விதிமீறல்: திருச்செந்தூரில் திமுக மாஜி எம்எல்ஏ கைது: வாக்காளர்களுக்கு திமுக 'பிரேக் பாஸ்ட்'
திருசெந்தூர் & வந்தவாசி: தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி திருச்செந்தூரில் தங்கியிருந்த திமுக முன்னாள் எம்எல்ஏ கைது செய்யப்பட்டார்.
சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின், தேர்தல் பணிக்கு வந்த வெளியூர்காரர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதனால் திருச்செந்தூரில் பிரச்சாரத்துக்கு வந்த பல்வேறு கட்சி நிர்வாகிகளும் நெல்லைக்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.
ஆனாலும் மேலும் பலர் தொடர்ந்து திருச்செந்தூரிலேயே தங்கியிருந்து தேர்தல் வேலைகளை தொடர்ந்து வந்தனர்.
இந் நிலையில் தேர்தல் பார்வையாளர் வீரேந்திரகுமார் மீனா லாட்ஜ்களில் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த விருதுநகர் முன்னாள் திமுக எம்எல்ஏ சீனிவாசனை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, தேர்தல் விதிமுறையை மீறி வாக்காளர்களுக்கு விருந்து வைக்க தங்கியிருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால், நான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்ததாக சீனிவாசன் கூறினார். இருப்பினும் வழக்கைப் பதிவு செய்த போலீசார் அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.
திருச்செந்தூரில் தேர்தல் பார்வையாளர் மீனா குரியன், கூடுதல் தேர்தல் அலுவலர் ராஜாராமன் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரசாத், தொகுதி தேர்தல் அதிகாரி துரை ராமச்சந்திரன் ஆகியோர் தொகுதியை வலம் வந்தபடி வாக்குப் பதிவை கண்காணித்தனர்.
வந்தவாசியில் பதுங்கியிருந்த திமுகவினர்:
அதே போல வந்தவாசியிலும் ஏராளமான வெளியூர் திமுகவினர் பதுங்கியிருப்பதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
அங்கு பதுங்கியிருந்த காஞ்சிபுரம் மாவட்ட திமுகவினரை அதிமுகவினர் போலீசாரிடம் அடையாளம் காட்டினர். இதனால் அங்கு நேரம் பதட்டம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை உடனே வெளியேற வந்தவாசி எஸ்.பி. பிரேமானந்த் சின்கா உத்தரவிட்டார்.
வாக்காளர்களுக்கு திமுக 'பிரேக் பாஸ்ட்':
வந்தவாசியில் ஓட்டு போட்டுவிட்டு வந்த வாக்காளர்களுக்கு திமுகவினர் லெமன் ரைஸ் வழங்கப்பட்டது.
சுகாதார துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தலைமையில் திமுக, தொண்டர்கள் இதை வாக்குச் சாவடிகளுக்கு வெளியே வைத்து வழங்கினர். இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மதிய உணவாக பிரியாணியும் தொகுதியின் பல பகுதிகளில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
திமுக-அதிமுகவினர் கைது:
இந் நிலையில் வந்தவாசி கீழ்கொடுங்கோவலூர் கிராம ஓட்டுச் சாவடிக்குள் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் நுழைந்த திமுக ஏஜென்ட் கைது செய்யப்பட்டார்.
அதே போல இந்த வாக்குச் ச்சாவடியில் ஓட்டு போட நின்ற மக்களிடம், வாக்கு சேகரிக்க முயன்ற அதிமுக நிர்வாகி முனுசாமி என்பவரும் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications