இந்தியாவில் தேசிய மொழி கிடையாது,இந்தி தேசிய மொழியும் அல்ல-குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil
Gujarat High Court
அகமதாபாத்: இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்தியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள், படிக்கிறார்கள். ஆனால் இந்தியாவுக்கென 'தேசிய மொழி' என்று எதுவும் கிடையாது என்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று கூறிக் கொள்வோர் பலர். குறிப்பாக வட மாநிலங்களில்தான் இந்தக் கருத்து ரொம்ப அதிகம். ஆனால் அப்படியெல்லாம் கிடையாது, இந்தியாவுக்கென்று தேசிய மொழியே கிடையாது என்று சம்மட்டியால் அடித்தது போன்ற ஒரு தீர்ப்பை அளித்துள்ளது குஜராத் உயர்நீதிமன்றம்.

சுரேஷ் கச்சாடியா என்பவர் கடந்த ஆண்டு ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்தார். அதில்,

உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் தாங்கள் விநியோகிக்கும் உணவுப் பொருள் அடங்கிய பாக்கெட்களில் உணவின் விலை, அதில் அடங்கியுள்ள பொருட்கள், தயாரிப்பு தேதி உள்ளிட்டவற்றை குறிப்பிடும்போது கண்டிப்பாக இந்தியிலும் குறிப்பிட வேண்டும் என மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டும்.

காரணம், இந்தி நமது தேசிய மொழியாகும். நாட்டில் பெரும்பாலான மக்கள் இந்தியில்தான் புரிந்து கொள்கிறார்கள். எனவே இந்தி மொழியில் இவை இடம் பெறாமல் போவதால், அவர்களுக்கு தாங்கள் வாங்கும் பொருட்களின் விவரம் தெரியாமல் போய் விடுகிறது என்றார்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஜே.முகாபாத்யாயா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் கோரிக்கையை முற்றாக நிராகரித்தனர்.

மேலும் மனுதாரரின் வக்கீலைப் பார்த்து, இந்தி, இந்தியாவின் தேசிய மொழி என்று அங்கீகரித்து எங்காவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டனர். அதற்கு எதிர் மறை பதிலை அளித்தார் வக்கீல்.

தொடர்ந்து நீதிபதி முகோபாத்யாயா பேசுகையில், இந்தி என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்று மட்டுமே. அது தேசிய மொழி அல்ல. இதுவரை இந்தியை தேசிய மொழியாக அறிவித்து எந்த உத்தரவையும் யாரும் பிறப்பிக்கவி்லை.

நமது அரசியலமைப்புச் சட்டமும் இந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக மட்டுமே அங்கீகரித்துள்ளதே தவிர தேசிய மொழியாக கூறவில்லை.

எனவே இந்தி அல்லது தேவநாகரி மொழிகளில் பொருட்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிட வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. ஆங்கிலத்தை பயன்படுத்துவது அவரவர் உரிமை என்று தீர்ப்பளித்தனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...