For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிபிசிஐடி சம்மன் சட்டவிரோதம் - மிரட்டல்: விஜயகாந்த்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை இரட்டைக் கொலை தொடர்பாக பொதுமக்களும், மீடியாக்களும், டிவிகளும் எழுப்பிய சந்தேகங்கள், கேள்விகளைத்தான் நான் எழுப்பினேன். இதற்காக சம்மன் அனுப்புவது என்பது மிரட்டும் செயலாகும். இது சட்டவிரோதமானது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த இரட்டை கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பி அறிக்கை வெளியிட்டிருந்தார் விஜயகாந்த். இதையடுத்து நேரில் வந்து ஆஜராகி தெரிந்த தகவல்களைக் கூறுமாறு அவருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பினர்.

இதற்கு விஜயகாந்த் பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளருக்கு அவர் அனுப்பியுள்ள பதில்:

புலன் விசாரணையின் பொழுது உச்சநீதிமன்றம் கூட தலையிடக்கூடாது என்பதை நான் நன்கு அறிவேன். முடிந்தால் புலன் விசாரணையின் போது உண்மைகளைக் கண்டறிய உதவ வேண்டுமே தவிர இடைஞ்சலாக இருக்கக் கூடாது என்பதையும் நன்கு தெரிந்தவன் நான்.

முக்கிய கொலைச் சம்பவங்களில் முறையான பாரபட்சமற்ற விசாரணை தேவைப்படுகிறது. புலன் விசாரணை சுதந்திரமாக நடைபெற வழிவகுப்பதே என்னுடைய அறிக்கையின் முக்கிய நோக்கமாகும். ஆகவே என்னுடைய அறிக்கை மனம்போன போக்கில் விஷமத்தனமாக விடப்பட்டது என்று யாரேனும் கருதுவார்களானால் அதை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றே கருதுகிறேன்.

பலத்த சந்தேகங்கள்...

இந்த வழக்கில் பலத்த சந்தேகங்கள் பொதுமக்களிடம் மட்டுமல்ல. சட்ட வல்லுநர்களிடையேயும் உள்ளது. ஆகவே காவல்துறையினர் இந்த சந்தேகங்களைப் போக்க கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

எனது அறிக்கையில் தரப்பட்ட தகவல்கள் அனைத்து பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் ஏற்கனவே வெளிவந்துள்ளன.

நல்ல எண்ணத்தோடு அறிக்கை கொடுத்த ஒரு அரசியல் கட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு தாங்கள் சம்மன் அனுப்பியுள்ளதாகவும், நேரில் வந்து சாட்சியம் தரும்படி கோரப்பட்டுள்ளதாகவும் அனைத்து பத்திரிகைகளும், ஊடகங்களும் கடந்த இரண்டு நாட்களாக கூறி வருகின்றன.

மிரட்டும் பாணி...

இதைக் கண்டு பொதுமக்களும், கழக தோழர்களும் அச்சமும், அதிர்ச்சியும் கொண்டுள்ளனர். ஒரு அரசியல் கட்சி தலைவரையே மிரட்டும் பாணியில் காவல்துறை செயல்படுமேயானால் இந்த கொலை வழக்கு சம்பந்தமாக உண்மை விவரங்கள் தெரிந்த அப்பகுதியிலுள்ள சாதாரண பொதுமக்கள் எவரேனும் இருப்பார்களேயானால் அவர்கள் போலீசின் பக்கம் தலைவைத்து படுப்பார்களா என்று கேட்க விரும்புகிறேன்.

இந்த சூழ்நிலையில் காவல்துறை எப்படி உண்மையைக் கண்டறிய முடியும். என்னை பொறுத்தவரையில் நான் எதற்கும் அஞ்சுபவன் அல்ல. நான் கேள்விப்பட்ட விவரங்களைத் தான் அறிக்கையாக வெளியிட்டேன்.

பொருந்தாத சட்டப் பிரிவு...

