For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீராருங் கடலுடுத்த பாடலை தமிழ்த் தாய் வாழ்த்தாக மாற்றிய பெருமை திமுகவுக்கே- கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் என்ற பாடலை தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலாக மாற்றிய பெருமை திமுக அரசையே சாரும் என்று முதல்வர் கருணாநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு தொடர்பாக தினசரி அறிக்கை வெளியிட்டு வருகிறார் முதல்வர். அதன்படி நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

1919-ம் ஆண்டு ஜுன் மாதம் 22-ம் நாளன்று, திருச்சி டவுன்ஹாலில் பிராமணர் அல்லாதார் மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட்டில், திருச்சி வழக்கறிஞர் டி.சி.தங்கவேலு, ராவ்பகதூர் ஓ.கந்தசாமி செட்டியார், டி.ஏ.ஜி.ரத்தினம், டி.வி.சுப்பிரமணியம், திவான்பகதூர் பி.ராமராயநிங்கார், ராமநாதபுரம் மன்னர், கொல்லங்கோடு மன்னர், தொட்டப்பநாயக்கனூர் ஜமீன்தார், டி.ஆர்.மருதமுத்து மூப்பனார் போன்ற பிராமணர் அல்லாதார் இயக்கத்தின் முன்னணியினர் கலந்து கொண்டனர்.

அந்த மாநாட்டில், பிராமணர் அல்லாதாருக்குத் தனி வாக்குரிமைத் தொகுதி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், கலப்புத் திருமணம் ஆகியவை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியமான தீர்மானம் பின்வருமாறு:-

"சென்னைப் பல்கலைக்கழகமும், அரசுப் பணித் தேர்வாளர்களும்; பாரசீக மொழி, அரேபிய மொழி, வடமொழி ஆகிய மொழிகளுக்குச் சமமாக; செறிவும், செழிப்பும் நிறைந்த மிகப்பழமை வாய்ந்த இலக்கியங்களைக் கொண்டுள்ள தமிழ் மொழியை, செம்மொழியாக அங்கீகாரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு பிராமணரல்லாதார் இயக்கத்தைச் சேர்ந்த நமது நீதிக்கட்சியின் முன்னோர், 1919-ம் ஆண்டிலும்; தமிழவேள் உமாமகேசுவரனார் தலைமையில் அமைந்திருந்த கரந்தைத் தமிழ்ச் சங்கம் கடைசியாக 1923-ம் ஆண்டிலும்; தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றியதற்குப் பிறகு;

விடுதலைப் போராட்ட வீரரும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், பாகிஸ்தான் பிரிவினையைத் தீவிரமாக எதிர்த்தவரும், உருது, அரேபியம், இந்தி, பாரசீகம், வங்காளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்த பன்மொழி அறிஞரும், கவிஞரும், பண்டித நேருவின் மத்திய அமைச்சரவையில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவரும், இலவசத் தொடக்கக் கல்வியை அறிமுகப்படுத்தியவரும், இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களை அமைத்தவருமான மவுலானா அபுல்கலாம் ஆசாத்; 15.3.1951 அன்று - சாகித்ய அகாடமியை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட மாநாட்டில் தொடக்க உரையாற்றியபோது, தமிழ்மொழி செழுமையும், தொன்மையும் மிக்க இலக்கியத்தைக் கொண்டது; அம்மொழியிலுள்ள கவிதைகள் வெளிநாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்வதற்குரிய தகுதி படைத்தவை; தமிழ் உண்மையிலேயே ஒரு செம்மொழி என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்; தமிழ் செம்மொழியென அங்கீகாரம் செய்வதற்குரிய தகுதிப்பாடுகள் அனைத்தும் பண்டைக் காலத்தைச் சார்ந்தவை என்று தமிழ் செம்மொழியே என்பதைச் சுட்டிக் காட்டினார்.

