For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்திற்கு எதிரான ஆணைக்காக ஆடிப் பாடுகிறார் ஜெ. - கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் என் முகத்தில் அறைந்தாற்போன்ற ஆணை பிறப்பித்துள்ளதாம். ஆடிப் பாடுகிறார் ஜெயலலிதா! இது முகத்தில் அறைந்தாற் போன்ற ஆணை என்றால், அவர் மீதான தீர்ப்புகளுக்கு என்ன பெயரிட்டு அழைக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கடித வடிவ அறிக்கை:

"முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய அரசு அளித்த அனுமதிக்கு தடை விதிக்கக் கோரி, தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்த உச்சநீதி மன்றம் இந்த வழக்கு விசாரணையை 20-10-2009 வரை ஒத்தி வைத்துள்ளது என்று பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. கருணாநிதியின் முகத்தில் உச்சநீதி மன்றம் அறைந்தாற் போல் ஆணை இட்டிருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை''.

இந்த அறிக்கையை விட்டிருப்பவர் கேரள மாநில முதல்வரோ, அந்த மாநில அமைச்சர்களோ அல்ல. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவின் அறிக்கைதான் இது. தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி, தமிழ்நாட்டின் உரிமைக்காக வாதாடும்போது, அதற்கு உடனடியாக சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால், அதற்காக மகிழ்ச்சியடைந்து இப்படியொரு அறிக்கையை விடக் கூடியவர் எப்படிப்பட்டவர் என்பதை தமிழ்நாட்டுப் பத்திரிகையாளர்களும், அரசியல்வாதிகளும்தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.

முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவது பற்றி தமிழக அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் ஏற்கனவே ஒரு வழக்கு தொடரப்பட்டு அதன் விசாரணை 20-10-2009 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் தற்போது மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு தடையாணை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவிலேதான் உச்சநீதிமன்றம், இதற்கான பிரதான வழக்கே விசாரணைக்கு இந்த திங்கள் 20-ம் நாளில் நடைபெற விருப்பதால், அப்போது இதையும் சேர்த்து விசாரித்துக் கொள்ளலாம் என்று கருத்து தெரிவித்துள்ளது.

இது என் முகத்தில் அறைந்தாற்போன்ற ஆணையாம். ஆடிப் பாடுகிறார் ஜெயலலிதா! இது முகத்தில் அறைந்தாற்போன்ற ஆணை என்றால், பின்வரும் தீர்ப்புகளுக்கு என்ன பெயரிட்டு அழைக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும்.

2001-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜெயலலிதா கிருஷ்ணகிரி, ஆண்டிபட்டி, புவனகிரி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தார். வேட்பு மனுக்களின் பரிசீலனை நடைபெற்றபோது, கிருஷ்ணகிரி தொகுதி தேர்தல் அதிகாரி மதிவாணன் வேட்பு மனுவைப் பரிசீலித்துவிட்டு, ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாலும், அவர் 2 தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாலும் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார்.

டான்சி நில பேர வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தால், அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8-வது பிரிவு கூறுகிறது.

நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல் தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்தவராக ஆகிறார். மேற்குவங்க மாநில முன்னாள் முதல்வரும், பிரபல வழக்கறிஞருமான சித்தார்த்த சங்கர் ரே ஜெயலலிதாவுக்காக ஆஜராகி, அவருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனை உயர்நீதி மன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அவரது மனுவை ஏற்க வேண்டும் என்று வாதாடினார்.

ஆனால் தேர்தல் அதிகாரி மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் 1997-ம் வருஷத்திய சுற்றறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் ஜெயலலிதாவின் வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்தார்.

ஆனால், தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த 14-ம் தேதி அன்றே அவசர அவசரமாக அ.தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் கூட்டப்பெற்றது. ஜெயலலிதா சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனடியாக 14-ம் தேதி மாலையிலேயே அவருக்கு கவர்னர் பாத்திமா பீவி பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்க தடை கோரி யாராவது வழக்கு தொடுத்து விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகத்தான் அவசர அவசரமாகப் பதவியேற்றதாக அப்போது ஏடுகள் எல்லாம் கூறின.

