For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓய்வெடுப்பதற்காக பெங்களூருக்கு நான் வரவில்லை - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: பெங்களூரில் ஓய்வெடுக்க நான் செல்லவில்லை. தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு கடிதங்களைக் கொண்டு தோரண வாயில் அமைக்கும் ஆர்வத்தோடுதான் வந்துள்ளேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓய்வுக்காக வந்திருக்கிறேன் என்று நீ எண்ணிக் கொண்டிருப்பாய். ஓய்வுக்காக அல்ல; அல்ல! ஒப்பற்ற முறையில் நடக்கவிருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கு கடிதங்களை கொண்டு, ஒரு தோரணவாயில் அமைக்கின்ற ஆர்வத்தோடு தான், இந்த ஓய்வைப் பயன்படுத்திக் கொள்கிறேன். தோரணவாயில் அமைக்க நான் கொட்டிவைக்கும் கற்களின் குவியல் இது!

அண்ணா 1967-ம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக முன்னின்று நடத்திய இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினையும் சேர்த்து, இதுவரை "உலகத் தமிழ் மாநாடு'' என்ற பெயரில் எட்டு மாநாடுகள் நடந்தேறியுள்ளன.

இப்போது, 2010-ம் ஆண்டு ஜுன் மாதம் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை 5 நாட்களுக்கு, கொங்குப் பகுதியின் கோலமிகு திருநகரமாம் கோவையில் நடைபெறுமென நாம் அறிவித்திருப்பது, "உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு'' ஆகும். மாநாட்டுக்கான தொடக்கக் கட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன.

மாநாடு நடைபெறவுள்ள நாட்கள்;
மாநாடு நடைபெறவுள்ள இடம்;
மாநாட்டை அழகு மிளிர்ந்திடவும்;
ஆய்வரங்கங்கள், பொருளாழம் கொண்டதாகவும்- அடுத்துவரும் தலைமுறையினர்க்கு அறிவூட்டுவதாகவும்-
அன்னைத் தமிழுக்கு மேலும் பொலிவு தரும் புத்தம் புதிய
அணிகலன்கள் பூட்டுவதாகவும் அமைந்திடவும்;
பொது அரங்கங்கள், இதுவரை கண்டிராத உணர்ச்சியையும்,
ஊக்கத்தையும், வெள்ளமெனப் பெருக்கி
உலகெங்கணும் உள்ள தமிழர்களிடைப் பாய்ச்சுவதாகவும்;
கண்காட்சி, கண்கொள்ளாக் காட்சியாக, கண்களின் நினைவுகளில்,
காலமெலாம் நின்று நிலைத்து ஒளி உமிழ்வதாகவும்;
ஊர்வலம்- தமிழர் நாகரிகம், பண்பாடு பன்முகத் தோற்றம், தொன்மை,
தரணி போற்றிடும் தமிழிலக்கியத்தின் மேன்மை, மென்மை
ஆகியவற்றைப் பேசும் சித்திரப் பாவைகளாக உருக்கொண்டு,
ஊர்வலமாக மட்டுமன்றி, உலகவலமாகப் பிரமிப்பூட்டுவதாகவும்;
நடத்துவதற்குத் தக்கவகையில் சான்றாண்மை மிக்கோர் பலரையும் இணைத்து 21 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளபடியே சொல்லப்போனால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற வகையில், நாம் நடத்திடப்போவது, முதல் மாநாடாகும். நமது தமிழ்மொழி, செம்மொழி' என்பதற்கான அனைத்துத் தகுதிகளையும் நிரம்பவே பெற்றிருப்பதால், அதனைச் செம்மொழியென அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று; இன்று, நேற்றல்ல-ஒரு நூற்றாண்டுக் காலத்திற்கு முன்பே குரலெழுப்பப்பட்டது.