1955-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26, 27, 28 ஆகிய தேதிகளில் சிதம்பரம் - அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய கீழ்த்திசை மாநாட்டில் தலைமையுரை ஆற்றிய பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்; 15.3.1951 அன்று மத்திய கல்வி அமைச்சர் மவுலானா அபுல்கலாம் ஆசாத், சாகித்ய அகாடமியை உருவாக்குவதற்காக நடத்தப்பட்ட மாநாட்டில் ஆற்றிய மேலே குறிப்பிட்ட தொடக்க உரையைச் சுட்டிக்காட்டி, "அவ்வாறு தமிழ்மொழியைச் செம்மொழியென அங்கீகாரம் அளித்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். அப்படித் தேவையான அங்கீகாரத்தை இந்தக் கீழ்த்திசை மாநாடு வழங்கவில்லையெனில், வேறு யார் தான் வழங்கமுடியும்? என்று வினாக் கணை தொடுத்தார்.

செம்மொழி வரலாற்றில் அடுத்த கட்டம் 1966-ம் ஆண்டு உருவானது. அதனை உருவாக்கியவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆவார். பாவாணர் நுண்ணிய ஆய்வு ஆராய்ச்சிக்குப் பிறகு, தமிழ்மொழி செம்மொழியே என மொழி அறிஞர்கள் அனைவரும் ஏற்றுப் போற்றும் வகையில், உரிய சான்றுகளுடன் "உலகின் முதன்மையான செம்மொழி என்ற அரிய நூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார்.

தொல் இலமூரியா காலத்தோடு தொடர்புடையது, சந்த ஒலிச் சால்பு, உலகளாவிய உணர்வுப் பெருமிதம், ஆரிய மொழிகளுக்கிடையே, தலைநிமிரும் தமிழின் தரம், சொல்லமைப்பின் தொன்மையும் ஒலிச் சுருக்கமும், தமிழ்மொழியில் உள்ள "அம்மா'' "அப்பா'' என்கிற சொற்கள் பிற பழமையான மொழிகளில் ஒத்த வடிவங்களில் உள்ளன, எழுவாய் வேற்றுமைக்கு தனி விகுதியின்மை, அடைமொழிகள் பிரிக்கத்தக்கவை - ஆழமுடைமை, தமிழ் சொற்களுக்கு பாலினம் இல்லை, தமிழில் ஒழுங்கு முறையற்ற சொற்கள் இல்லை, தமிழ்மொழி தோன்றிய காலத்தை கண்டறிய இயலும், தமிழில் காணப்படும் சொற்கள் இயற்கையான காரண காரிய தொடர்புடையவை, ஒருமை, இருமை, பன்மை என்று வடமொழியில் இருக்க, தமிழில் ஒருமை, பன்மை என்று இரண்டைப் பொருத்தமாகக் கொண்டு இருத்தல், தமிழின் தனித்தன்மையும் - இயற்கைத் தன்மையும், உயர்ந்த இலக்கியத் தரமிகுந்த நூற்கோவைகள்.

பாவாணர் எடுத்துரைத்த அசைக்கமுடியாத ஆதாரங்கள் தமிழ் ஆர்வலர்களையும், அறிஞர்களையும் மட்டுமல்லாமல், பிறமொழி அறிஞர்களையும் குறிப்பாக, வடமொழி மற்றும் ஆங்கிலப் புலமை மிக்கோரையும் பெரிதும் ஈர்த்து ஏற்றுக் கொள்ளச் செய்தன.

பாவாணரின் தமிழ்மொழி மேதைமையையும், ஆழ்ந்த தமிழ்ப்பற்றினையும், தமிழ் செம்மொழியே என அனைவரும் ஏற்றுக்கொள்வதற்கு அவர் எடுத்துக் கொண்ட சீரிய முயற்சிகளையும் பாராட்டிப் போற்றிடும் வகையில்; கழக அரசு 1974-ல், "செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்'' ஒன்றினை நிறுவி, அதன் முதல் இயக்குநராக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரை நியமித்தது.