ஜெயலலிதா முதல்வராக பதவி ஏற்றதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற வழக்கில் "ஊழல் வழக்கில் தண்டனை அடைந்த ஒருவர் மீது நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்படும் வரை, அரசுப் பதவியில் நீடிக்கக் கூடாது, குற்றவாளி என்று கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேல் நீதிமன்றம் நிறுத்தி வைக்கக் கூடாது, தண்டனையை வேண்டுமானால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம், ஆனால் ஊழல் குற்றவாளி ஒருவர் குற்றச்சாட்டுகளில் இருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்படும் வரை அரசுப் பதவியில் நீடிக்கக் கூடாது. அப்படி அமர்வதற்கு நீதிமன்றம் துணை போகக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.டி.தாமஸ், எஸ்.என்.வரியவா ஆகியோர் 2-8-2001 அன்று பரபரப்பான ஒரு தீர்ப்பை தெரிவித்தனர்.

ஜெயலலிதாவை முதல்-அமைச்சராக நியமித்தது சட்டப்படி செல்லாது என்று தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் 21-9-2001 அன்று உச்சநீதி மன்ற நீதிபதி எஸ்.பி.பரூச்சா தலைமையிலான 5 நீதிபதிகள் வழங்கிய ஒருமனதான தீர்ப்பில், "தமிழக முதல்வராக ஜெயலலிதா நியமனம் செய்யப்பட்டது செல்லாது. அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி, மே 14-ந் தேதி ஜெயலலிதாவிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இனியும் அவர் முதல் அமைச்சராக நீடிக்க முடியாது. ஏனெனில் மே 14-ல் அவர் நியமிக்கப்பட்டது சட்டப்படி செல்லத்தக்கதல்ல'' என்று தெரிவித்தனர்.

மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு சில நாட்கள் அவகாசம் தேவையென்று ஜெயலலிதாவின் வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் நீதிபதிகளிடம் கேட்டபோது, "முதல் அமைச்சர் இறந்தால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது, இவ்வளவு பெரும்பான்மையைப் பெற்றிருக்கும் ஒரு கட்சி எந்த நேரத்திலும் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம்'' என்று கூறி அந்தக் கோரிக்கை மறுக்கப்பட்டு விட்டது.

இன்னொன்று; ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், நீதித்துறையில் காலியாக உள்ள நீதிபதிகள் மற்றும் இதரப் பணி இடங்களை நிரப்பக்கோரி உயர்நீதிமன்ற பதிவாளரே தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ரவிராஜ பாண்டியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் 6-3-2003 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிதிப் பற்றாக்குறை காரணமாகத்தான் நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை என்று தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் ஜெயலலிதாவுக்கு தெரிவித்த கண்டனம் வருமாறு:

"நீதிபதிகள் மற்றும் பணியாளர்கள் இல்லாமல் நீதிமன்றங்கள் எப்படி செயல்பட முடியும்? காலிப் பணி இடங்களை நிரப்பும்படி தமிழக அரசுக்கு கடிதம் எழுதி நீதி மன்றம் சோர்ந்து விட்டது. நீதித் துறைக்கு அரசு தர்மம் செய்யவில்லை. அரசியல் அமைப்புச் சட்டப்படி உரிய நிதி ஒதுக்க வேண்டிய கடமை உள்ளது. நீதித்துறைக்கு அரசு உரிய நிதி ஒதுக்கா விட்டால் நீதிமன்றங்களை மூட வேண்டியிருக்கும். இதே நிலை நீடித்தால் தமிழகத்தைப் பொருளாதார நெருக்கடியால் பாதித்த மாநிலமாக அறிவிக்கும்படி அரசின் சட்டத்தைக் காக்கும் அதிகார மேலிடத்திற்குப் பரிந்துரைக்கப்படும். இதுதான் தமிழக அரசு உயர் நீதிமன்றத்திற்கு அளிக்கும் மரியாதையா?

மற்றொன்று; டான்சி நிலத்தை ஜெயலலிதா வாங்கிய வழக்கிலே அளிக்கப்பட்ட தீர்ப்புதான் சாதாரணமானதா? நிலத்தைத் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்றும், ஜெயலலிதா மனச்சாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவில்லையா?.

தற்போது உச்சநீதிமன்றம் 10 நாட்களுக்கு வழக்கை தள்ளி வைத்ததை கருணாநிதியின் முகத்தில் அறைந்தாற்போன்ற தீர்ப்பு என்று ஜெயலலிதா விமர்சிக்கிறாரே, அவரது ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட இதுபோன்ற தீர்ப்புகள் எல்லாம், எங்கே அறைந்தது போன்ற தீர்ப்புகள் என்பதை அவர்தான் கூறவேண்டும்.

