For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொன் விழா கண்ட திமுக தீர்மானங்கள்- ராமதாஸ் கிண்டல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கச்சத்தீவு பிரச்சனை, இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை ஆகியவை குறித்து திமுக நிறைவேற்றிய பல தீர்மானங்களும் பொன் விழா கண்டுவிட்டன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் அடித்து விரட்டப்பட்டு சொந்த பந்தங்களையும், சொந்த வீடு வாசல்களையும், சொந்த நாட்டில் விட்டு விட்டு தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள சுமார் ஒரு லட்சம் ஈழத்தமிழர்கள் இங்கேயே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தர வேண்டும் என்று காஞ்சீபுரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இலங்கையில் சிங்களவர்களுக்கு நிகராக தங்களுக்கு உரிமை வேண்டும் என்று போராடியதால், அடித்து விரட்டப்பட்ட தமிழர்கள் உலகில் பல்வேறு நாடுகளுக்கு சென்று தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

பிரிட்டன், பிரான்சு, ஜெர்மனி போன்ற பல ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற இதர மேலை நாடுகளிலும் தஞ்சம் புகுந்திருக்கும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்று சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் ஈழத்தமிழர்களும் என்றைக்கோ இந்திய குடியுரிமை பெற்று சுதந்திரமாக வாழ வைக்கப்பட்டிருக்க வேண்டும். இப்போது காலம் கடந்து மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கையானாலும் இது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது. விரைந்து செயல்படுத்தப்பட வேண்டியது.

திமுக நிறைவேற்றியுள்ள இந்த தீர்மானத்தை நிறைவேற்றி கொள்வதற்கும், அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கும் திமுக அரசு என்ன செய்யப்போகிறது? என்பது மிகவும் முக்கியமானது. முதல்வரும், அவரது தலைமையிலான அரசும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்போகிறார்களா?, தங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமரிடம் தூது அனுப்ப போகிறார்களா?, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்களையும் இதில் இணைத்துக் கொண்டு செயல்படப் போகிறார்களா?.

குறிப்பாக உள்துறை அமைச்சர் இந்த குழுவில் இடம் பெறுவாரா? அல்லது முதல்வரே நேரில் சென்று வலியுறுத்தி, வாதாடப் போகிறாரா?.

இது மாநில அரசு மேற்கொள்ள போகிற நடவடிக்கை என்பதால் சட்டப்பேரவையில் மீண்டும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் என்ற புகழுரையோடு இன்னும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைக்க போகிறார்களா?.

இவற்றில் எது நடந்தாலும் மத்தியில் உள்ள அரசு இந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுமா?.

ஏனெனில், இதுவரையில் திமுகவும், திமுக அரசும் தன்னிச்சையாகவும், தோழமைக் கட்சிகளை இணைத்துக் கொண்டும் சில சமயங்களில் அனைத்துக் கட்சிகளின் துணையோடும் பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறது. கடிதங்கள் வாயிலாகவும், அறிக்கைகள் வாயிலாகவும், சட்டசபை தீர்மானங்கள் வாயிலாகவும் கோரிக்கைகள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

அவை அனைத்தும் மத்திய அரசின் அலமாரிகளில் தூசிபடிந்து கிடக்கின்றன என்பது நிதர்சனமான உண்மை. நமது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படாததால், நமக்கு ஏமாற்றமே மிஞ்சி நிற்கிறது. இப்போதும் திமுக அரசு முன்வைக்க போகும் இந்த கோரிக்கைக்கும் அந்த கதி ஏற்படாது என்பதற்கு முதல்வர், மாநில மக்களுக்கு அளிக்கும் உத்தரவாதம் என்ன?.

காஞ்சீபுரம் விழாவில் நிறைவேற்றப்பட்ட எஞ்சிய தீர்மானங்களை எல்லாம் ஒரு கணம் எண்ணி பார்த்தால் அவற்றில் உள்ள கோரிக்கைகள் எல்லாம் எத்தனை ஆண்டுகால பழமையானவை என்பதை புரிந்து கொள்ளலாம்.

தமிழ் ஆட்சிமொழி பற்றிய தீர்மானம் கால் நூற்றாண்டுகால கோரிக்கை. மாநில சுயாட்சியும், தீர்மானத்தில் சுட்டிக்காட்டியுள்ளபடி அறிஞர் அண்ணா, 1967ல் முதல்வராக பொறுப்பேற்றதும் வலியுறுத்தி பேசிய கோரிக்கை.

ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கச்சத்தீவு பிரச்சினை, தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்த தீர்மானங்களும், கோரிக்கைகளும் வெள்ளிவிழா ஆண்டையும், பொன்விழா ஆண்டுகளையும் கண்டவை.

மாநாடுகள் தோறும் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்ற இந்த தீர்மானங்களைப் போன்று தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர் குறித்த தீர்மானமும் அமைந்துவிடக் கூடாது என்ற ஆதங்கத்தில்தான் இவற்றை எல்லாம் நினைவுப்படுத்துகிறேன்.

குறை சொல்ல வேண்டும், குற்றம் காண வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லை.

ஈழத்தமிழர்கள் அவர்களது சொந்த மண்ணில் சிங்களவர்களை போன்று ஆளும் உரிமை பெற்று சுயமரியாதையுடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய ஆட்சியாளர்களை ஒன்றுபட்டு வலியுறுத்த வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு அவர்கள் விரும்புகின்ற தனி பூமியை பெற்றுத்தர உறுதுணையாக இருக்க வேண்டும்.

அது வேறொரு நாட்டு பிரச்சினை என்று இருந்துவிட கூடாது. அப்போதுதான் சுயமரியாதை- சம உரிமை, சுயாட்சிக்காக போராடி பலியாகியிருக்கும் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் உயிர் தியாகத்திற்கு பொருள் இருக்கும். அவர்களது தியாகத்திற்கு நாம் செலுத்துகின்ற கண்ணியமிக்க, கடமையாகவும், மரியாதையாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X