நாடாளுமன்ற குழு பதவி-ஜஸ்வந்த் தொடர்வார்
டெல்லி: நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ஜஸ்வந்த் சிங் நீக்கப்பட மாட்டார் என்று லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ளார்.
ஜின்னா குறித்து எழுதிய புத்தகத்தால் பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டுள்ளார் ஜஸ்வந்த் சிங். இந்த நூல் பாஜகவை விட்டே ஜஸ்வந்த்தை நீக்கக் காரணமாக அமைந்தது.
இந்த நிலையில் ஜஸ்வந்த் சிங் தற்போது வகித்து வரும் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு தலைவர் பதவியிலிருந்து ஜஸ்வந்த்தை தூக்க பாஜக முயற்சிப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் அதுகுறித்து பாஜகவிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்று சபாநாயகர் மீரா குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஜஸ்வந்த் சிங்கை நீக்கக் கோரி பாஜகவிடம் இருந்து எனக்கு இதுவரை எந்த கடிதமும் வரவில்லை. எவ்வித நெருக்குதலும் இல்லை.
நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் பதவியில் ஒருவரை நியமித்த பின்னர் அவரை பதவி நீக்கக் கோரி எந்த ஒரு கட்சியும் வற்புறுத்த இயலாது.
பொதுக்கணக்கு குழு தலைவரை அப்பதவியில் இருந்து நீக்க மக்களவைத் தலைவருக்கு தனிப்பட்ட அதிகாரம் உண்டு.
பொதுக்கணக்கு குழு தலைவர் தனது பணியை ஆற்ற இயலாத நிலையில் உள்ளார் என்பதை உணர்ந்தால் அவரை மக்களவைத் தலைவர் பதவி நீக்கம் செய்யலாம். இதற்கென வரையறுக்கப்பட்ட விதிமுறைகளும் உள்ளன.
நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவர் பதவி மக்களவை உறுப்பினராக உள்ள எதிர்க்கட்சியின் மூத்த தலைவர் ஒருவருக்கே அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒருவரை பதவியில் அமர்த்திய பின்னர் அந்த நபரை பதவியைவிட்டு நீக்க கோருவதற்கு சம்பந்தப்பட்ட கட்சிக்குகூட அதிகாரம் கிடையாது என்றார் மீரா குமார்.
குல்கர்னிக்கு மம்தா பதவி...
இதற்கிடையே பாஜகவை விட்டு விலகி வந்த அத்வானியின் முன்னாள் ஆலோசகர் சுதீந்திர குல்கர்னி, ரயில்வே உயர்நிலைக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குல்கர்னியே இதைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரயில்வே உயர்நிலை ஆலோசனைக் குழுவின் முக்கியப் பொறுப்பில் என்னை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நியத்துள்ளார். இப் பொறுப்பை நான் கடந்த 3 வாரங்களுக்கு முன்பே ஏற்றுக் கொண்டுவிட்டேன் என்றார்.