பிறமொழித் தாக்கத்திலிருந்து தமிழைப் பாதுகாக்கத் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் வழியைப் பின்பற்றி; "உலகத் தமிழ்க் கழகம்'' கண்ட பெருமைக்குரியவர் பாவாணர். பாவாணர் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும்கூட; மதம் - குலம் இவற்றைக் கடந்து தமிழராக அவர் வாழ்ந்ததால், தம் பிள்ளைகளின் பெயர்களை; நச்சினார்க்கினிய நம்பி, சிலுவையை வென்ற செல்வராயன், அருங்கலைவல்லான் அடியார்க்கு நல்லான், மடந்தவிர்த்த மங்கையர்க்கரசி, மணிமன்ற வாணன், பைந்தமிழ் வளர்த்த பாண்டியன் - என இனிய தனித்தமிழில் வழங்கினார். இருபத்திமூன்று மொழிகளைக் கற்றுத் தேர்ந்து, பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தவர் பாவாணர்.

அத்தகைய பாவாணரின் நினைவைப் போற்றிடும் வகையில் கழக அரசு, 1996-ம் ஆண்டு அவரது படைப்புகள் அனைத்தையும் அரசுடைமையாக்கி, அவரது மரபுரிமையர்க்கு ரூ.20 லட்சம் பரிவுத்தொகையை வழங்கியதோடு; அவரது நினைவு சிறப்பு அஞ்சல்தலையை, மத்திய அரசின் மூலம் 18.2.2006 அன்று வெளியிட்டுப் பெருமைகொண்டது. அதுமட்டுமல்லாமல், மதுரை மாவட்டம் சாத்தமங்கலம் கிராமத்தில், பாவாணருக்கு ரூ.39 லட்சத்து 60 ஆயிரம் செலவில் மணிமண்டபமும், அதில் பாவாணரது முழுஉருவச் சிலையும் தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டு, நான் 30.10.2007 அன்று திறந்து வைத்துச் சிறப்பு செய்தேன்.

அதன்பிறகு, நீண்ட இடைவெளி ஏற்பட்டு விட்டது. தமிழைச் செம்மொழியாக அறிவித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை முன்வைத்து, தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலோ, தமிழ் அமைப்புகள் மத்தியிலோ, பெரும் கருத்துருவாக்கம் எதுவும் ஏற்படவில்லை.

எம்.ஜி.ஆர். அரசில் ஏற்பட்ட கதி...!

அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தமிழக முதல்-அமைச்சராக இருந்தபோது, மதுரையில் 1981-ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டையொட்டி, தமிழைச் செம்மொழியாக அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பற்றியும், அந்த முயற்சிகளுக்கு நேர்ந்த முடிவு பற்றியும், வளர்தமிழ்ச்செல்வர் மணவை முஸ்தபா தனது "செம்மொழி - உள்ளும் புறமும்'' என்ற நூலில் எழுதியுள்ளார்.

ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், இரண்டாம் நாள் காலை, நீதியரசர் மகராஜன் தலைமையில் நடைபெற்ற பொது நிலைக் கருத்தரங்கில், மணவை முஸ்தபா பேசுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அவர் தனது உரையில், செம்மொழிக்குரிய அனைத்துத் தகுதிப்பாடுகளும் இருந்தும், அதற்கு அரசு அங்கீகாரம் அளிக்காததால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பற்றி விரிவாகப் பேசினார்.

அவரது உரையைக் கேட்ட எம்.ஜி.ஆர்., மணவை முஸ்தபாவிடம் செம்மொழி தொடர்பாக அரசுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க, 1982-ம் ஆண்டில், மணவை முஸ்தபா செம்மொழி கோரிக்கை மனுவை, தமிழக அரசின் பரிசீலனைக்கு அனுப்பினார். அந்த மனு மீது அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டது என்பது குறித்து யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

