இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பம்
டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் விலைவாசிப் பிரச்சனையை எழுப்ப பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தீவிரமாக இருப்பதால் கூட்டத் தொடரில் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 24ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும், 26ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளன.
விலைவாசி உயர்வு தொடர்பாக காங்கிரஸ் கூட்டணி அரசை பாஜக, இடதுசாரிகள், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
அதேபோல காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திமுக, திரினமூல் காங்கிரஸ் ஆகியவையும் கூட விலைவாசி உயர்வுக்கு தீர்வு காண வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக மூன்று மாத காலம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே விவாதிக்க வேண்டும் என மேற்கண்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இன்று கூடும் பட்ஜெட் கூட்டத் தொடர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டமாக, குடியரசுத் தலைவரின் உரையுடன் தொடங்கும்.
நாளை முதல் முறையான கூட்டம் நடைபெறும். நாளை மறு நாள் விலைவாசி உயர்வு குறித்த விவாதம் நடைபெற வேண்டும் என பாஜக திட்டவட்டமாக கூறியுள்ளது. அப்படி நடைபெறாவிட்டால் அவையை நடத்த விடமாட்டோம் என்றும் அது எச்சரித்துள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிமுகமாக உள்ள மசோதாக்கள்...
நாளை தொடங்க இருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்ட மசோதா உட்பட பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தனியார் தொலைக்காட்சிகள் கட்டுப்பாடில்லாமல், ஆபாசங்களையும், வன்முறைகளையும், அருவருப்பான காட்சிகளையும் வீட்டு வரவேற்பறைக்கே வந்து அரங்கேற்றி இளைய தலைமுறையை சீரழித்து வருவதாக கூறப்படும் புகார்கள் நாளுக்குநாள் வலுத்து வருகின்றன.
இந்நிலையில், நீண்டகாலமாக சில தனியார் தொலைக்காட்சி முதலாளிகளால் இழுத்தடிக்கப்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் தனியார் தொலைக்காட்சிகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் தனி குழு அல்லது தனி ஆணையம் அமைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
மரபணு மாற்ற தொழில்நுட்பம் பெரும் விவாதப் பொருளாகியுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் இதுபற்றிய வாதங்களை எழுப்பும் வகையில் உயிரிதொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஆணைய மசோதாவையும் மத்திய அரசு இந்த கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தும் என தெரிகிறது.
மேலும், 1972ல் கொண்டு வரப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தை திருத்துவதற்கான புதிய மசோதா வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கொண்டுவரப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
சர்வதேச அளவில் சாலை பாதுகாப்பு குறித்த சமீபத்திய ஆய்வுகளில் இந்தியா மீது பல்வேறு குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையிலை சாலை பாதுகாப்பு தொடர்பான சட்ட மசோதா கொண்டுவரப்படும் என்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கமல்நாத் கூறியிருக்கிறார்.
மசோதா நிறைவேறிய பின்னர், தேசிய சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலான்மை வாரியம் அமைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அணைகள் எல்லாவற்றையும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தவும், கண்காணிப்பை மேற்கொள்ளவும் உதவும் வகையில் ஒரு சட்டத்திருத்தத்தை நீர்வள அமைச்சகம் தயாரித்து வைத்துள்ளது. இதற்கான மசோதாவும் அறிமுகமாகக் கூடும்.
தற்போதுள்ள வக்ப் வாரிய சட்டதை திருத்த வேண்டிய அவசியம் குறித்து நாடாளுமன்ற குழு தனது அறிக்கையை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் மத்திய வக்ப் கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் புதிய மசோதாவை அறிமுகம் செய்யும் திட்டமும் உள்ளது.
நீதித்துறையில் கிளம்பும் ஊழல் புகார்களை கையாளுவதற்கு வசதியாக, 1968 நீதிபதிகள் சட்டத்தை மாற்றி, நீதித் துறை பொறுப்புகள் மற்றும் தர நிர்ணய சட்டத்தை அமல் படுத்தும் திட்டமும் மத்திய அரசிடம் உள்ளது.
அதோடு, எய்ட்ஸ் பாதித்த மக்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை தடுப்பதற்கான சட்ட மசோதாவும் மத்திய அரசின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications