ரயில் திருடர்கள் இருவர் கைது - 32 பவுன் நகைகள் பறிமுதல்
மதுரை: மதுரையில் ரயில் திருடர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 32 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடந்த சில மாதங்களாக ரயில்களில் பயணிகளிடம் கைவரிசை காட்டி வரும் திருடர்களை கைது செய்யும்படி, ரயில்வே போலீஸ் எஸ்.பி விஜயலட்சுமி ரயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, மதுரை ரயில்வே டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அப்துல்ரஹீம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சாதாரண உடையில் ரயில்களில் நெடுந்தூரம் பயணம் மேற்கொண்டு திருடர்கள் நடவடிக்கையை ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது, கோவை-நாகர்கோவில் ரயிலில் நேற்று முன்தினம் பயணிகளிடம் கைவரிசை காட்ட இருவர் முயன்றனர். அவர்களை தனிப் படை போலீசார் மடக்கி பிடித்தனர்.
போலீசார் விசாரணையில், அவர்களது பெயர் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாலமுருகன் (20), செல்லூர் மீனாட்சிபுரம் முருகவேல் (33) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 32 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.