For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காப்பி அடித்து சிக்கிய மாணவி 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

By Staff
Google Oneindia Tamil News

கோவை: பிளஸ்டூ மாணவி தேர்வில் காப்பி அடித்து கையும் களவுமாக பிடிபட்டு, ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்து பள்ளியின் மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, சொக்கம்புதூர் எஸ்.பி.ஓ.ஓ. மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்டூ படித்து வந்தவர் வந்தனா அன்புராஜ்.

வியாழக்கிழமை பள்ளியில் காலாண்டுத் தேர்வுக்கான, வேதியியல் செயல் முறைத் தேர்வு நடந்தது. உப்பைக் கொடுத்து அதை அடையாளம் கண்டு எழுதுமாறு கூறப்பட்டிருந்ததது.

அந்த சோதனையில் வந்தனா உள்ளிட்ட மாணவர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்தனா காப்பி அடித்து எழுதுவதைப் பார்த்த ஆய்வக ஆசிரியர், வந்தனாவின் வகுப்பாசிரியருக்குத் தகவல் கொடுத்தார்.

இதையடுத்து வந்தனாவின் விடைத்தாள் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் காப்பி அடிக்கப்பட்டது என்று எழுதப்பட்டது.

பின்னர் அவரை பள்ளியின் துணை முதல்வரிடம் கொண்டு சென்றனர். அதன் பின்னர் வந்தனா அன்றைய தேர்வை எழுத தடை விதிக்கப்பட்டது.

இதனால் மன வேதனை அடைந்த நிலையில் வகுப்பில் அமர்ந்திருந்தார் வந்தனா. பின்னர் டாய்லெட் போய் வருவதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை.

இதையடுத்து ஆசிரியர்கள் பதறிப் போய் தேட ஆரம்பித்தனர். அப்போது, கீழே ரத்த வெள்ளத்தில் கிடந்த வந்தனாவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் வந்தனா உயிரிழந்தார்.

பள்ளிக் கட்டடம் 60 அடி உயரம் கொண்டது. அதிலிருந்து கீழே குதித்துள்ளார் வந்தனா.

இந்த விவகாரம் குறித்து இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை கூறுகையில், பள்ளியிலிருந்தோ அல்லது மாணவியின் பெற்றோர் தரப்பிலிருந்தோ எந்தப் புகாரும் எங்களுக்கு வரவில்லை. நாங்கள் வற்புறுத்தி பெற்றோரிடமிருந்து புகாரைப் பெற்றுள்ளோம். எந்தச் சூழ்நிலை மாணவியின் தற்கொலைக்குக் காரணமாக அமைந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

மாவட்ட கல்வி அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தற்கொலை செய்வதற்கு முன்பு தனது உள்ளங்கையில், அனைவரும் மன்னித்து விடுங்கள், ஒவ்வொருவரும் மாறுவதற்கு வாய்ப்பளியுங்கள் என்று எழுதி வைத்துக் கொண்டு மேலிருந்து குதித்துள்ளார் வந்தனா.

சமீப காலமாக மாணவ, மாணவியர் தற்கொலை செய்து வருவது அதிகரித்தவண்ணம் உள்ளது. சாதாரண காரணங்களுக்காகக் கூட தற்கொலை முடிவை நாடுகிறார்கள் மாணவ, மாணவியர்.

கடந்த வாரம், திருவண்ணாமலை, ஈரோடு, சென்னை, வேலூர் ஆகிய நகரங்களில் ஐந்து மாணவ, மாணவியர் சிறு சிறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டனர்.

சரியாகப் படிக்காததால் ஆசிரியர்கள் அல்லது பெற்றோர் திட்டியது, வகுப்புக்கு தாமதமாக வந்ததால் ஆசிரியர்கள் திட்டியது போன்ற காரணங்களுக்காக நடந்த பரிதாப மரணங்கள் இவை.

இதுபோல சிறு சிறு காரணங்களுக்காக அரிய உயிரை கைவிடும் செயலில் மாணவ, மாணவியர் ஈடுபடாமல் இருக்க தேவையான மன நல ஆலோசனைகளை ஒவ்வொரு பள்ளிக் கூடமும் தானே முன்வந்து தர வேண்டியது அவசியமாகியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X