• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆனாவுக்கு ஆனா போட்டால் அடுக்குச் சொல்லா?-கருணாநிதி கிண்டல்

By Staff
|

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விளம்பரத்தில், அடுக்குச் சொற்களைப் பயன்படுத்தியிருப்பதை முதல்வர் கருணாநிதி தனது பாணியில் கிண்டலடித்துள்ளார்.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

நூறாண்டுகள் நிறைந்து; நிறைந்த இந்த நூறாண்டும் முழுமையாக வாழ்ந்திடாமல்-ஆனால் அப்படி வாழ்ந்தவர்களை விட பல மடங்கு அதிகமான தாக்கத்தை நம் நெஞ்சில் பதித்து விட்டு மறைந்த பேரறிஞர் அண்ணாவுக்கு தமிழ் கூறும் நல்லுலகம் எங்கணும் விழா எடுத்து- அவர் வாழ்ந்த நாட்களில் அவரால் விளைந்த அற்புதங்களையெல்லாம் எண்ணிப் பார்க்கிறது. அவற்றுக்கும் அப்பாலே; அவர் காலத்தில் நமக்கும் தொடர்புடைய நிகழ்வுகள் பலவற்றை மறக்க முடியாமல், நினைந்து நினைந்து மகிழ்கிறோம்.

ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன், அவரைப் போல பேச வேண்டும்; அவரைப் போல் எழுதவேண்டும்; அடுக்குச் சொற்கள் தவழ வேண்டும்; அழகு தமிழ் கொழிக்க வேண்டும்; எனும் அவா கொண்டு; நாடக மேடை ஏறிய ஒரு "நல்ல தம்பி'' நடத்திக் காட்டிய நாடக நிகழ்ச்சியாகும்.

ஒருநாள் அண்ணாவின் இல்லத்தில் அவரோடு உரையாடிக் கொண்டிருந்த போது, அந்த நல்லதம்பி- அவர் எழுதி நடிக்கும் "மரணப் படுக்கை'' எனும் நாடகத்திற்கு அண்ணா தலைமை தாங்க வேண்டும் என்றும், நான் (கருணாநிதி) முன்னிலை ஏற்க வேண்டும் என்றும் எவ்வளவு வலியுறுத்த முடியுமோ அவ்வளவு வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

அமெச்சூர் நாடகங்களையும், தெருக் கூத்துக்களையும் காண்பதில் தனித்ததோர் ஆர்வம் கொண்ட அந்த எளிய மனிதராம், கலையுலக ஏந்தல், காஞ்சி தந்த பெர்னாட்ஷா அண்ணா, அந்த நாடகத்திற்கு தலைமை ஏற்க ஒப்புக் கொண்டு, "நீயும் வா முன்னிலை ஏற்க'' என்று என்னைப் பணித்தார். இருவரும் அந்த நாடகத்திற்குச் சென்றோம்.

நாடகத்தை எழுதி நடித்த நல்லதம்பி, தொடக்கம் முதல் அடுக்குச் சொற்களை கை வலிக்க, கழுத்து வலிக்க உரையாடல்களாக எழுதித் தள்ளியிருக்கிறார் என்பதை நானும் உணர்ந்தேன். நமது தலைவர் அண்ணாவும் உணர்ந்து வாய் விட்டுச் சிரிக்க வேண்டிய காட்சிகளிலே கூட மெல்லப் புன்னகை புரிந்தார். அது அவருடைய பண்பு.

மேடை நாகரிகம் கற்றவர் அல்லவா? எத்தனை மேடைகளில் கலகலவென சிரிக்க வேண்டிய கட்டங்களில் அவற்றை மறைத்து கமுக்கமாக தன்னுடைய ரசனையை வெளியிட்டிருக்கிறார் என்பதை அறியாதவனா நான்? இருப்பினும், அவராலேயே தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு அந்த நாடக வசனங்களைக் கேட்கக் கேட்க அவர் குலுங்கக் குலுங்க சிரித்த அந்தக் காட்சி இன்னமும் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. இப்போது ஏன் அந்த நினைவு உனக்கு வந்தது என்று கேட்கக் கூடும். ஏன் வந்தது என்பதைச் சொல்லுகிறேன்.

"பொசுங்கிய பொதுப்பணி துறை பொறுப்புகளை செய்யவும்! உலர்ந்த உள் துறை உயர்வாக விளங்கவும்! இருண்ட மின்சார துறையின் இருள் நீங்கிடவும்! சரிந்த சட்ட துறை சரித்திரம் காணவும் கடன்படும் கல்விதுறை கடமையை ஆற்றவும்! வறட்சி கண்ட வருவாய் துறை வரலாற்றில் இடம் காணவும்! விவசாயத்துறை வியப்பினை உருவாக்கவும்! அழிந்த அறநிலையத் துறையை அழிவிலிருந்து மீட்கவும்! சுருங்கிய சுகாதார துறையை சுற்றமும் போற்றிடவும்! தமிழக தலைமை செயலகத்தை தலை நிமிர செய்யவும்! யாரோ ஒருவர் தலைமையில் தமிழக அரசு உருவாகிட வேண்டும் என்று சபதம் ஏற்பதாக'' ஒரு பிறந்த நாள் விளம்பரம் ஏடுகளில் வெளி வந்திருக்கிறது.

