பா.நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டதை நேரில் பார்த்த நிருபர் கைது!
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்க முக்கியத் தலைவர்களான பா.நடேசன், புலித்தேவன், ரமேஷ் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் குடும்பத்தினருடன் கொடூரமாக கொல்லப்பட்டதை நேரில் பார்த்த செய்தியாளரை ராணுவம் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அதிர்வு இணையதளத்தில் வெளியாகியுள்ள செய்தி..
சரணடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களை பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவின் பேரில் இலங்கை ராணுவத்தின் 58 ஆவது டிவிஷன் படையணி தளபதி சவீந்திர டி சில்வா படுகொலை செய்ய கட்டளையிட்டார் என்று முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு தகவல் தெரிவித்த சிங்கள ஊடகவியலாளரை இலங்கை சிஐடி போலீஸார் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிபர் தேர்தல் முடிவடைந்த பின்னர், நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி வழங்கவேண்டாம் என்று சிறப்பு அறிவித்தலுடன் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியல் ஒன்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் குடிவரவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இந்த பட்டியலில் மேற்படி ஊடகவியலாளரின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
இதையடுத்து குறிப்பிட்ட ஊடகவியலாளரை தேடி அனுப்பப்பட்ட குற்ற புலனாய்வு பிரிவின் விசேஷ குழுவினர் அவரை கடந்த வெள்ளி இரவு கைது செய்துள்ளனர்.
பொன்சேகா தலைமையிலான குழுவினரின் பேச்சாளராக பணியாற்றும் பொறுப்பு, பொன்சேகா தரப்பினரால் இந்த ஒரு ஊடகவியலாளருக்கே வழங்கப்பட்டிருந்தது என்று குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ராணுவத்தின் 58 டிவிஷன் படையினரிடம் வெள்ளை கொடியுடன் சென்று சரணடைந்த விடுதலை புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் சமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் உட்பட நடேசனின் மனைவி உட்பட பலர் படுகோலை செய்யப்பட்டதை குறிப்பிட்ட சிங்கள ஊடகவியலாளர் நேரில் கண்டதாகவும் சரணடைவதற்கு வரும் விடுதலை புலிகள் எவரையும் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சவீந்திர டி சில்வாவுக்கு பாதுகாப்பு செயலர் கோத்தபாய தொலைபேசியில் அறிவுறுத்தியிருந்தார் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வந்த அதிர்வு...
அதிர்வு இணையதளம் இடையில் சில நாட்கள் முடங்கிப் போயிருந்தது. ஆனால் தற்போது இந்தத் தளம் மறுபடியும் வெளியாகத் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications