அனாதையாய் திரியும் ''அடுத்த முதல்வர்''-ஸ்டாலின்

செங்கல்பட்டில் நடந்த விழாவில் ஸ்டாலின் முன்னிலையில் 25,164 மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். கே.ஆர்.சி. திடலில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில்,
தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னை. ஆனால் திமுகவின் தலைநகரம் காஞ்சீபுரம் மாவட்டம் தான். இது தான் அண்ணா பிறந்த மாவட்டம்.
இங்குள்ள தொண்டர்களிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருப்பதை பார்த்து வியப்படைகிறேன்.
அமைச்சர் அன்பரசன் பேசும்போது, நீங்கள் உத்தரவிட்ட பணிகளை நாங்கள் செய்ய தயாராக இருக்கிறோம் என்றார். நான் இங்கு உத்தரவிட வரவில்லை, கட்டளைப் பிறப்பிக்க வரவில்லை. வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால், உங்களோடு என்னையும் இணைத்திட வந்துள்ளேன்.
திமுகவில் இணையும் உங்களை பூரிப்போடு வரவேற்கிறேன். என்றும் இந்த ஆட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். முதல்வர் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர்.
புதிதாக கட்சி தொடங்கும் போதே, "அடுத்த முதல்வர் நான் தான்'' என்று கூறியவர்கள் (விஜய்காந்த்), இன்று அனாதையாக திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
1957ல் திமுக தேர்தலில் இறங்க முடிவெடுத்தபோது திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு வாக்குப் பெட்டி வைத்து அவர்களது கருத்துகளை ஒரு துண்டு சீட்டில் எழுதி பெட்டியில் போடுமாறு கூறினார். அதில் தேர்தலில் நிற்கலாம் என்று பெரும்பாலானோர் கூறினார்கள். அப்போதுதான் திமுக முதல் தேர்தலை சந்தித்து 15 இடங்களை பிடித்தது. அதற்கு பிறகு படிப்படியாக முன்னேறி, அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது.
அதன் பின் வெற்றி-தோல்வி என மாறி மாறி இப்போது 5வது முறையாக கருணாநிதி முதல்வராக பதவியேற்றுள்ளார். வெற்றியை நாம் கொண்டாடுபவர்களும் அல்ல. தோல்வியை கண்டு மூலையில் முடங்கி விடுவோரும் அல்ல.
இன்னும் சொல்லப் போனால் அதிகமான தோல்வியை கண்டவர்கள் நாமாகத்தான் இருக்க முடியும். இது தான் கழக வரலாறு.
முதல்வர்கள் மாநாட்டிற்கு நான் டெல்லி சென்ற போது, சோனியா காந்தி அம்மையாரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது அவர் என்னிடம் 'கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்' பற்றி விரிவாக கேட்டறிந்தார். நாங்களும் அகில இந்திய அளவில் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் என்றார். இப்படி நமது மாநில திட்டங்கள் தேசிய அளவில் பேசப்படுகின்றன என்றார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications