For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பென்னாகரம்: ஜனவரியில் நடத்த திமுக, காங். ஆதரவு - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

Naresh Gupta
சென்னை: பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலை பொங்கல் பண்டிகை சமயத்தில் வைத்திருப்பதற்கு திமுக, காங்கிரஸ் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்படும். தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் என தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
அதிமுக, பாமக, மதிமுக தவிர ஆளும் திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பொங்கல் சமயத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளன. திமுக தேர்தலை தள்ளி வைக்குமாறு கேட்கவில்லை. மாறாக, தேர்தல் ஆணையம் என்ன சொன்னாலும் அதன்படி நடப்போம் என்று திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி தெரிவித்துள்ளார்.

பொங்கல் சமயத்தில் தேர்தலை சந்திக்க மற்ற கட்சிகளும் கூட விருப்பமில்லாமலேயே உள்ளன. இதையடுத்து அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டத்தைக் கூட்டி அவர்களின் கருத்தை அறியுமாறு நரேஷ்குப்தாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் நரேஷ்குப்தா.

இக்கூட்டத்தில் திமுக சார்பில் பொன்முடி தலைமையில் இருவரும், அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இருவரும், காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, சுதர்சனமும், பாமக சார்பில் வக்கீல் பாலு தலைமையில் இருவரும், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலைச் சிறுத்தைகள், தேமுதிக, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் நரேஷ்குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், இக்கூட்டத்தில் கட்சிகளின் கருத்துகள் கருத்து அறியப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேதியிலேயே தேர்தலை நடத்த திமுக, காங்கிரஸ் ஆகியவை ஆதரவு தெரிவித்தன.

அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வேறு தேதியில் தேர்தலை நடத்த வேண்டும் என யோசனை தெரிவித்தன. இந்தக் கருத்துகள் தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்படும். தேர்தல் ஆணையம் அதைப் பரிசீலித்து இறுதி முடிவை எடுக்கும் என்றார்.

பென்னாகரம் தொகுதியில் பொங்கல் சமயத்தில் தேர்தலை வைத்தால் அது ஆளுங்கட்சி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட வழி வகுக்கும், மோதல்கள் ஏற்படும், பண்டிகைக் காலத்தை மக்கள் நிம்மதியுடன் கொண்டாட முடியாத நிலை ஏற்படும் என்று முதன் முதலில் அதிருப்தி தெரிவித்தது பாமகதான்.

இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு பாமக வக்கீல்கள் பிரிவு மனுவும் அனுப்பியது. ஆனால் அதை நிராகரித்து கடிதம் அனுப்பியது தேர்தல் ஆணையம்.

ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பென்னாகரம் இடைத் தேர்தல் தேதி குறித்து கடும் ஆட்சேபனை எழுப்பி தேர்தல் ஆணையத்திற்குக் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து இதுகுறித்த தேர்தல் ஆணையத்தின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது.

தொடர்ந்து மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆட்சேபனை தெரிவித்தன. இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இடைத் தேர்தல் நடத்தப்படும் நேரத்திற்கு ஆட்சேபனை தெரிவித்தது. ஆனால் சிபிஎம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

பொங்கல் சமயத்தில் தேர்தலை நடத்துவது மட்டுமல்லாமல், திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தல் நடைமுறைகள் முடிவதற்குள் இடைத் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டிய அவசரம், அவசியம் என்ன என்றும் எதிர்க்கட்சிகள் மொத்தமாக கேள்வி எழுப்பியிருந்தன.

ஆனால் மறுபக்கம் திமுகவோ இதுகுறித்துக் கவலைப்படவில்லை. மாறாக, தனது வேட்பாளராக இன்பசேகரனை அறிவித்தது. மேலும் தேர்தல் பணிகளையும் அது முடுக்கி விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நாளில் மனு தாக்கல் இல்லை

இதற்கிடையே நேற்று திட்டமிட்டபடி பென்னாகரம் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. ஆனால் நேற்று யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

இதுகுறித்து தர்மபுரி கலெக்டர் பொறுப்பை வகிப்பவரும், தொகுதி தேர்தல் அதிகாரியுமான மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில், டிசம்பர் 22ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மனுத்தாக்கல் செய்ய சனிக்கிழமை முதல் நாளாகும். இருப்பினும் யாரும் மனு தாக்கல் செய்யவி்ல்லை.

டிசம்பர் 27, 28, ஜனவரி 1 ஆகிய தேதிகள் விடுமுறை தினங்களாகும். அன்று வேட்பு மனு தாக்கல் இருக்காது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X