For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தனி ஈழம் அமைய கனடா தமிழர்கள் 99.8% பேர் ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

Darshika
டொரான்டோ: இலங்கையில் தமிழர்களுக்கு என தனி நாடு அமைய வேண்டும் என கனடாவில் வசிக்கும் தமிழர்கள் ஒருமனதாக வாக்களித்திருக்கிறார்கள்.

இலங்கையில் தனி ஈழ நாடு அமைவதை தமிழர்களே விரும்பவில்லை என்பது போன்ற பிரச்சாரங்கள் இந்தியா உட்பட பல இடங்களில் பரப்பப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் பரவலாக உள்ளன.

இந்நிலையில் கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியில் இதுதொடர்பான ஓட்டெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. கனடிய தமிழர் தேர்தலுக்கான கூட்டமைப்பு இந்த தேர்தலை முறைப்படி நடத்தியுள்ளது.

டொரான்டோ, மான்ட்ரியல், ஒட்டோவா, கார்ன்வால், ஒன்ட், வான்கூவர், எட்மான்டன் உள்ளிட்ட கனடாவின் 31 மையங்களில் 2,000 தன்னார்வலர்களைக் கொண்டு இந்த ஓட்டெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சர்வதேச பிரபலமான வட அமெரிக்காவைச் சேர்ந்த இஎஸ் அண்ட் எஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தொழில்முறைப்படி இந்த ஓட்டெடுப்பு பணிகள் நடந்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் இரவு 9 மணிவரை ஓட்டெடுப்பு நடந்தது. 50 முதல் 65 சதவீதம் வரை வாக்காளர்கள் திரண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் இருந்து கனடாவிற்கு புலம் பெயர்ந்தவர்கள் வாக்காளர்களாக கருதப்பட்டனர்.

கனடா முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இருப்பதாக கணிக்கப்படுகிறது. இதில் தமிழர்களோடு, சிங்களவர்களும் அடக்கம். இதில் 48 ஆயிரத்து 583 பேர் ஆர்வமுடன் வந்து ஓட்டளித்துள்ளனர். ஓட்டளித்தவர் ஒவ்வொருவரின் முழு தகவலும் ஆவணமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஓட்டளித்தவர்கள் ஒருமனதாக தனி ஈழத்திற்கு ஆதரவளித்துள்ளது ஈழத் தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருக்கும் என கருதப்படுகிறது. கனடா மட்டுமல்லாது நார்வே, பிரான்ஸ் ஆகிய இடங்களிலும் தனி ஈழத்திற்கு ஆதரவு முழுமையாக இருப்பதாக இந்த அமைப்பினர் கூறியுள்ளனர்.

ஓட்டெடுப்பு முடிவு குறித்து கனடிய தமிழர் தேர்தலுக்கான கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் தர்ஷிகா செல்வசிவம் டொரான்டோவில் நிருபர்களிடம் கூறியதாவது:

கனடாவில் நாம் அனுபவி்த்துக் கொண்டிருக்கும் அடிப்படையான சுதந்திரம் மற்றும் உரிமைகள் இலங்கையில் கிடையாது. குறிப்பாக அங்குள்ள தமிழர்களுக்கு கிடையாது.

இந்த நிலைமையை உலகுக்கு ஆதாரப்பூர்வமாக எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. தமிழர்களுக்கும் எதிராகவும், மீடியாக்களுக்கு எதிராகவும் இலங்கை அரசு நடத்தியுள்ள மனித உரிமை மீறல்களை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்று விரும்புகிறோம்.

மேலும், இலங்கையில் தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வாக தனி நாடு அமைப்பதே சிறந்ததாக இருக்கும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கனடாவில் வாழும் தமிழர்களின் கருத்து என்னவென்பதை துல்லியமாக அறிவதற்காக ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கனடா முழுக்க இந்த ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் பதிவான ஓட்டுகள் 48,583. இதில் 48 ஆயிரத்து 481 பேர் இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு அமைவதை ஆதரித்துள்ளார்கள்.

