For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒட்டுமொத்த அமைச்சரவையும் திருச்செந்தூர், வந்தவாசியில் முகாம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் ஒட்டுமொத்த அமைச்சர்களும், மாவட்ட அதிகாரிகளும் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளில் முகாமிட்டுள்ளனர். தேர்தல் முடிகிற வரை அடுத்த சில வாரங்களுக்கு இவர்களை தலைமைச் செயலகத்தில் பார்ப்பது அரிதாகவே இருக்கும் எனத் தெரிகிறது.

திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி இடைத்தேர்தல்களில் திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்காக அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் இரவும், பகலும் அயராது உழைக்க வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட்டது.

கடந்தமுறை ஐந்து சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தபோது, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக போட்டியிடவில்லை. அதனால், உடன்பிறப்புகள் வெற்றி பெறுவதற்கு அதிக சிரமம் இருக்கவில்லை. ஆனால், இம்முறை அதிமுக திடீரென முழித்தக் கொண்டு, முறுக்காக களத்தில் நிற்கிறது.

இடதுசாரிகள், மதிமுக மற்றும் சிறிய கட்சிகளின் துணையோடு போட்டியிடும் அதிமுகவை எதிர்கொள்ள திமுக கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. என்னதான் ஆளுங்கட்சியாக இருந்தாலும், 'தேர்தல் வேலை' பார்த்தாக வேண்டும் என உடன்பிறப்புகள் கருதுகின்றனர்.

இதனால், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் இரண்டு தொகுதிகளிலும் பம்பரமாக சுழன்று பணியாற்றத் துவங்கிவிட்டனர்.

திமுகவின் தெற்கு மண்டல பொறுப்பளரும், மத்திய அமைச்சருமான அழகிரி ஏற்கனவே களத்தில் குதித்துவிட்டார். துணை முதல்வர் ஸ்டாலின், இரண்டு தொகுதியில் ஒரு இடம் விடாமல் தொட்டுவிட வேண்டும் என்ற நோக்கில் மின்னல் வேக பிரச்சார பயணத்தை துவக்க உள்ளார்.

இந்த முறை திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 13 இடைத் தேர்தல்களை சந்தித்து விட்டது. அனைத்திலும் திமுக கூட்டணி வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்தமுறையும் திமுக வெற்றிப் பெற்றால் தான், அரசின் செயல்பாட்டிற்கு மக்கள் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க முடியும்.

இதனால் தான் முடிந்த வரை, இந்த இடைத்தேர்தலில் அரசுக்கு எதிரான வாக்குகளை அதிகளவில் பெற வேண்டும் என அதிமுக தலைமை வியூகம் அமைத்துள்ளது.

விரைவில் தனது பிரச்சாரப் பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா துவக்க இருக்கிறார். அப்போது திருச்செந்தூர், வந்தவாசியில் உச்சகட்டமாக அனல் தெறிக்கும்.

திமுகவுக்கு சரத்குமார் ஆதரவு:

இதற்கிடையே திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபை இடைத் தேர்தலில் நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறி்த்த அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் இன்று வெளியிட்டார்.

திருச்செந்தூர், வந்தவாசி சட்டசபை இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர்களை ஆதரிக்கலாம் என்ற கருத்தை கட்சியின் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் முன் வைத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X