அன்று எழுப்பப்பட்ட அந்தக் குரல் - தமிழ்க் குரல் - மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக, காலப்போக்கில் - தமிழறிஞர்களின் குரலாக -தமிழ் ஆர்வலர்களின் குரலாக - தமிழ்ச் சமுதாயத்தின் குரலாக - அரசியலரங்கத்தில் ஆற்றல் செறிந்த குரலாக - உருப்பெற்று; அந்தக் குரலை, கேளாக் காதினர் மதித்திடத் தவறிவிட்டாலும்; செவித்திறனும், சீர்த்த பண்பும் உடையோர் அதனை மதித்துப் போற்றி; அந்தக் குரலின் மாண்பமைந்த நியாயத்தை உணர்ந்து; தமிழ் செம்மொழியே என, இந்தியத் திருநாட்டளவில் அங்கீகாரம் செய்து பிரகடனப்படுத்தப்பட்ட நாள் 12.10.2004.

அந்த நாள், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்ற உரிமைப் போராட்ட வரலாற்றில், உயர்ந்த நாள், உன்னதமான நாள்; மாத்தமிழர் என்றென்றும் மறந்திடவியலாத மரகதத் திருநாள்! 1887-ல் பண்டைத் தமிழறிஞர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி எனும் பரிதிமாற்கலைஞர் "தமிழ்மொழியின் வரலாறு'' என்ற தமது நூலின் முடிவுரையில்: தமிழ் மொழியைச் செம்மொழி என நூறாண்டுகளுக்கு முன்பே அறுதியிட்டு, உறுதியாக நிலைநாட்டிக் குரல் கொடுத்தார்.

ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பின், தாம் மேற்கொண்ட இதே நிலையைத்தான் இறுதிவரை பரிதிமாற்கலைஞர் வலியுறுத்தி வந்தார். பேராசிரியர் ராகவைய்யங்காரை ஆசிரியராகக் கொண்டு, மதுரைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்டு வந்த "செந்தமிழ்'' எனும் மாத இதழில், 1902-ம் ஆண்டு, "உயர்தனிச் செம்மொழி'' என்று தலைப்பிட்ட கட்டுரையில், பரிதிமாற்கலைஞர் "தென்னாட் டின்கட் சிறந்தொளிராநின்ற நம் அமிழ்தினு மினிய தமிழ்மொழி எவ்வாற்றாணாராய்ந்த வழியும் உயர்தனிச் செம்மொழியேயாமென்பது திண்ணம்.

இத்துணையுயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த நம் அருமைத் தமிழ்மொழியை உண்ணாட்டுப் புன்மொழிகளோ டொருங் கெண்ணுதல் தவிர்ந்து, வடநாட்டுயர்தனிச் செம்மொழி சமஸ்கிருதமெனக் கொண்டாற் போலத், தென்னாட்டுயர்தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு விதிகள் வகுத்தலே ஏற்புடைத்தாம்'' - என்று விளக்கி உரைத்தார்.

அதனால் தான்; மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்திற்கு அருகில் விளாச்சேரி எனும் கிராமத்தில் கதவு எண்.4-219-ல், 2508 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள தமிழறிஞர் பரிதிமாற் வாழ்ந்த இல்லத்தை அரசுடைமையாக்கி, நினைவில்லமாகப் பராமரித்திட 16.11.2006 அன்று ஆணையிட்டு; தனியார் பொறுப்பிலிருந்த அந்த இல்லத்தை கையகப்படுத்திட, 1.12.2006-ல் ரூ.3,84,534 அனுமதிக்கப்பட்டு-அந்தப் பழைய இல்லம் கழக அரசால், ரூ.7,90,000 செலவில் புதுப்பிக்கப்பட்டு -புதிய பொலிவுடன் நினைவில்லமாக்கப்பட்டு - முகப்பில் பரிதிமாற்கலைஞரின் மார்பளவு சிலை ஒன்றும் நிறுவப்பட்டு - 31.10.2007 அன்று பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட நினைவில்லத்தைத் திறந்து வைத்து; அவரது மார்பளவு வெண்கலச் சிலையைத் திறந்து வைத்து; பின்னர் நினைவில்லத்தில் அவரது வரலாற்றுக் குறிப்புகள், அரிய புகைப்படங்கள் ஆகியவற்றைப் பார்வையிட்டு; அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் புத்தகத்தில், "தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோரி குரல்கொடுத்த முதல் தமிழன் பரிதிமாற் கலைஞர் புகழ் வாழ்க!''- என நான் எழுதிக் கையெழுத்திட்டேன்.

