For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொழுதுபோக்கு அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்- ஸ்டாலின்

By Staff
Google Oneindia Tamil News

Stalin
சென்னை: இடைத்தேர்தல் தீர்ப்பின் மூலம் பொழுதுபோக்கு அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பது நிரூபணமாகியிருக்கிறது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பைத் தமிழக மக்கள் மீண்டும் அளித்திருக்கிறார்கள். கழகம் மகத்தான வெற்றியை ஈட்டியிருக்கிறது.

தமிழகத்தில் நடைபெறுவது கருணை மிக்க அரசு, மனித நேயத்துடன் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அரசு, பாகுபாடு ஏதுமின்றி மாநில மக்கள் அனைவரையும் அரவணைத்து அவர்களின் நலனையும் உயிரையும் காக்கும் நல்லரசு என்பதைத் தங்கள் தீர்ப்பின் மூலமாக நிரூபித்திருக்கிறார்கள் தமிழக மக்கள்.

தமிழர்களின் கவசமாக இருப்பது முதல்வர் கருணாநிதி தலைமையிலான கழக அரசுதான் என்பதை இடைத்தேர்தல் தீர்ப்புகள் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கின்றன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல, இந்த நல்லாட்சியின் தன்மையை அறிவதற்கு இந்த இடைத்தேர்தல்கள் பயன்பட்டுள்ளன.

தமிழகத்தின் வடபகுதியில் உள்ள வந்தவாசி, தென்பகுதியில் உள்ள திருச்செந்தூர் என இரு திசையில் உள்ள தொகுதிகளில் உள்ள தேர்தல்களில் மக்கள் அளித்துள்ள மகத்தான தீர்ப்பு, ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

மக்களுக்கு உண்மையான பலனளிக்கும் எங்கள் திட்டங்கள்தான் எல்லாத் தொகுதிகளுக்கும் பொதுவான கழக வேட்பாளர். ஆம்... கழகத்தின் சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும், பயனுள்ள திட்டங்களைத் தந்த தலைவர் கருணாநிதியே களத்தில் நிற்பதாக நினைத்து வாக்களித்து வருகிறார்கள் தமிழக மக்கள்.

சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்கின்ற உரிமையும் துணிவும் கழகத்திற்கும் அதன் கூட்டணிக்குமே இருக்கிறது. வந்தவாசி, திருச்செந்தூர் இரண்டு தொகுதிகளிலும் 5 நாட்கள் பிரசாரம் செய்தபோது கழக அரசின் சாதனைப் பட்டியல்களைத்தான் முன்வைத்தேன். மக்கள் வரவேற்றனர்.

பொழுதுபோக்கு அரசியல்வாதிகளை மக்கள் பொருட்படுத்தவில்லை.

இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது போன முறை. அதிமுகவை மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பது நிரூபணமாகியிருக்கிறது இந்த முறை. தேர்தல் களத்திற்கு வந்தபோதே தோல்வி பயத்துடன் வந்துவிட்டு பயம்... பயம்... என்று சொல்வதற்கு பதில் பணம்.. பணம் என்று பிதற்றினார்கள். அவர்களுடைய நினைப்பெல்லாம் அதன் மீது தான்.

இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், முதல்வர் கருணாநிதியின் சாதனை மகுடத்தில் பதிக்கப்பட்ட மேலும் இரண்டு வைரக் கற்கள். திமுக அரசின் சாதனைகள் தொடர்வதற்கு மக்கள் தந்துள்ள மற்றுமொரு அங்கீகாரம். பொதுத் தேர்தலிலும் கழகத்தின் வெற்றி தொடரும் என்பதற்கு தமிழகம் தந்துள்ள அச்சாரம்.

வெற்றியில் கூத்தாடாமலும், தோல்வியில் வண்டுவிடாமலும் எப்போதும் மக்கள் தொண்டாற்றும் மன உறுதியை கழகத் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கியிருக்கிறார் முதல்வர்.

தமிழகத்தில் கருணைமிகு ஆட்சி நடைபெறுகிறது. அனைவர் மீதும் அன்பு செலுத்தி நல்ல பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. இந்த கருணையும் அன்பும் நீடித்து, தொண்டினைத் தொடர்வோம் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

வழக்கமாக ஸ்டாலின் அறிக்கைகள் வெளியிடுவதில்லை. இப்போது தான் தேர்தல் வெற்றிக்காக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கருணாநிதி பெங்களூர் பயணம்:

இந் நிலையில் முதல்வர் கருணாநிதி சில தினங்களுக்கு ஓய்வெடுக்க இன்று பெங்களூர் சென்றார்.

மனைவி தயாளு அம்மாளுடன் இன்று காலை விமானத்தில் பெங்களூர் வந்த அவர் ஜே.பி. நகரில் உள்ள மகள் செல்வியின் வீட்டில் தங்கியிருக்கிறார்.

28ம் தேதிக்குப் பின் அவர் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X