1984-ல் தனக்கு கலைமாமணி விருது அளித்ததற்கு நன்றி கூறும் முறையில், முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், மணவை முஸ்தபா செம்மொழி பற்றியும் நினைவூட்டினார். அது அரசுத் துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட; அன்றைய அரசுச் செயலாளர், அக்கோரிக்கை மனு மீது எழுதிய குறிப்பில், "மணவை முஸ்தபா கூறுவது போல், தமிழைச் செம்மொழியாக்கினால், தமிழைச் செத்த மொழிகளின் பட்டியலில் சேர்த்ததாகிவிடும் என்பதால், இக்கோப்பு இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது'' என்ற முறையில் குறிப்பு எழுதி, கோப்பையே முடித்து வைத்து விட்டதாக மணவை முஸ்தபா கையறுநிலை கசியக் கசிய கண்ணீர் மல்கிட தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

செம்மொழி கோரிக்கைக்கு இந்த கதி ஏற்பட்டதற்கு பிறகும், இந்த களத்தில், யாரும் கவனம் செலுத்தவில்லை. மாநாடுகளிலோ, கருத்தரங்குகளிலோ, செம்மொழி கோரிக்கை முன் வைக்கப்படவில்லை.

1995-ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, தமிழ்ச் செம்மொழிக் கோரிக்கை, அப்போதைய இந்தியப் பிரதமர் நரசிம்மராவ் முன்னிலையில் வைக்கப்பட்டதாகவும்; ஆனால் பிரதமர் அக்கோரிக்கை தொடர்பாக எவ்வித கருத்தையும் வெளிப்படுத்தாமல், தன்னுடைய உரையை நிறைவு செய்தார் என்றும் புலவர் த.சுந்தரராசன் (பொதுச் செயலாளர், தலைநகர்த் தமிழ்ச்சங்கம், சென்னை) கட்டுரை ஒன்றில் மிகுந்த கவலையுணர்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

"நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்'' என்று தொடங்கும் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை எழுதிய பாடலை, 1970-ம் ஆண்டில் தமிழ்த்தாய் வாழ்த்துப்' பாடலாக ஆக்கிய பெருமை, கழக அரசுக்கு என்றென்றும் உண்டு. அதைப் போலவே, தமிழர்களின் நலன் காக்க, நாளும் பாடுபடும் கழக அரசு, தமிழ்மொழியின் வளர்ச்சிக்கும் பாடுபடுவதை எந்த நிலையிலும் நிறுத்தாது என்பதற்கு உதாரணம்தான், நான்காம் முறையாக கழக அரசு பதவியேற்றபோது, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறைக்காக ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியது; அந்தத்துறை, அமைச்சர் முனைவர் தமிழ்க்குடிமகன் தலைமையில், 13.5.1996 முதல் செயல்படத் தொடங்கியது.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட அந்தத் துறையின் தலையாய முதல் பணியாக, தமிழைச் செம்மொழி என அறிவிக்கக் கோருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்று நான் வழங்கிய அறிவுரைகளையொட்டி; 20.6.1996 அன்று தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் தலைமையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் ப.க.பொன்னுசாமி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் - முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் சி.பாலசுப்பிரமணியம்; திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் ச.முத்துக்குமரன், ஆசியவியல் ஆய்வு நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ஜி.ஜான்சாமுவேல், மணவை முஸ்தபா, தமிழ்வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில்; தமிழ்மொழியைச் செம்மொழியென அறிவிக்கப்படுவது தொடர்பாக, ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சி.ஜான்சாமுவேலால் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, ஒரு சிலமாற்றங்களுடன் ஏற்கப்பட்டு, மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது மட்டுமன்றி; தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுக்களின் பரிந்துரைகளையும் பெறலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படுவதற்குரிய அடிப்படைத் தகுதிகள் அனைத்தையும் பெற்றிருக்கிறது என்பதற்கான வலுவான ஆதாரங்களைக் கொண்டுள்ள அறிக்கை என்பதாலும்; தமிழ் செம்மொழி என அறிவிக்கப்படுவதற்கு அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும், அரசளவிலும், கழக அரசால் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சி என்பதாலும்; தமிழ் ஆர்வலர்களும், கழக உடன்பிறப்புகளும் அதனைப் படித்தறிந்து நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையை, தமிழாக்கம் செய்து, அதன் முக்கியப் பகுதிகளை அடுத்த கடிதத்தில் வழங்குகிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X