தமிழுக்குச் செம்மொழித் தகுதி கோரிய முதல் தமிழன் என்பதால் தான், கழக அரசு வேறு சில சிறப்புகளையும் அவருக்குச் செய்திருக்கிறது. பரிதிமாற் படைத்துள்ள நூல்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கி, அவரது மரபுரிமையர்க்கு 2.12.2006 அன்று 15 லட்ச ரூபாய் பரிவுத் தொகையாக வழங்கப்பட்டது.

தி.மு.க. அரசின் கோரிக்கை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் ஏற்கப்பட்டு, 17.8.2007 அன்று அவரது நினைவு சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இவர் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில், சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்மொழி உட்பட உள்நாட்டு மொழிகளைப் பாடப்பகுதியிலிருந்து நீக்கிட திட்டமிட்டபோது; பரிதிமாற் கலைஞரும், பூர்ணலிங்கம் பிள்ளையும், முயன்று பல்கலைக்கழகத்தின் திட்டத்தைத் தடுத்தனர்; தமிழ் தொடர்ந்து பல்கலைக் கழகப் பாட மொழியாக நீடித்தது.

தமிழ்மொழியைச் செம்மொழியென்று பிரகடனப்படுத்துவதற்கு அடித்தளம் அமைத்த பரிதிமாற்கலைஞர் - நூறாண்டுக் கால மொழி உரிமை வரலாற்றைத் தொடங்கி வைத்த தமிழறிஞர் - ஏறத்தாழ 33 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அப்பெருமகனார் - தமிழ் மொழி வரலாற்றில் நிலைத்த புகழைக் கொண்டுள்ளார்.

சூரியநாராயண சாஸ்திரியார் எனும் பரிதி மாற்கலைஞர்; வடமொழியாளரின் ஏமாற்று வேலைகள் எப்படிப்பட்டவை என்பதை - அவர்களது முகத்திரையைக் கிழித்து, அணிந்திருந்த முகமூடியைக் கழற்றி - அவர்களது வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

"தமிழ் மொழியின் வரலாறு'' என்ற அவரது நூலில் உள்ள அந்தப் பகுதி, தமிழர்கள் அனைவரும் - குறிப்பாக பெரியார், அண்ணா வழி வந்தவர்கள் - தவறாது நினைவு கூறத்தக்கதாகும்.

அது பின்வருமாறு:

"வடமொழியாளர் தமிழர்களது ஒழுக்க வழக்கங்களை உணர்ந்து அவற்றிற்கேற்ப வடமொழியில் நூல்கள் வகுப்பான் புகுந்தனர். அவர்களெல்லாம் ஆன்மநூற் பயிற்சிக்கு உடையாராயும், கலையுணர்ச்சி சான்றவராயுமிருந்தமை பற்றித் தமிழரது திவ்விய ஸ்தலங்களுக்குப் புராணங்கள் வகுத்தனர்; தமிழர்களிடத் தில்லாதிருந்த அந்தணர்', அரசர், வணிகர், வேளாளர்' என்ற நால்வகைச் சாதி முறையை மெல்ல மெல்ல நாட்டி விட்டனர்.

"முற்படைப் பதனில்வே றாகிய முறைமைபோல்
நால்வகைச் சாதியிந் நாட்டில் நீர், நாட்டினீர்''

-என்று ஆரியரை நோக்கி முழங்குங் கபிலரகவ' லையுங் காண்க. இன்னும் அவர்தம் புந்தி நலங்காட்டித் தமிழரசர்களிடம், அமைச்சர்களெனவும் மேலதிகாரப் பிரபுக்களெனவும் அமைந்து கொண்டனர்; தமிழரிடத்திருந்த பல அரிய விஷயங்களையும் மொழி பெயர்த்துத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு அவை வந்தன போலவும் காட்டினர்''

- என்று பரிதிமாற்கலைஞர் நூறாண்டுகளுக்கு முன்னரே எடுத்துக்காட்டுகளுடன் இயம்பியிருப்பது; பெரியார் - அண்ணா எண்ண ஓட்டங்களைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறதல்லவா? அதனால் தான் சூரியநாராயண சாஸ்திரியார் அவர்களை, முதல் தமிழன் பரிதிமாற் கலைஞர் என்று அழைத்து அவர் புகழ் வாழ்க என்று எனது நெஞ்சத்து உணர்வு கலந்து வாயார வாழ்த்தி எழுதினேன் என்று எழுதியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X