில் சிறுவன் என உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

பலி எண்ணிக்கை 10ஆனது...

இந்த நிலையில் இன்று இரண்டு பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த சயதா தோஷிவாலா என்ற 63 வயதுப் பெண்மணி பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தார்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் திங்கள்கிழமை முதல் செயற்கைச் சுவாசத்தில் வைக்கப்பட்டிருந்தார். இன்று அவர் மரணமடைந்தார்.

இதேபோல குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள எஸ்.எஸ்.ஜி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்யா முரளி (13) என்ற சிறுமி இன்று உயிரிழந்தார். குஜராத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இறக்கும் 2வது நபர் ஆர்யா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே புனேவில்தான் அதிக அளவில் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. அங்கு மட்டும் இதுவரை 5 பேர் இறந்துள்ளனர். மும்பை மற்றும் தானேவில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மொத்தமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்து அகமதாபாத், வதோதரா, சென்னை ஆகிய நகரங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை புனேவைச் சேர்ந்த 13 வயது மாணவி ஸ்ருதி கவதே மற்றும் 35 வயதாகும் பார்மசிஸ்ட் சஞ்சய் திலேகர் ஆகியோர் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட் 7ம் தேதி முதல் சிறுமி ஸ்வாதி செயற்கை சுவாசத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

சென்னை பெண் பலியா?

இந்த நிலையில் இன்று அதிகாலை நாலரை மணியளவில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அடையாறைச் சேர்ந்த 29 வயதான டீனா ஜோசப் என்பவர் உயிரிழந்தார்.

கடும் காய்ச்சல் காரணமாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் பன்றிக் காய்ச்சலால் இறந்ததாக தகவல்கள் பரவின.

இதுகுறித்து விசாரித்தபோது அதை டாக்டர்கள் மறுத்தனர். டீனா ஜோசப் பன்றிக் காய்ச்சல் காரணமாக இறக்கவில்லை என்று டாக்டர்கள் கூறினர்.

இந்த சர்ச்சைக்கு மத்தியில் டீனா ஜோசப்பின் உடல் அவரது சொந்த ஊரான வந்தவாசிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

டீனா பன்றிக் காய்ச்சலால் இறந்ததாக செய்தி பரவியதால் அவரது வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் பீதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஜம்முவில் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு வெளியானதாக கூறப்படுகிறது.

பள்ளிகள், கல்லூரிகள் மூடல்..

புனேவில் பன்றிக் காய்ச்சல் மோசமான முறையில் பரவி வருவதால் நகர் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல திரையரங்குகள், வர்த்தக வளாகங்களையும் 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஆக உயர்ந்துள்ளது.

வேளச்சேரியில் பீதி...

சிறுவன் சஞ்சய் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தான். சஞ்சய் பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு இறந்ததைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளில் வசிப்போர் அனைவரும் மாஸ்க் அணிந்து நடமாடி வருகின்றனர்.

சஞ்சய் வசித்த அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ள பகுதியில் ஆள் நடமாட்டம் அடியோடு குறைந்து போய் விட்டது.

அந்தப் பகுதி வழியாக செல்வதை மக்கள் தவிர்த்து வருகின்றனர். வேளச்சேரி மக்கள் கிட்டத்தட்ட அனைவருமே முகத்தை மூடிக் கொள்ளும் மாஸ்க் அல்லது கர்ச்சீப்பால் முகத்தை மூடியபடியே நடமாடுகின்றனர்.
மாஸ்க்குகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

சஞ்சய் வீடு அருகே உள்ள கடைகள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்தோர் முகத்தை மூடியபடி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஸ்களைத் தடுத்த மக்கள்..

சஞ்சய் வீடு உள்ள சாலையில் பஸ்கள் செல்வது வழக்கம். ஆனால் மக்கள் பீதி காரணமாக பஸ்களை அந்த வழியாக செல்ல வேண்டாம் என டிரைவர்களை வலியுறுத்தியதன் பேரில் நேற்று அந்தப் பகுதி வழியாக பஸ்கள் செல்லவில்லை.

