For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'உன்னை சபிப்பவர்களை ஆசீர்வாதம் செய்'!-தலைவர்கள் கிருஸ்துமஸ் வாழ்த்து

By Staff
Google Oneindia Tamil News

Christmas
சென்னை: கிருஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடுக்கான பணிகள் நடைபெறும் வேளையில், ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த குருமார்கள் பலர் ஆற்றிய தமிழ் வளர்ச்சிப் பணிகள் நினைவில்
எழுகின்றன.

1606ல் இத்தாலி நாட்டிலிருந்து வந்து, தமிழ்த் துறவியாக வாழ்ந்து, தமிழ் உரைநடையைச் செப்பம் செய்தார் இராபர்ட் டி. நொபிலி.

அதே இத்தாலியிலிருந்து 1700ல் வந்து, கிறித்தவத் தொண்டுகளுடன் தமிழ் வளர்ச்சிப் பணிகளாக, தேம்பாவணி, சதுரகராதி முதலிய நூல்கள் பல படைத்த வீரமாமுனிவர்.

1709ல் ஜெர்மன் நாட்டிலிருந்து வந்து, தரங்கம்பாடியில் முதன்முதல் அச்சுக்கூடம் நிறுவி, பொறையாறில் இந்தியாவிலேயே முதன் முதலாகக் காகித ஆலையையும் நிறுவி தமிழ் நூல்கள் பல கண்ட சீகன் பால்க்.

இங்கிலாந்து நாட்டிலிருந்து, 1839ல் தமிழகம் வந்து சமயப் பணிகளாற்றி, திருக்குறள், திருவாசகம், நாலடியார் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது, நான் ஒரு தமிழ் மாணவன் எனத் தம் கல்லறையில் எழுதச் செய்த ஜி.யூ. போப்.

அயர்லாந்து நாட்டில் பிறந்து 1889 இல் தமிழகம் வந்து, நெல்லைச் சீமையில் தங்கி, திருநெல்வேலி சரித்திரம் என்னும் ஆங்கில நூலுடன், திராவிட மொழிகளை ஆய்ந்து, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் அரிய நூலைப்படைத்துத் தமிழ்மொழியின் மேன்மையை மேதினியில் நிலைநாட்டிய மேதை கால்டுவெல் போன்றோர் தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய அளப்பரிய தொண்டுகளெல்லாம் வரலாற்றில் நின்று நமக்கு எழுச்சியூட்டுகின்றன.

அக்கிறித்தவப் பெருமக்களை நன்றியோடு நினைவு கூர்ந்து, மண்ணில் மனித நேயம் தழைக்க, அடுத்தவனை நேசி; உன் எதிரியிடமும் அன்பு காட்டு; உன்னைச் சபிப்பவர்களை ஆசீர்வாதம் செய்; உன்னை வெறுப்பவர்களுக்கும் உதவி செய்; உன்னை அவமதிப்பவர்களையும் போற்று; என பொறுமையைப் போதித்த இயேசு நாதரின் அடிச்சுவட்டில் வாழும் கிறித்தவ சமுதாய மக்களுக்குத் தமிழக அரசின் சார்பில் எனது உளமார்ந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன் என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதா:

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

உலக உயிர்கள் அனைத்தையும் அன்பால் கவர்ந்த மெய்யறிஞர் இயேசு பெருமான் அவதரித்த நாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் திருநாள்
நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லா உயிர்களிடத்திலும் அன்பு காட்டுங்கள்! பகைவனுக்கும் அருளுங்கள்! தீமை செய்தவருக்கும் நன்மையே செய்யுங்கள்! என்று போதித்தவர் இயேசு பெருமான்.

வன்முறை வெறியாட்டத்தால் வதைப்பட்டுக்கொண்டிருக்கும் தமிழகம் அவரது வழி நின்றால் வளம் பெறும். இரக்கத்தின் மறு உருவமான இயேசு பெருமான் பிறந்த இந்த நன்னாளில், அனைவரது வாழ்விலும் அமைதியும், ஆனந்தமும் தவழட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்! செல்வம் செழிக்கட்டும்! என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

'கேக்' வழங்க விஜயகாந்த் வேண்டுகோள்:

தேமுதிக தலைவர் விஜயகாந்த வெளியிட்ட அறிக்கையில்,

தேமுதிக சார்பில் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் விழாவின்போதும் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் இயன்ற அளவிற்கு கிறிஸ்தவ மக்களுக்கு கேக்குகள் வழங்கி கொண்டாடுவது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டும் ஆங்காங்கே உள்ள சர்ச்சுகளுக்கு சென்று கேக்குகள் வழங்கி கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

வைகோ...:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது வாழ்த்து செய்தியில்,

உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னை கைவிடுவதும் இல்லை என்று இருளிலிலும், துயரிலும் வாடுவோருக்கு நம்பிக்கையூட்டி வழிநடத்தும் ஏசுபெருமானின் மொழிகள் அன்றும், இன்றும், என்றும் மனித குலத்திற்கு மகத்துவம் சேர்ப்பன.

மனித நேயம் மண்ணில் செழிக்கவும், சமூக ஒற்றுமை நிலைக்கவும், சமய நல்லிணக்கம் தழைக்கவும் சூளுரைப்போம் என்று கூறியுள்ளார்.

இல.கணேசன்:

தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் தனது வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தில் வாழும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த பாஜக அன்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் ஏனைய பொதுமக்களுக்கும் இந்நன்னாளில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

அதே போல தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் உள்ளிட்ட பலரும் தங்களது இனிய வாழ்த்துக்களைத் தெரிவி்த்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X