ஜெயலலிதா மேலும் தனது அறிக்கையிலே ஆய்வுப் பணிகள் 2007-ம் ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கப்பட்டு விட்டதாக கேரள அமைச்சர் கூறியுள்ள வாசகங்களை எடுத்துக்காட்டி, அந்தத் தகவல்கள் எனக்குத் தெரியும் என்றும், ஆனால் நான் அவற்றை மறைத்து உச்சநீதிமன்றத்திலே வழக்கு தொடுத்தேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

கேரள அமைச்சரும், ஜெயலலிதாவும் கூறுவது உண்மையானால், கேரள அரசின் சார்பில் 30-3-2007 அன்று தாக்கல் செய்யப்பட்ட எதிர் மனுவிலோ அல்லது அதற்குப் பிறகு அவர்களது 5 சாட்சிகள் 2008-ம் ஆண்டில் தாக்கல் செய்த சத்திய பிரமாணப் பத்திரத்திலோ - குறுக்கு விசாரணையின் போதோ எந்த ஆய்வைப் பற்றியும் தெரிவிக்கவில்லையே, அது ஏன்? உண்மையில் தமிழகத்திற்கு கேரள அரசின் ஆய்வுப் பணிகள் குறித்து எந்தத் தகவலும் கொடுக்கவில்லை. அவர்கள் ஆய்வு செய்ய மத்திய அரசிடம் கோரியுள்ள தகவலைக் கூட அவர்கள் தமிழகத்திற்குத் தெரிவிக்கவில்லை.

கேரள அரசு ஆய்வு மேற்கொண்டதாகக் கூறப்படும் பகுதி வன விலங்குகள் சரணாலயத்திற்கு உட்பட்டதாகும். இந்த இடத்தில் எந்த விதமான ஆய்வுப் பணிகள் தொடங்க வேண்டியிருந்தாலும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். மேலும், வனப்பாதுகாப்புச் சட்டத்தின்படியும் முன் அனுமதி உச்சநீதி மன்றத்தில் பெறவேண்டும். அவ்வாறு எந்தவிதமான அனுமதியும் இல்லாமல் கேரளா ஆய்வினை மேற்கொண்டதாக ஜெயலலிதா கூறுகிறாரா?.

அனுமதி பெற்றுத்தான் ஏற்கனவே ஆய்வு நடந்ததாகச் சொல்வார்களானால், கடந்த 6-ம் தேதி தான் அனுமதி வழங்கியதாக மத்திய இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியது தவறா? 2007-ம் ஆண்டிலோ அல்லது அதற்கு முன்போ கேரள அரசு எந்தவிதமான அனுமதியும் பெற்றதாக தகவல் இல்லை.

இங்குள்ள தமிழர்கள் நலம் நாடுவோர், தமிழ்நாடு வளமாக இருக்க வேண்டும் என்று கருதுவோர் - இதற்கு எல்லாம் நீதிமன்றங்களை நாடினால் மட்டும் போதுமானதல்ல, மக்கள் மன்றங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற நிலைக்குத் தான் துரத்தப்படுகிறோமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்!

இன்னும் கூற வேண்டுமேயானால், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது தான் 18-3-2006 அன்று கேரள அரசு சட்டமன்றத்தில் ஒரு சட்டத்தையே இயற்றி, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைக்குக் கொண்டு வராத ஒரு நிலைமையை ஏற்படுத்தியது. அது ஜெயலலிதா அரசுக்கு எதிரான செயல் தானே என எண்ணி, உடனே நாம் அதனை வரவேற்று எந்த அறிக்கையும் ஜெயா போல விடவில்லை என்பதும் - கேரள அரசின் சட்டத்திற்கு எதிராக ஜெயலலிதா அரசு உச்ச நீதிமன்றத்திலே தொடர்ந்த வழக்கினை, அதே 2006-ம் ஆண்டு மே திங்களில் பதவிப் பொறுப்புக்கு வந்த தி.மு.க. அரசு தொடர்ந்து அந்த வழக்கை நடத்தி வருகிறது என்பதும் தான் உண்மை.

எனவே நம்மைப் பொறுத்த வரையில் தமிழ்நாட்டின் நலன், தமிழ் மக்களின் நலன் என்பதில் தான் அக்கறை செலுத்துகிறோமே தவிர, பொறுப்பிலே இருப்பது யார் என்பதைப் பார்த்து செயல்படவில்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X