தாங்கள் அனுப்பிய சம்மனிலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள சட்டபிரிவு எனக்கு பொருந்தாது என்று கூற விரும்புகிறேன். புலன் விசாரணையின் போது சாட்சிகள் யார் பெயரையாவது சம்பந்தப்படுத்தி சொல்வார்களேயானால் அவர்களை அழைத்து விசாரிப்பதற்கு தான் அந்த பிரிவு வழிவகை செய்கிறது. அப்படியிருக்க எனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதமானது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவாக எந்த சம்பவத்தைப் பற்றியும் பேசவும், விமர்சனம் செய்யவும் சாதாரண குடிமகனுக்கே அரசியல் சட்டத்தில் பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. அப்படியிருக்க ஒரு அரசியல் கட்சி தலைவர் என்ற முறையில் எனக்கு கருத்து தெரிவிக்க முழு உரிமை உண்டு.

நடந்துவிட்ட படுகொலைச் சம்பவத்தை நேர்மையாக விசாரித்து முறையாக வழக்கு தொடுத்து குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். ஆகவே, காவல்துறை மக்களிடம் சென்று உண்மை நிலை என்ன என்று கண்டறிந்து முறையான விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கூண்டில் ஏற்றி தக்க தண்டனை பெற்றுத்தர கேட்டுக்கொள்கிறேன்.

நான் கேள்விப்பட்ட விவரங்களை எனது அறிக்கையின் மூலம் ஏற்கனவே வெளியிட்டு விட்டேன். இனி காவல்துறை தான் விசாரணை நடத்தி நீதியை நிலைநாட்ட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

என்ன கைமாறு செய்யப் போகிறேன்...

இதற்கிடையே, காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் அனகை முருகேசன் - செல்வரதி தம்பதி மகள் பிரவீணா-செந்தில்வேல் முருகன் திருமணம் இன்று அனகாபுத்தூரில் நடந்தது.

இதில் மனைவி பிரேமலதாவுடன் விஜயகாந்த் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

பின்னர் விஜயகாந்த் பேசுகையில்,

தே.மு.தி.க. தொண்டர்கள் எறும்பை விட சுறுசுறுப்பானவர்கள். அவர்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன். கன்னியாகுமரி முதல் சென்னை வரை தொண்டர்கள் உழைத்து வரும் உழைப்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்.

இவ்வளவு தொண்டர்களை பெற்றது நான் செய்த புண்ணியம். என் பின்னால் இவ்வளவு பெரிய தொண்டர்கள் கூட்டம் இருப்பதால் தான் எல்லா கட்சியினரும் பயப்படுகிறார்கள். நாங்கள் வளர்ந்து வருகிறோம். இப்போது தான் 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கப்போகிறோம்.

எனது பிறந்த நாளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 பெண் குழந்தைகளுக்கு என் சொந்த பணத்தில் ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்கிறேன்.

அதேபோல் எனது தொண்டர்களும் தங்களால் முடிந்ததை செய்கிறார்கள். தலைவர் எவ்வழியோ, அவ்வழியில் தான் தொண்டர்களும் செல்வார்கள்.

எனது தொண்டர்கள் ஒருபோதும் சோர்வடைய மாட்டார்கள். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. அதன்பிறகு பொறுத்திருந்து பாருங்கள். சவால்களை சந்தித்து ஆட்சிக்கு வருவோம்.

இந்த மகிழ்ச்சியான நேரத்தில் ஒரு சந்தோஷமான தகவலையும் சொல்கிறேன். ஒரு படம் டைரக்டு செய்ய எனக்கு ஆசை. விருதகிரி" படத்தை டைரக்டு செய்ய இருக்கிறேன் என்றார்.

பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், எல்லா கட்சிகளுக்கும் சவால் விடும் வகையில் தே.மு.தி.க. வளர்ந்து வருகிறது. மற்ற கட்சிகளில் யார் யாரையோ விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள் எங்கள் தொண்டர்கள். வெகுவிரைவில் சவால்களை சந்தித்து ஆட்சிக்கு வருவோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X