கோழைத்தனமான தாக்குதல்களை கைவிடுங்கள்- நக்சல்களுக்கு பிரதீபா பாட்டீல் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Prathiba Patil
டெல்லி: பாதுகாப்புப் படையினர் மீதம், அப்பாவி மக்கள் மீதும் கோழைத்தனமாக நடத்தப்படும் தாக்குதல்களை கைவிட்டு விட்டு ஆக்கப்பூர்வமான முறையில் பேச்சுகளில் பங்கேற்க மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் முன்வர வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. அதன் முக்கிய அம்சமாக இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்தினார்.

பிரதீபா பேசுகையில், எல்லை தாண்டிய பயங்கரவாதம், பாகிஸ்தானின் போக்கு, நக்சலைட்டுகளின் அட்டகாசம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்...

சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது. இதுபோன்ற அறிவற்ற வன்முறையால், எந்தவிதமான தீர்வையும் காண முடியாது. இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை ஒடுக்க எனது அரசு முன்பை விட உறுதியான முறையில் செயல்பட உறுதியுடன் உள்ளது.
இடதுசாரி தீவிரவாத இயக்கங்கள், தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவது வருத்தம் தருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் சமீப காலத்தில் அவர்கள் நடத்திய அறிவற்ற தாக்குதல்களால் பல அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயுள்ளன.

இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதல்களை அவர்கள் கைவிட வேண்டும். வன்முறையின் மூலம் அரசை மிரட்டிப் பணிய வைக்க முயற்சிக்கக் கூடாது. அதற்கு எனது அரசு பணியாது.

வன்முனறையைக் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு ஏற்கனவே நக்சலைட்டுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதை அவர்கள் ஏற்க வேண்டும்.

பாகிஸ்தானுடான உறவு..

பாகிஸ்தான் அரசு தனது போக்கில் மிகவும் சீரியஸாக இருக்க வேண்டும். அப்போதுதான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு அர்த்தமுள்ளதாக அமைய முடியும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்கவும், ஒழிக்கவும் பாகிஸ்தான் தீவிர அக்கறை காட்ட வேண்டும். அப்படிச் செய்தால், அந்த நாட்டுடன் அர்த்தப்பூர்வமான உறவை ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவும் தீவிரமாக முயலும்.

இந்தியாவுக்கு எதிரான, இந்தியா மீதான தீவிரவாத செயல்களை தனது மண்ணில் அது அனுமதிக்கக் கூடாது. அங்கு செயல்படும் தீவிரவாத அமைப்புகளை ஒழிக்க இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவையெல்லாவற்றையும் பாகிஸ்தான் தீவிர அக்கறையுடன் செய்தால் மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு அர்த்தப்பூர்வமானதாக இருக்கும்.

சாதாரண மக்களின் வளர்ச்சியில் அக்கறை...

எனது அரசு சாதாரண மக்களின் மேம்பாட்டிலும், வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது.

மே மாதத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் இந்த அரசு, அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது.

இந்த அரசின் முக்கியப் பணிகளில், சாதாரண மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து நமது மக்களைக் காப்பது, பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட பெரும் நஷ்ட சூழ்நிலை ஆகியவற்றிலிருந்து மக்களைக் காப்பது இந்த அரசின் முக்கியப் பணிகளாகும்.

மேலும், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் இந்த அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தவும் இந்த அரசு தீவிர அக்கறை எடுத்து செயல்பட்டு வருகிறது.

அனைத்து மக்களின் வளர்ச்சியையும் உறுதி செய்யும் வகையில், ஊரக, நகர்ப்புற மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களை இந்த அரசு அமல்படுத்தவுள்ளது.

விலைவாசி உயர்வு...

விலைவாசி உயர்வால் நாட்டு மக்கள் பட்டு வரும் அவதியை அரசு கவலையுடன் கவனத்தில் கொண்டு, அந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது.

விலைவாசியைக் குறைக்கவும், வேளாண் பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. விலைவாசி உயர்விலிருந்து சாதாரண மக்கள் பாதிக்கப்படாமல் காக்க அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.

அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோதுமை, சர்க்கரை போதிய இருப்பு உள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்த அடுத்த 2 மாதத்தில் 30 லட்சம் டன் அரிசி, கோதுமை வெளி மார்க்கெட்டில் விடப்படும். விலை வாசி உயர்வு விரைவில் கட்டுக்குள் வந்து விடும்.