இதைப் படித்த போது எனக்கு பழைய நாளில் நமது பகுத்தறிவுப் பகலவன்- சிங்க நடையும்- சிங்காரத் தென்றல் நடையும்- பொங்கு கடல் நடையும்- புரட்சித் தமிழ் நடையும்- தன் எழுத்தில் காட்டும் ஏந்தல்; பேரறிஞர் அண்ணாவின் நினைப்பும்- ஒழுங்கு முறை தவறாமல் ஒப்பற்று விளங்கும் அவர் சொல்லாற்றலும், எழுத்தாற்றலும் என் நெஞ்சில் சுழன்றிடத் தொடங்கின

- கோடு உயர்ந்தது; குன்றம் தாழ்ந்தது! என்ற அண்ணாவின் அரசியல் தலையங்கம் எங்கே

- இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்!

- தம்பி உடையான் படைக்கு அஞ்சான்!

- நாட்டு வாட்டம் போக்கிட சர்க்கார் நோட்டடித்தால் போதாது!

- கையில் காசில்லாதவர்கள்- மனதிலே மாசில்லாதவர்கள்!

- சாலை ஓரத்திலே சில வேலையற்றதுகள்; வேலையற்றதுகள் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள்!

- இயற்கை கொஞ்சுகிறது, இல்லாமை கொட்டுகிறது!

- கிளிக்குப் பச்சை பூசுவதா?

- ஐந்து கால் பசு!

- அங்கே பவளம், இங்கே படம்!

- கண்ணீரும், பன்னீரும்!

- தடைக்கற்கள் படிக்கட்டுகளாக ஆகட்டும்!

- கணக்குத் தீர்க்கும் காலம்!

- தன்னை வெல்வான், தரணியை வெல்வான்!

- வெந்த புண்ணிலே வேல்!

- குன்றின் மேலிட்டவிளக்கு!

- இன்ப நாளிது, இதயம் பாடுது!

என்ற அண்ணாவின் எழுத்துகளின் வெளிப்பாடுகள் தான் என்னே?

இன்று அடுக்குச்சொல் என்ற பெயரால்..

வெல்லமாய் இனிக்கும் அந்த நல்ல தமிழ் புது நடையைப் படித்து விட்டு பூரித்துப் பொங்கியெழ நம்மை உலுக்கிய அந்தச் சொற்கள் குலுக்கிய மரத்திலிருந்து உதிர்ந்திட்ட மணமிகு மலர்கள் அல்லவா? அந்த மலர்களைக் கண்டு மகிழ்ந்த நமக்கு இன்று அடுக்குச் சொல் என்ற பெயரால் "ஆனாவுக்கு ஆனா'' போட்டால் போதும் அந்த அடுக்குச் சொல்லே அழகு தமிழ்ச் சொல் என்று எண்ணுகின்ற அப்பாவிகள் அல்லவா; அன்னைத் தமிழைக் காக்கவும், அதற்காகவே அரசியல் நடத்துகிறோம் என்று ஆர்த்திடவும் புறப்பட்டுள்ளனர்.

அண்ணாவும், நானும் கண்ட மரணப் படுக்கை' எனும் நாடகத்தில் வில்லனைப் பார்த்து கதாநாயகன் பேசுவான்.

"உன் விஷயத்தில் நான் சர்ப்பமாக இருப்பேன்'' என்று! அதற்கு எதிர் வசனம் வில்லன் "அந்த சர்ப்பத்தையும் நான் சாம்பார் வைத்து சாப்பிடுவேன்'' என்பான்.

இந்த வசனத்தைக் கேட்ட போது தான்- இது போன்ற நெருக்கடியான நேரங்களில் அடக்கமாக இருக்கும் அண்ணா குலுங்கக் குலுங்கச் சிரித்த காட்சியை நான் கண்டேன். இப்போதும் அந்தக் காட்சி என் முன்னால் தெரியத்தான் செய்கிறது.

சிரிக்க அண்ணா இல்லை-எரிக்க நெற்றிக் கண் இல்லை...

மீண்டும் அப்படியொரு காட்சியைக் காண நேரிடுமோ என்றிருந்த வேளையில்தான் இன்று இந்த விளம்பரத்தைக் கண்டேன். என் செய்வது? சிரிப்பதற்கு அண்ணாவும் இல்லை- இந்தக் கசப்பான அடுக்கு மொழியை எரிப்பதற்கு என் நெற்றியிலே கண்ணும் இல்லை. குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டிய இங்கில்லை; குரும்பி அளவாக் காதை குடைந்து தோண்டிஎட்டின மட்டு அறுப்பதற்கோ வில்லியில்லை; இரண்டொன்றா முடிந்து தலை இறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தன் இல்லை; விளையாட்டாய் கவிதைதனை விரைந்து பாடித் தெட்டுதற்கோ அறிவில்லா துரைகள் உண்டு; தேசமெங்கும் புலவரென திரியலாமே! என்ற பாட்டைத் தான் மனதிற்குள் மந்திரம் போல் ஜபித்துக்கொண்டேன்.

தடுக்குச் சொல் பாராய் தம்பீ...

இதெல்லாம் அடுக்குச் சொல் அல்ல; "தடுக்குச் சொல் பாராய் தம்பீ'' என்று ஒரு முறை அண்ணாவே ஒரு நீண்டக் கட்டுரை "திராவிட நாடு'' இதழில் எழுதியிருக்கிறார். அதையும் நினைத்துக்கொண்டேன். தமிழுக்கு இப்படி ஒரு கேடு விளைவிக்க தகவிலர் சிலர் புறப்பட்டிருக்கிறார்களே என்பதையும் எண்ணி என் விழிகளை நனைத்துக்கொண்டேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X