For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களுக்கு மாணவர்கள் அடி உதை

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: உஸ்மானியா பல்கலைக்கழகத்திற்கு வந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்களை மாணவர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஹைதாரபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் தான் தெலுங்கானா போராட்டத்தை மிகத் தீவிரமாக நடத்தி வருகின்றனர். தற்போது மீண்டும் அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாணவர்களை சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் நகம் ஜனார்த்தன் ரெட்டி முன்னாள் அமைச்சர் தேவேந்தர் கெளடு ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களுடன் தெலுங்கு தேசம் தலைவர்கள் தயாகர் ராவ், எம்.எல்.ஏ. ராவந்த் ரெட்டி ஆகியோரும் வந்தனர்.

அவர்களைப் பார்த்த மாணவர்கள் நால்வரையும் சுற்றிச் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்க ஆரம்பித்தனர். இதில் நகம் ஜனார்த்தன் ரெட்டிக்கு பலத்த அடி விழுந்தது. தேவேந்தர் கெளடு தப்பி ஓட முயன்றார். அவரை பல்கலைக்கழக வளாகத்திற்குள் துரத்தி துரத்தி மாணவர்கள் தாக்கினர்.

தயாகர் ராவும், ராவந்த் ரெட்டியும், அடிபடுவதற்குள் அங்கிருந்து ஓடித் தப்பினர்.

நால்வரின் வாகனங்களும் தாக்குதலில் தப்பவில்லை. அவையும் அடித்து நொறுக்கப்பட்டன. நான்கு பேருடன் வந்த தெலுங்கு தேசம் கட்சியினரையும் மாணவர்கள் விரட்டியடித்தனர்.

தெலுங்கு தேசம் கட்சி தெலுங்கானா மாநிலம் அமைய எதிர்ப்பு தெரிவித்ததைக் கண்டித்து இவர்களுக்கு அடி உதை விழுந்தது.

ஆனால் நகம் ஜனார்த்தன் ரெட்டி, தயாகர் ராவ், ராவந்த் ரெட்டி ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின்னர்தான் மாணவர்களை சந்திக்க வந்ததாக பின்னர் தெரிவித்தனர்.

மீண்டும் கலவரம்...

தனி தெலுங்கானா திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டதை அடுத்து ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் மீண்டும் பெரும் கலரவம் வெடித்துள்ளது. தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களிலும் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் தனி தெலுங்கானா மாநிலம் கோரி கடந்த மாதம் 29ம் தேதி டி.ஆர்.எஸ் கட்சி்த் தலைவர் சந்திரசேகர ராவ் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். 11 நாட்கள் தொடர்ந்து அவர் பிடிவாதமாக உண்ணாவிரதம் இருந்தார். தெலுங்கானா பகுதியில் டி.ஆர்.எஸ் கட்சியினர் பெரும் வன்முறையில் ஈடுபட்டு 10 மாவட்டங்களும் ஸ்தம்பித்தன.

இதனால், தனி தெலுங்கானா அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கம் என மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடந்த 9ம் தேதி அறிவித்தார். இதையடுத்து தெலுங்கானா பகுதியில் அமைதி திரும்பியது.

ஆனால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு தெலுங்கானா தவிர்த்த மற்ற பகுதிகளில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தெலுங்கானா பகுதியை பிரிக்க அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி ஆந்திராவின் ராயலசீமா உள்ளிட்ட மற்ற பகுதிகளில் வன்முறை வெடித்தது.

நிலைமையை சமாளிப்பதற்காக தெலுங்கானா முடிவை நிறுத்திவைப்பதாக மத்திய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. மத்திய அரசின் இந்த 'பல்டி'யால் கொத்தளித்த தெலுங்கானா ஆதரவாளர்கள் நேற்றுமுதல் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

அன்றிரவு முதலே துவங்கிவிட்ட வன்முறை நேற்று மேலும் தீவிரமடைந்தது. 12 அரசு பஸ்கள் உட்பட 18 வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. 200க்கும் மேற்பட்ட பஸ்கள் அடித்து உடைக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள் தாக்கப்பட்டன.