2010-2011ம் ஆண்டில் வளர்ச்சி விகிதத்தை 8 சத வீதமாகவும், 2011-2012ல் 9 சதவீதமாகவும் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தாலும் இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. 2008-09ல் 6.7 சதவீத மாக இருந்த இதன் வளர்ச்சி 2009-10-ல் 7.5 சதவீதமாக வளர்ந்துள்ளது. தொழில் வள நாடுகள் வளர்ச்சி எதிர் மறையாக சென்ற நேரத்திலும் இந்தியா வளர்ச்சி முன்னேற்றத்தை நோக்கி சென்றுள்ளது.

மத்திய அரசு திட்டத்தால் கிராம மக்கள் வாழ்க்கை தரம் முன்னேறி உள்ளது. வேலை வாய்ப்பும் அதிகரித்து இருக்கிறது.

உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்விகளை முறைப்படுத்த தேசிய கவுன்சில் ஒன்று அமைக்கப்படும். இதற்கு உரிய சட்டங்களும் கொண்டு வரப்படும். உலக தரத்தில் நமது கல்வி மேம்படுத்தப்படும்.

ஆரம்ப கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டு வரப்பட்ட மத்திய அரசு திட்டங்கள் நல்ல முறையில் செயலாற்றுகின்றன. சர்வ சிக்ஷா அபியான் திட்டம், மதிய உணவு திட்டம் போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இங்கைக்கு தொடர்ந்து உதவி செய்வோம்...

இலங்கையுடன் இந்தியா தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்படும். இலங்கையில் தமிழர்கள் மறுவாழ்வுக்கு இந்தியா தேவையான பங்களிப்பை செய்து இருக்கிறது. போரில் பாதிக்கப்பட்ட இடங்களில் மறு சீரமைப்புக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை செய்தது.

வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டு இருக்கிறோம். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நல நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கருப்புப் பணத்தை மீட்போம்..

வெளி நாட்டு வங்கிகளில், குறிப்பாக சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளில் உள்ள பணம் குறித்த தகவல்களை பெற மத்திய அரசு முயன்று வருகிறது.

இதற்காக சம்பந்தப்பட்ட அரசுகளுடன் தேவையான ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்ள இந்திய வருமான வரிச் சட்டங்களில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கட்டாயக் கல்வித் திட்டம்..

குழந்தைகளுக்கான கட்டாய கல்வி சட்டம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் முறையாக அமலுக்கு கொண்டு வரப்படும்.

அடுத்து இடைநிலை கல்வியை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. பின் தங்கிய பகுதிகளில் 373 கல்லூரிகள் உருவாக்கப்படும். 400 பல்கலைக்கழகம், 18 ஆயிரம் கல்லூரிகளில் “இண்டர்நெட்" வசதி ஏற்படுத்தப்படும்.

தீவிரவாத ஒழிப்பு...

தீவிரவாதிகளின் எந்த தாக்குதலையும் உடனடியாக சென்று முறியடிக்க 4 இடங்களில் தேசிய பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளை முற்றிலும் ஒழிப்பதையே எங்களது முதன்மை கொள்கையாக கொண்டு செயல்படுகிறோம். உலக அளவில் இயங்கி வரும் தீவிரவாத இயக்கங்களை கண்காணித்து அதற்கு ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

புனேவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற தாக்குதல் இனியும் நடக்காமல் தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு...

அதிகாரத்தில் பெண்களுக்கு உரிய பங்களிக்கும் வகையில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது. அதை நிறை வேற்ற அனைத்து உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டும்.

சிறுபான்மை மக்கள் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. நடப்பு பட்ஜெட் கூட்டத்தில் வக்பு சட்டம் கொண்டு வரப்படும்.

வகுப்புவாத வன்முறையை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும்.

கிராமப்பகுதி மற்றும் தொலை தூர பகுதிகளிலும் டெலிபோன் வசதி கிடைக்க இந்த நிதி ஆண்டில் 10 ஆயிரம் டெலிபோன் கோபுரங்கள் அமைக்கப்படும்.

20 இடங்களில் பெட்ரோல் இருப்பதை புதிதாக கண்டு பிடித்து உள்ளோம். இதன் மூலம் எண்ணை உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றார் பிரதீபா பாட்டீல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+