For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராவ், விஜயசாந்தி ராஜினாமா-82 எம்எல்ஏக்கள் விலக முடிவு

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் கே.சந்திரசேகர ராவ் தனது லோக்சபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
தனது ராஜினாமா கடிதத்தை லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கு நேற்று இரவு அவர் அனுப்பி வைத்தார்.

இதேபோல மேடக் தொகுதியிலிருந்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நடிகை விஜயசாந்தியும் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

இதேபோல தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்.எல்.ஏக்கள் 82 பேரும் ராஜினாமா செய் தீர்மானித்துள்ளனர். இதனால் ஆந்திராவில் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ள 82 எம்.எல்.ஏக்களும், சபாநாயகர் கிரண் குமார் ரெட்டியை சந்தித்து ராஜினாமா கடிதங்களைக் கொடுக்கவுள்ளனர்.

82 எம்.எல்.ஏக்ளில் 39 பேர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர்கள். 30 பேர் காங்கிரஸ் கட்சியினர், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியைச் சேர்ந்தவர்கள் 10 பேர், பிரஜா ராஜ்ஜியம் கட்சியிர் 2 பேர், பாஜகவைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ அடங்குவர். ஆந்திர சட்டசபையின் மொத்த பலம் 294 ஆகும்.

பின்னர் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜனா ரெட்டியின் இல்லத்தில் ராவ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் தாமோதர் ரெட்டி உள்ளிட்ட தெலுங்கானா பகுதி அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ராவ் பேசுகையில், சாதாரண பஞ்சாயத்து உறுப்பினர் முதல் எம்.பி. வரை அனைவரும் ராஜினாமா செய்வோம்.

தெலுங்கானா முழுவதும் 48 மணி நேர பந்த் நடத்தப்படும்.

மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் அறிவிப்பின் மூலம் மத்திய அரசு மீண்டும் ஒரு முறை துரோகம் இழைத்து விட்டது. ப.சிதம்பரம் மீண்டும் ஒருமுறை எங்களுக்கு துரோகம் செய்து விட்டார்.

கால நிர்யணம் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. ஒருமித்த கருத்து என்று கூறுகிறார்களே, அது ஏற்பட இன்னும் 150 வருடம் காத்திருக்கச் சொல்கிறார்களா? எத்தனை தடவைதான் இப்படிப் பேசிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?.

நாங்கள் (தெலுங்கானாவைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்) கூட்டு நடவடிக்கைக் குழுவை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்தக் குழு இன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திட்டமிடவுள்ளது.

அதன் பின்னர் மொத்தமாக அனைவரும் ராஜினாமா அறிவிப்பை வெளியிடுவோம். தெலுங்கானாவை அடையும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம். எந்த வகையான சமரசத்தையும் ஏற்க மாட்டோம்.

வியாழக்கிழமை முதல் 48 மணி நேர பந்த் போராட்டம் நடத்தப்படும். மாணவர்களும், தெலுங்கானாவைச் சேர்ந்த அனைத்துப் பிரிவினரும் இதை மிகப் பெரிய வெற்றியாக மாற்றித் தர வேண்டும்.

அதேசமயம், மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் மாணவர்களும், இளைஞர்களும் உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.

ரோசய்யா விலக வேண்டும்

30 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால், ரோசய்யா அரசு பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டது. எனவே அவர் பதவியில் நீடிக்க தார்மீக அருகதை இல்லை.

ரோசய்யா மிகவும் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கிறார். ப.சிதம்பரம் அறிவிப்பு வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே 144 தடை உத்தரவை அவர் தெலுங்கானா முழுவதும் பிறப்பித்துள்ளார்.

அதேசமயம், ஆந்திரப் பகுதியில் சிரஞ்சீவியும், தெலுங்கு தேசம் கட்சியினரும் யாத்திரைகளை நடத்துவதை அவர் தடுக்கவில்லை.

144 தடை உத்தரவை ரோசய்யா திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், தெலுங்கானா கொந்தளிக்கும் என்றார்.

பதட்டத்தில் ஹைதராபாத் - தெலுங்கானா

48 மணி நேர பந்த் அறிவிப்பைத் தொடர்ந்து ஹைதராபாத் நகரில் மீண்டும் பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளது. அதேபோல தெலுங்கானாவில் உள்ள பிற 9 மாவட்டங்களும் கூட பதட்டமாகியுள்ளன.

பந்த் அறிவிப்பைத் தொடர்ந்து தெலுங்கானா முழுவதும் கூடுதல் போலீஸ் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
--

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X