சிதம்பரம் கோவில் வழக்கு-சு.சுவாமிக்கு அனுமதி
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு செயல் அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தீட்சிதர்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள அப்பீல் வழக்கில் தன்னையும் ஒருவராக சேர்க்க வேண்டும் என்று கோரியிருந்த ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமிக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு செயல் அதிகாரியை நியமித்து தமிழக அரசு 1987-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சிதம்பரம் நடராஜர் ஆலயத்துக்கு செயல் அதிகாரியை நியமித்தது செல்லும் என்று உயர்நீதிமன்றம் 05.02.09-ம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தீட்சிதர்கள் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரி சுவாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை தாக்கல் செய்ய வந்தபோதுதான் அவர் மீது வக்கீல்கள் தாக்குதல் நடத்தினர். அதற்கு அடுத்த நாள் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும், உயர்நீதிமன்ற வளாகத்தில் பெரும் மோதல் மூண்டது என்பது நினைவிருக்கலாம்.
சுவாமியின் இந்த மனு நீதிபதிகள் ரவிராஜ பாண்டியன், டி. ராஜா ஆகியோர் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலன், சிதம்பரம் நடராஜர் ஆலயம் தனிப்பட்ட சமுதாயத்துக்கு சொந்தமானது. இதை அரசு தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று வாதாடினார்.
வழக்கு விசாரணையின் போது சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் எழுத்துப் பூர்வமான வாதத்தை சமர்ப்பிக்க அவருக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.
கடந்த பிப்ரவரி 19ம் தேதி உயர்நீதிமன்றக் கலவரம் நடந்தது. அதன் பின்னர் சுவாமி உயர்நீதிமன்றத்திற்கே வரவில்லை. இந்த நிலையில் நேற்று முதல் முறையாக அவர் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications