ஒபாமா-தலாய்லாமா சந்திப்பு: சீனா பாய்ச்சல்

சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா சென்றுள்ள திபெத்திய புத்தமதத் துறவி தலாய்லாமாவை, அமெரிக்க அதிபர் ஒபாமா வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார்.
அப்போது திபெத் விடுதலை உட்பட பல்வேறு விஷயங்களை இருவரும் பேசினர். சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சீனாவுக்கும், திபெத்துக்கும் உள்ள பிரச்னையைத் தீர்க்க தலாய்லாமா அஹிம்சை முறையில் போராடி வருவது பாராட்டத்தக்கது.
அந்த இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான பிரச்னைகளை நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.
இச் சந்திப்புக்கு பின் தலாய் லாமா நிருபர்களிடம் பேசுகையில், ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமிக்க, தனித்துவம் வாய்ந்த கலாசார சிறப்புடைய நாடு திபெத். சீன ஆக்கிரமிப்பால் திபெத்தின் கலாச்சாரம் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.
இதைத் தடுத்து, மேன்மையான கலாச்சாரத்தையும், தனித்துவம் வாய்ந்த மதம், மொழி, புராதன சின்னங்களையும் காப்பாற்ற வேண்டியுள்ளது. தற்போதைய நிலையில் இது சாத்தியமில்லை.
திபெத்துக்கு சுயாட்சி வழங்கினால் மட்டுமே சாத்தியமாகும். வல்லரசு என்ற இலக்கை அடைவதற்கு முனைந்து வரும் சீனா, நீதி நெறிக்கு முக்கியத்துவம் கொடுத்தும், அடக்குமுறை குணத்தை கைவிட்டும் நடக்க வேண்டும்.
மேற்கத்திய ஜனநாயக முறை ஆசிய நாடுகளுக்கு ஒத்துவராது. இதனால் வெற்றிகரமான ஜனநாயக நாடாகவுள்ள இந்தியாவின் ஜனநாயக முறையை சீனா பின்பற்றலாம்.
ஆசிய நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளாக உள்ள சீனா, இந்தியா இடையே சுமுக உறவு ஏற்பட்டால் இரு நாடுகளுக்குமே பயனளிக்கும் என்றார்.
அமெரிக்கா மீது பாயும் சீனா:
இதற்கிடையே தலாய் லாமாவை சந்தித்துப் பேசியதன் மூலம் இருதரப்பு உறவை அமெரிக்கா உதாசீனப்படுத்தியுள்ளது என்று சீனா கருத்து தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மா ஷாவோஷு வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி தான் திபெத். இதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை.
இது, நாட்டின் இறையாண்மை மற்றும் மக்களின் உணர்வோடு தொடர்புடைய விவகாரம். இதனால் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள தலாய்லாமாவை சந்தித்துப் பேசியதன் மூலம் சீனாவின் உள்விவகாரத்தில் ஈடுபட்டதுடன், ஒட்டுமொத்த சீன மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
வரும் காலத்திலும் அமெரிக்கா இதுபோன்ற செயலில் ஈடுபடக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் சீனாவுக்கான அமெரிக்கத் தூதரையும் சீன வெளியுறவுத்துறை நேரில் அழைத்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications