For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பென்னாகரம் தேர்தலை பொங்கல் சமயத்தில் வைக்கக் கூடாது - ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பென்னாகரம் இடைத் தேர்தலை பொங்கல் பண்டிகை சமயத்தில் வைக்கக் கூடாது. எனவே பொங்கல் கழிந்த பின்னர் பிப்ரவரி மாத வாக்கில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இதே கோரிக்கையை ஏற்கனவே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்திருந்தார். தற்போது இதே கோரிக்கையை வலியுறுத்தி தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா மற்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

அதன் விவரம்:

1.12.2009 அன்று பென்னாகரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. பெரியண்ணன் மரணமடைந்ததையொட்டி, அந்த தொகுதிக்கு ஜனவரி 20-ந் தேதி இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்கு அந்த நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என்பதற்கான அம்சங்களை அ.தி.மு.க. விளக்க விரும்புகிறது.

ஒரு தொகுதி காலியானால் அதற்கு 6 மாத காலத்திற்குள் தேர்தல் நடத்திக் கொள்ளலாம். ஆனால் பென்னாகரம் விஷயத்தில் உடனடியாக தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் தேவையற்ற அவசரத்தை காட்டுவது போல் தெரிகிறது. பொதுவாக உள்ள நடைமுறைகளிலிருந்து விலகி இந்திய தேர்தல் ஆணையம் செல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஜனவரி 6-ந் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது என்பது தெரிந்ததே. சட்டசபை நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலையில் அ.தி.மு.க.வின் செயல்பாட்டுக்கு இந்த இடைத்தேர்தல் அறிவிப்பு இடையூறாக இருக்கும். சட்டசபை கூட்டத் தொடர் நடக்கும்போது மக்கள் பிரச்சினைகளுக்கு அங்கு முக்கியத்துவம் தரப்படுவதால் அந்த நாட்களில் இடைத்தேர்தல்கள் நடத்தப்படுவதில்லை.

மேலும் இடைத்தேர்தல் நடக்கும் போது ஆளுங்கட்சியான தி.மு.க.வுக்கு அது சில நியாயமற்ற, சாதகமான அம்சங்களை ஏற்படுத்தக் கூடும். ஏனென்றால் இந்த சட்டசபை கூட்டத் தொடரை பயன்படுத்திக் கொண்டு இடைத்தேர்தலை மனதில் வைத்து பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக அறிவிக்க ஒரு வாய்ப்பை உருவாக்கி விடும்.

ஜனவரி 6-ந் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது என்பதை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே தெரிவித்திருக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.

மேலும் ஜனவரி 13-ந் தேதியிலிருந்து 16-ந் தேதி வரை தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. விவசாயிகளுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். ஆனால் பண்டிகை காலமான இந்த 4 நாட்களும் அரசியல் கட்சிகளின் இடைத்தேர்தல் பிரசாரங்களால் மொத்த பண்டிகை நாட்களும் பாதிக்கப்படும். மேலும் அந்த தொகுதி வாக்காளர்களும் பண்டிகையால் முழுமையாக பங்கேற்க முடியாமலும், ஓட்டுபோட முடியாத நிலையும் ஏற்படும்.

பொங்கல் நேரத்தில் தேர்தலை நடத்தினால் அரசியல் கட்சிகள் பண்டிகையை காரணம் காட்டி பல்வேறு விழாக்களையும், கேளிக்கை நிகழ்ச்சிகளையும் நடத்தி தேர்தல் விதிமுறைகளை மீற வாய்ப்புள்ளது.

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான தேர்தல் நடவடிக்கைகளே இன்னும் முழுமையாக முடியாத நேரத்தில் பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பதில் அவசரம் எதுவும் இல்லை. அரசியல் சாசனத்தில் பண்டிகையை காரணம் காட்டி வேறொரு தேதிக்கு இடைத்தேர்தலை தள்ளிவைக்க அதிகாரம் உள்ளது. இதற்கு முன்னுதாரணமும் உள்ளது.

எனவே ஜனவரி 20-ந் தேதி நடக்க இருக்கும் பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலை பிப்ரவரி மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும். பொங்கல் பண்டிகையை அந்த தொகுதி மக்கள் அமைதியாக கொண்டாட வழிவகுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஜெயலலிதா.

குழி தோண்டிப் புதைத்து விட்ட திமுக...

முன்னதாக நேற்று எம்.ஜி.ஆர். நினைவு நாளையொட்டி மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில், ஜெயலலிதா அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டனர். அங்கு தி.மு.க. பெற்ற வெற்றி உண்மையானது அல்ல. எங்கள் தோல்வியும் நிலையானது அல்ல. விரைவில் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்றார்.

அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது கட்சியினரோடு வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தேர்தல் நேர்மையாக நடந்து யார் வெற்றி பெற்றாலும் கவலையில்லை. இப்போது சூழ்ந்திருக்கும் பேராபத்து தமிழகத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் உள்ளது.

ஜனநாயகத்தை காக்கும் போராட்டத்தில் இன்னும் கடுமையான விலை கொடுக்க வேண்டி இருக்கும். அந்த கடமையை அ.தி.மு.க.வுடன் சேர்ந்து ம.தி.மு.க. செய்யும் என்றார்.

வைகோவும் கோரிக்கை...

இதற்கிடையே, பென்னாகரம் தொகுதி இடைத்தேர்தலை பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிவைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு இமெயில் மற்றும் பேக்ஸ் மூலம் இன்று கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், தமிழர்கள் அனைவரும் இனவேறுபாடின்றி கொண்டாடும் பொங்கல் திருவிழா நேரத்தில் பென்னாகரம் தேர்தல் நடைபெறுவது பொருத்தமாக இருக்காது. எனவே, பிப்ரவரி மாதத்திற்கு தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று மதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X