3 திமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு
சென்னை: இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று திமுக எம்எல்ஏக்களும் இன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் முறைப்படி பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தில் காலியாக இருந்த ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 18ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
21ம் தேதி நடந்து வாக்கு எண்ணிக்கையில் கம்பம், பர்கூர், இளையான்குடி ஆகிய தொகுதியில் திமுகவும், மற்ற இரண்டு தொகுதிகளில் கூட்டணி கட்சியான காங்கிரசும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் வெற்றி பெற்ற கம்பம் ராதாகிருஷ்ணன், பர்கூர் நரசிம்மன், இளையான்குடி மதியரசன் ஆகிய மூன்று திமுக எம்எல்ஏக்களும் இன்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.
இந்த நிகழ்ச்சி சபாநாயகர் ஆவுடையப்பன் அறையில் நடந்தது. அவர்களுக்கு சபாநாயகர் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
இதில் துணை முதல்வர் ஸ்டாலின், மின்சார துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.