85 பேர் தனி ஈழம் தேவையில்லை என ஓட்டளித்துள்ளனர். 17 ஓட்டுக்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த ஓட்டெடுப்பில் அனைவரும் மிகுந்த ஆர்வமுடன் வந்து கலந்துகொண்டனர் என்று அவர் கூறினார்.

தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் வரவேற்பு:

இந்த வாக்கெடுப்பு குறித்து கனடா படைப்பாளிகள் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரலாற்றுப் புகழ்பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு 99.82 விழுக்காடு கனடிய தமிழர்கள் வாக்களித்து வரலாறு படைத்துள்ளார்கள்.

சிங்கள – பவுத்த பேரினவாத அரசு தாயகத்தில் அகதிகள் முகாம்களிலும் திறந்த வெளிச் சிறைகளிலும் பசி, பட்டினியோடு வாடும் எமது உறவுகளைத் தொடர்ந்து ராணுவப் பிடிக்குள் வைத்திருக்கவும் வன்னி மண்ணில் படைத் தளங்களை உருவாக்கி 100,000 சிங்கள ராணுவத்தினரைக் குடியேற்றவும் திருகோணமலையில் மேம்பாடு என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றத்தை முடுக்கி விடவும் எடுக்கப்படும் பின்னணியில் இந்த வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ளது.

வழக்கமாக ஒரு அரசு மட்டும் செய்யக் கூடிய பணியைக் கனடிய தமிழர் தேர்தலுக்கான கூட்டமைப்பு வியக்கத்தக்க விதத்தில் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்தத் தேர்தலை மக்களாட்சி நெறிமுறைமைகளுக்கு இசைவாகவும் வெளிப்படையாகவும் அதே சமயம் இரகசியமாகவும் நடத்தி முடித்த இஎஸ் அன்ட் எஸ் என்ற தொழில்சார் கணிப்பு நிறுவனத்துக்கும் எமது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்தல் வெற்றிகரமாக நடந்தேற வேண்டும் என வாழ்த்திய தமிழ்த் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், பெரியார் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, நாம் தமிழர் நிறுவனர் சீமான் போன்றோருக்கு எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

நாங்கள்தான் “கனடிய தமிழர்களின் ஒன்றுபட்ட குரல்" என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு இந்தத் தேர்தலை மதில்மேல் இருந்து வேடிக்கை பார்த்த கனடிய தமிழ்க் காங்கிரசுக்கும் எமது பாராட்டுதல்கள்.

பொதுவாக கனடாவில் நடைபெறும் மத்திய, மாகாண, உள்ளுர் தேர்தல்களில் வாக்களிக்கும் வாக்காளர்களது எண்ணிக்கை 50 – 60 சதவீதத்தைத் தாண்டுவதில்லை. இந்த வாக்குக் கணிப்பில் வாக்களித்த தமிழர்களின் சதவீதம் குறைந்தது 60 என வைத்துக் கொண்டால் மொத்த வாக்காளர் தொகை 80,972 ஆகவே இருக்கும்.

ஒரு வீட்டில் இருக்கும் 5 பேரில் 3 பேர் 18 வயதுக்கும் மேலானவர்கள் என்று வைத்துக் கொண்டால் கனடிய தமிழர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,953 மட்டுமே. எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் இந்த எண்ணிக்கையின் எல்லை 1,75,000 என்பதே எமது இந்தப் பொழுது நிலைப்பாடாகும்.

எது எவ்வாறிருப்பினும் கனடிய தமிழர்களின் மொத்த எண்ணிக்கையையும் வாக்காளர்களின் எண்ணிக்கையையும் சரியாகக் கணக்கெடுக்கும் முயற்சியை கனடிய தமிழர் தேர்தலுக்கான கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும்.

அப்படியான முயற்சி கனடிய பொதுத் தேர்தல், அடுத்த ஆண்டு 2010 இல் நடக்க இருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல், மக்கள் அவைத் தேர்தல் ஆகியவற்றுக்கும் பயன்படும் என நம்புகிறோம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X