தாய்-மகன் கொலை: 10 தனிப் படைகள் அமைப்பு

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர இரட்டைக் கொலை மற்றும் திருட்டு சென்னை நகர மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலம், போஸ்டல் காலனி 49வது தெரு எப்-3 பிளாக்கில் வசிப்பவர் ராமசுப்பிரமணி (45). பெங்களூரில் தனியார் மருந்து நிறுவன ஜெனரல் மானேஜராக பணியாற்றுகிறார்.
இவரது மனைவி பெயர் அனந்தலட்சுமி என்ற விஜயா (39) வீட்டில் சிறுவர்-சிறுமிகளுக்கு இசையும் கற்றுக் கொடுப்பார்.
காதல் திருமண தம்பதிகளான இவர்களுக்கு ஷோபனா (19) என்ற மகளும், சூரஜ் (12) என்ற மகனும் உள்ளனர். ஷோபனா என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். சூரஜ் 8-ம் வகுப்பு மாணவன். ராமசுப்பிரமணி பெங்களூரிலேயே தங்கியுள்ளார். வாரம் ஒருமுறையே சென்னை வருவார்.
அனந்தலட்சுமி மகன், மகளோடு வசித்து வந்தார். நேற்று முன்தினம் ஷோபனா கல்லூரிக்கு போய்விட்டு திரும்பி வந்தபோது வீட்டில் அனந்தலட்சுமியும், சூரஜும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
ஷோபனா அணிந்திருந்த 15 சவரன் நகைகள் மற்றும் ஒரு பீரோவில் இருந்த ரூ.40 ஆயிரம் பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்னொரு பீரோவுக்குள் இருந்த 40 சவரன் நகைகள் அப்படியே இருந்தன.
அனந்தலட்சுமி வீட்டில் தனியாக இருக்கும்போது யாராவது வெளியில் கதவை தட்டினால் எளிதில் கதவை திறக்க மாட்டாராம். கதவை தட்டுவது யார் என்று வீட்டுக்குள் இருந்தபடியே நன்கு விசாரித்த பிறகுதான் கதவை திறப்பாராம். இதனால் தெரிந்த நபர் யாரோ தான் இந்தக் கொலையை செய்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தென்சென்னை இணை கமிஷனர் சக்திவேல், துணை கமிஷனர் திருஞானம் ஆகியோரது நேரடி மேற்பார்வையில் 5 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 50க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தென் சென்னையை கலக்கி வரும் உள்ளூர் ரவுடிகளிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த பகுதியில் பால் சப்ளை செய்பவர்கள், பேப்பர் போடும் சிறுவர்கள், கொலை நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதியில் உள்ள காவலாளிகள் ஆகியோரிடமும் விசாரணை நடக்கிறது.
அனந்தலட்சுமியும், சூரஜும் காலையில் உணவருந்திக் கொண்டிருந்த நேரத்தில் கொலை நடந்துள்ளது. சமையல் அறையில் தோசைக் கல்லில் ஊற்றிய தோசை ஒன்று எடுக்காமல் அப்படியே இருந்துள்ளது.
பிரேதப் பரிசோதனையில் அனந்தலட்சுமி மற்றும் சூரஜின் வயிற்றில் காலையில் சாப்பிட்ட தோசைகள் இருந்தது தெரிய வந்துள்ளது.
கொலை நடைபெற்ற வீட்டில் இருந்து 2 செல்போன்களையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.