சஞ்சய் வசித்து வந்த வீட்டுக்கு அருகே வசித்து வரும் பலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேறு பகுதிகளில் உள்ள தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனராம்.

பல வீடுகளில் வேலைக்காரப் பெண்கள் கூட வர மறுத்து விட்டனராம்.

வேளச்சேரி மக்கள் இன்னும் சஞ்சய் மரணம் மற்றும் பன்றிக் காய்ச்சல் பீதியிலிருந்து விலகவில்லை. ஒரு விதமான பதட்டமும், இறுக்கமான சூழ்நிலையும் அங்கு காணப்படுகிறது.

1913-ல் தொடர்பு கொள்ளலாம்...

பன்றிக் காய்ச்சல் தொடர்பான சந்தேகங்கள், சோதனைகள் செய்து கொள்ள விரும்புவோர் சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள இலவச தொலைபேசி வசதியை 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பன்றிக் காய்ச்சல் வந்திருப்பதாக சந்தேகம் இருப்பதாக தெரிவித்தால் அவர்கள் சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுப்பார்கள் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

கர்ச்சீப் போதும்...

பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க முறையான மாஸ்க் கிடைக்காவிட்டாலும் கூட வெறும் கர்ச்சீப்பால் (கைக்குட்டை) கூட முகத்தை மறைத்துக் கொண்டால் போதுமானது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்ல சுத்தமான கைக்குட்டையால் மூக்குப் பகுதியையும், வாயாயையும் மறைக்கும் வகையில் கட்டிக் கொண்டால் போதும், வைரஸ் தாக்குதலைத் தடுக்கலாம் என்று மகாராஷ்டிர டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முக்கியக் காரணம், என்-95 என்ற மாஸ்க்கைப் பயன்படுத்தும்போது அவற்றை பின்னர் முறைப்படி அப்புறப்படுத்தி விட வேண்டியுள்ளது. அவ்வாறு செய்யாமல் கண்ட இடத்தில் தூக்கிப் போட்டு விட்டால், அதிலிருந்து வைரஸ் பரவம் அபாயம் உள்ளது.

அதேசமயம், மருத்துவமனைகளில் பயன்படுத்தும் இந்த என் -95 முகக் கவசமும் கூட முழுமையாக வைரஸ் தாக்குதலைத் தடுக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது என்று டெல்லி எய்ம்ஸ் டாக்டர் ஒருவர் கூறியுள்ளார்.

இது ஒரு தற்காலிக தடுப்பு நடவடிக்கையே தவிர நிரந்தரமானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

200 டாக்டர்களுக்குப் பயிற்சி

இதற்கிடையே, சென்னையில் இன்று டாக்டர்களுக்குப் பன்றிக் காய்ச்சல் நோயாளிகளை எவ்வாறு கையாளுவது என்பது குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

சென்னையைச் சேர்ந்த 200 டாக்டர்கள் இதில் கலந்து கொண்டனர்.

கிங் இன்ஸ்டிடியூட்டில் மக்கள் கூட்டம்...

இந்த நிலையில் பன்றிக் காய்ச்சல் பீதி காரணமாக சென்னை புறநகரைச் சேர்ந்த ஏராளமானோர் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு ரத்த மாதிரியைக் கொடுக்க வந்தவண்ணம் உள்ளனர்.

குடும்பம் குடும்பமாக முகக் கவசங்கள், கர்சீப் ஆகியவற்றைக் கட்டிக் கொண்டு அவர்கள் வருகின்றனர்.

அங்கு தங்களது ரத்த மாதிரியை பரிசோதனைக்கக் கொடுத்துச் செல்கின்றனர்.

கிங் இன்ஸ்டியூட்டில் ஒரே ஒரு கவுண்டர்தான் இருப்பதாகவும், மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருப்பதால் நான்கு அல்லது ஐந்து கவுண்டர்கள் வைக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என இங்கு வருவோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X