புதிய ரேஷன் கார்டு தேவையா - இனி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிய ரேஷன் கார்டுகளுக்கு இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்துகிறது தமிழக அரசின் உணவுத்துறை.

தமிழகம் முழுக்க போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்ட தமிழக அரசு பல லட்சம் கார்டுகளைப் பிடித்தது. இவற்றில் சந்தேகத்துக்கிடமான கார்டுகளின் எண்களை இணையதளத்தின் மூலம் சரிபார்க்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

போலி ரேஷன் கார்டு நீக்கும் பணி மற்றும் கார்டுகளுக்கு கால நீட்டிப்பு வழங்கும் பணி நடந்து வந்ததால், புதிய கார்டுகள் வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இன்னும் பல லட்சம் மக்கள் ரேஷன் கார்டு பெறாமல் உள்ளதால் அவர்களுக்கு புதிய கார்டுகள் வழங்கும் பணியை மீண்டும் துவங்குமாறு அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.
இதைத் தொடர்ந்து புதிய கார்டுகள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன் கார்டுகளுக்கு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் இணைய தளத்தில் விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களைப் பிரிண்ட் அவுட் எடுத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இதுவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி இல்லாமல் இருந்தது. புது கார்டுகள் கேட்டு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், இனி ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று தமிழக அரசின் உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இனி ரேஷன் கடைகளில் காய்கறி வாங்கலாம்

இதற்கிடையே, ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் காய்கறிகள் விற்கப்படவுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்-அமைச்சர் ஆணைக்கிணங்க சென்னை மாநகர மக்களுக்கு கூட்டுறவு ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்ய கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணி உத்தரவிட்டார்.

சென்னை மாநகர மக்களுக்கு 100 ஆண்டுகளுக்கு மேலாக சேவை புரிந்துவரும் டி.யு.சி.எஸ். நிறுவனத்தின் மூலம் காய்கறிகள் விற்பனை தொடங்கப்பட உள்ளது.

பொதுமக்களுக்கு தேவையான அனைத்துக் காய்கறிகளும் அது விளைகின்ற இடத்திலேயே விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்து அவ்வாறு கொள்முதல் செய்த காய்கறிகள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பிரித்து, பேக்கிங் செய்து தூய்மையாகவும், சுகாதாரமாகவும் தேவைப்படும் அளவில் மிகமிகக் குறைந்த விலையில் தேர்வு செய்யப்பட்ட 100 கூட்டுறவு ரேஷன் கடைகளின் மூலமாகவும், டி.யு.சி.எஸ். நிறுவனத்தில் சுய சேவைப் பிரிவுகள், எரிவாயு கிளைகள், மண்ணெண்ணெய் வழங்கும் நிறுவனங்கள் மூலமும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் காலை 8 மணி முதல் 12 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்யப்படும். ஒவ்வொரு விற்பனை நிலையத்திலும் காய்கறி விலைப் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

பொது மக்களின் நலன் கருதி சந்தை விலையில் பாதிக்கு பாதி என்ற நிலையில் காய்கறிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் இம்மலிவு விலை காய்கறிகள் விற்பனையை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கூட்டுறவுத்துறை நிர்ணயித்துள்ள காய்கறிகளின் விலை விவரம்...

வெங்காயம் (1 கிலோ) - ரூ. 24 (மார்க்கெட் விலை ரூ. 34)
தக்காளி - ரூ. 16 (ரூ. 27)
உருளைக்கிழங்கு - ரூ. 18 (ரூ. 32)
முட்டைகோஸ் - ரூ. 8 (ரூ. 15)
கேரட் - ரூ. 14 ( ரூ.36)
பீன்ஸ் - ரூ. 14 (ரூ. 24)
பீட்ரூட் - ரூ. 14 (ரூ.26)
செள செள - ரூ. 8 (ரூ. 18)
மிளகாய் - ரூ. 10 (ரூ.18)
காலிபிளவர் (ஒன்று) - ரூ. 10 (ரூ. 15)

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...