பந்த் அறிவிப்பாலும், கலவர சூழலாலும், தெலுங்கானா பகுதியில் உள்ள ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் சாலைகள் வெறிச்சோடின. உஸ்மானிய பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கலவரத்தை அடக்க மத்திய அரசு கூடுதலாக துணை ராணுவப்படையினரை அனுப்பியுள்ளது. தமிழகத்தில் இருந்தும் போலீஸ் படை அனுப்பப்பட்டுள்ளது.

வன்முறைகள் ஒருபுறமிருக்க, தெலுங்கானா பகுதியின் 13 எம்.பி.க்கள் மற்றும் 76 எம்.எல்.ஏ.க்களும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் வெங்கட ரெட்டியும் ராஜினாமா செய்தார்.

இதற்கிடையே, தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராயலசீமா பகுதியில் ஏற்கனவே ராஜினாமா கடிதம் கொடுத்த 140க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்போது மத்திய அரசின் அறிவிப்பால் ராஜினாமாவை வாபஸ் வாங்க முடிவு செய்துள்ளனர்.

ஆளுநர் என்.டி.திவாரி கடும் அதிருப்தி

ஆந்திராவில் வன்முறை நீடித்து வருவது குறித்து மாநில ஆளுநர் என்.டி. திவாரி கடும் அதிருப்தியும், கோபமும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி கூறுகையில், முதல்வர் ரோசய்யாவை போனில் தொடர்பு கொண்டு தனது அதிருப்தியையும், கோபத்தையும் ஆளுநர் வெளிப்படுத்தினார்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் கடுமையாக செயல்படுமாறு காவல்துறையினருக்கு முதல்வர் ரோசய்யா உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் பிரச்சினை (தெலுங்கானா மாநிலம் அமைப்பது) மாநில அரசின் கையில் இல்லை. அமைதியான முறையில் ஒரு போராட்டம் நடந்தால் யாரும் அதை ஆட்சேபிக்கப் போவதில்லை. ஆனால் வன்முறையை அனுமதிக்க முடியாது என்றார் ரெட்டி.

இவர் மறைந்த ராஜசகேர ரெட்டி மற்றும் அவரது மகன் ஜகன் மோகன் ரெட்டியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கானா-இன்று மட்டும் பந்த் வாபஸ் இதற்கிடையே, தெலுங்கானா பகுதியில் கிருஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இன்று ஒருநாள் மட்டும் பந்த் வாபஸ் பெறப்படுவதாக டி.ஆர்.எஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசின் திடீர் பல்டியால் தெலுங்கானா பகுதி மீண்டும் கலவர பூமியானது. டி.ஆர்.எஸ் உள்ளிட்ட கட்சிகள் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததால், அங்கு இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று கிருஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதை ஒட்டி, தெலுங்கானா பகுதியில் உள்ள கிருஸ்துவ அமைப்புகள் பந்த் போராட்டத்தை வாபஸ் வாங்குமாறு கோரிக்கை விடுத்தன.

இதையேற்று, இன்று ஒருநாள் மட்டும் பந்த் வாபஸ் பெற டி.ஆர்.எஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்தன. இதையடுத்து, தெலுங்கானாவின் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள சர்ச்சுகளில் இன்று கிறிஸ்தவர்கள் வழக்கம் போல வழிபாடுகள் நடத்தினர்.

எனினும், இப்பகுதிகளில் பேருந்து போக்குவரத்து முழு அளவில் இயக்கப்படவில்லை.

13 தெலுங்கானா அமைச்சர்கள் ராஜினாமா

இந்த நிலையில் தெலுங்கானாவைச் சேர்ந்த ஆந்திர மாநில அமைச்சர்கள் 13 பேர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் தங்களது ராஜினாமா கடிதங்களை முதல்வருக்கு அனுப்பி வைக்காமல் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளனர்.

தெலுங்கானாவைச் சேர்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்பட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் ராஜினாமா செய்வார்கள் என அறிவிக்கப்பட்டது.

அதற்கேற்ப அங்கு தற்போது ராஜினாமா படலம் நடந்து வருகிறது. இந்த நிலையில், தெலுங்கானாவைச் சேர்ந்த 13 மாநில அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை சோனியாவுக்கு பேக்ஸ் செய்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X