முதல்வரை சந்தித்து நியாயம் கேட்பேன்-நாகர்கோவில் பெண் கண்ணீர்
நாகர்கோவில்: என்னை உள்ளூர் போலீஸாரும், அதிகாரிகளும் கை விட்டு விட்டனர். எனவே சென்னை சென்று முதல்வரை சந்தித்து நியாயம் கேட்கப் போகிறேன் என்று கண்ணீருடன் கூறுகிறார் கணவரால் கைவிடப்பட்டு கைக்குழந்தையுடன் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாகர்கோவில் பெண் கோபிகா.
கருங்கல் பாலப்பள்ளத்தை அடுத்த நடுப்பிடாகையை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி கோபிகா. கருத்துவேறுபாட்டால் கண்ணன் கோபிகாவை பிரிந்து சென்றார்.
கோபிகாவோ கண்ணன்தான் கணவன் அவருடன்தான் சேர்ந்து வாழ்வேன் அதற்கு குடும்பத்தின் மூத்தவர்கள் உதவ வேண்டும் என்று அவர்களிடம் மன்றாடினார். ஆனால் அவர்களோ இதற்கு எந்த விதத்திலும் உதவாததால் கோபிகா கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
தொடர்ந்து எஸ்.பியிடம் புகார் கொடுத்தார். ஆனால் ஒரு நடவடிக்கையும் இல்லை. இதையடுத்து கணவன் வீடு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதுபற்றிய தகவல் வெளியானதும் மகளிர் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோபிகாவுக்கு ஆதரவு கொடுத்தனர்.
இதையடுத்து கோபிகாவையும், அவரது கணவர் கண்ணனையும் மாவட்ட எஸ்.பி. சண்முகவேல் நேரில் அழைத்து சமரசம் செய்தார். ஆனால் இந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
இதையடுத்து கோபிகாவை அவரது கணவர் வீட்டிற்குள் அனுப்பப்போகும் போராட்டம் நடத்தப்போவதாக தே.மு.தி.க.வினர் அறிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்ட நாளன்று கோபிகாவையும் அவருடன் போராட்டத்துக்கு வந்த தே.மு.தி.க.வினரையும் போலீசார் கைது செய்தனர்.
கோபிகாவை கைது செய்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்தில் வைத்து தாக்கியதாகவும் அவரது தந்தையை அடித்து உதைத்ததாகவும் கோபிகா குற்றம் சாட்டினார். படுகாயம் அடைந்த நிலையில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் கோபிகாவை இன்று பல்வேறு அரசியல் கட்சியினரும் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் கோபிகா கூறுகையில்,
நியாமான கோரிக்கைக்காக போராடும் எனக்கு அதிகாரிகளும் போலீசாரும் உதவவில்லை. மாறாக போலீசார் என்னை தாக்கிவிட்டனர்.
கைக்குழந்தையுடன் கணவனுக்காக போராடும் என்னை போலீசார் தாக்கியதால் உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். இப்போது மகளிர் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது எனக்கு மன ஆறுதலை தருகிறது. இருந்தாலும் எனக்கு கணவனும் என் குழந்தைக்கு தந்தையும் வேண்டும். அதை பெறுவதற்காக என்ன விலை கொடுக்கவும், எந்த விதமான போராட்டத்தில் ஈடுபடவும் நான் தயாராக இருக்கிறேன்.
இப்போது இங்குள்ள அதிகாரிகள் என்னை கைவிட்டதால் சென்னைக்கு சென்று முதல்வரை நேரில் சந்தித்து புகார் மனு கொடுக்க முடிவு செய்துள்ளேன்.
முதல்வர் மூலம் என் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். அந்த மன தைரியத்தில் இப்போது இங்கு சிகிச்சை பெற்று வருகிறேன். சிகிச்சை முடிந்ததும் உடனே சென்னைக்கு செல்வேன் என்றார்.
கோபிகா, முதல்வரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.