நக்சல்கள் வெறியாட்டம் - 17 போலீஸார் சுட்டுக் கொலை
டெல்லி: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய வெறித் தாக்குதலில் 17 போலீஸார் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர்.
நேற்று இந்த வெறிச் செயல் நடந்துள்ளது. கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட மாவியோஸ்ட் தீவிரவாதிகள், சீருடையில், லாஹிரி என்ற கிராமத்திலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு போலீஸ் குழுவை கண்மூடித்தனமாக சுட்டனர்.
கிட்டத்தட்ட 2 மணி நேரம் இந்த சண்டை நடந்தது. போலீஸாரும் திருப்பிச் சுட்டனர். ஆனால் நக்சலைட்டுகள் பெருமளவில் இருந்ததால் போலீஸாரால் சமாளிக்க முடியவில்லை.
இந்த பயங்கர சண்டையில் 17 போலீஸார் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். நக்சலைட்டுகள் தரப்பிலும் சிலர் பலியானாதாக கூறப்படுகிறது. இருப்பினும் எத்தனை பேர் என்பது தெரியவில்லை.
அந்தப் பகுதியை தற்போது போலீஸ் படைகள் முற்றுகையிட்டுள்ளன.
உயிரிழந்த போலீஸார் அனைவரும் நக்சல் எதிர்ப்புப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். மகாராஷ்டிராவில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளதால், இவர்கள் இப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.