For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சம்பளமும், ஊக்கத்தொகையும் தந்து வேலையற்ற வாலிபர்களை இழுக்கும் நக்சல்கள்!

By Staff
Google Oneindia Tamil News

Maoists
டெல்லி: பின்தங்கிய மாநிலங்களில் வறுமையில் வாழும் வேலையில்லாத இளைஞர்களை மாத சம்பளத்துக்கு வேலைக்கு அமர்த்தி, ஆள்கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற சமூக விரோத செயல்களை நக்சல்கள் கச்சிதமாக செய்து முடிப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நக்சல்களிடம் வேலைபார்க்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 சம்பளமும், கடத்தல் மூலம் கிடைக்கும் பெருந்தொகையில் ஒரு பங்கும் கிடைக்கிறது.

இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்புக்கு எப்போதும் இல்லாத வகையில் மத்திய அரசு நடவடிக்கைகளை கடுமையாக்கி வருகிறது.

ஜார்க்கண்ட், பீகார், மேற்குவங்கம், ஒரிசா, ஆந்திரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் நக்சல்களின் தீவிரவாத செயல்பாடுகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் பொறுப்பேற்றதை அடுத்து கடந்த ஆறு மாதங்களில், நக்சல் நடமாட்டம் உள்ளதாக கருதப்படும் குறிப்பிட்ட இந்த 8 மாநிலங்களில் 34 மாவட்டங்களை அரசு தீவிரமாக கண்காணித்து, நக்சல்கள் மீதான பிடியை இறுக்கி வருகிறது.

இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 4 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவை பாதுகாப்பு மற்றும் போலீஸ் படையினர் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

ஆனால், மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியோ சுமார் 40 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இருக்கும் என உள்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

நக்சல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க முயன்றாலும், தொடர்ந்து அவர்கள் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகின்றனர்.

கடந்த 1971ம் ஆண்டு முதல் இதுவரை நக்சல் வன்முறையில் மொத்தம் 908 பேர் கொல்லப்பட்டுள்ளனர். விரைவில் இந்த எண்ணிக்கை வேகமாக கூடுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக யூகிக்கப்படுகிறது.

நக்சல் பாதித்த மாநில போலீசாருக்கு மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில் சிறப்பு பயிற்சிகள், மத்திய படைகளின் ஒத்துழைப்பு, உளவுத் தகவல் பரிமாற்றம், மாநிலங்களுக்கு இடையிலான பரஸ்பர உதவிகள் என பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனாலும், நக்சல்கள் தங்களின் செயல்பாடுகளை நிதானமாகவும், உறுதியாகவும் மேற்கொண்டு வருவதாக உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுபற்றி உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கையில்,

'நக்சல்கள் நினைத்தால் நாட்டில் ஒரு மாபெரும் வன்முறைப் புரட்சியை ஏற்படுத்த முடியும். ஆனால், இப்போது அந்த நடவடிக்கையை எடுத்தால் மத்திய அரசு பெருமுயற்சி கொண்டு ஒட்டுமொத்தமாக ஒடுக்கிவிடும் என்ற முன்னெச்சரிக்கை உணர்வால் அவர்கள் நிதானமாக இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட 8 மாநிலங்களில் தங்களின் நெட்வொர்க்கை திட்டமிட்டு விஸ்தரிக்கிறார்கள். அண்டை மாநிலங்களிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஊடுருவுகிறார்கள்.

ஜார்க்கண்ட் போன்ற பின்தங்கிய மாநிலங்களில் வறுமையில் வாழும் சமூகங்களில் உள்ள இளைஞர்களை நக்சல்கள் குறிவைக்கின்றனர்.

மலை கிராமப் பகுதிகளில் வேலையில்லாமல் சுற்றித் திரியும் இளைஞர்கள் மட்டுமல்லாது, படிந்த இளைஞர்களையும் அவர்கள் தங்களின் நடவடிக்கைகளுக்காக சம்பளத்துக்கு வைத்துள்ளார்கள்.

நக்சல்கள் இதுபோன்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 சம்பளம் வழங்குவதோடு, ஊக்கத் தொகையாக கடத்தல் மூலம் கிடைத்த பெருந்தொகையில் குறிப்பிட்ட பங்கையும் அவர்களுக்கு அளித்து வசியப்படுத்துகிறார்கள்.

வறுமையில் வாழும் இளைஞர்கள் நக்சல்களின் பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளுக்கு அடியாட்களாகவும், போராட்டக்காரர்களாகவும் பயன்படுத்தப்படுகின்றனர்.

தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை மிரட்டிப் பணம் பறிப்பது, முக்கிய நபர்களை கடத்தி பணம் பறிப்பது போன்ற நடவடிக்கைகளால் மட்டும் நக்சல்கள் ஆண்டுதோறும் சுமார் ரூ.ஆயிரத்து 400 கோடி திரட்டுவதாக கணிக்கப்படுகிறது.

கணிம வளங்கள் நிறைந்த பகுதியில் சட்டவிரோதமாக தொழில் செய்து பணம் ஈட்டும் சுரங்க அதிபர்களிடம் சுலபமாக நக்சல்களால் பணத்தை கறக்க முடிகிறது.

நிறைய தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், ஒப்பந்ததாரர்கள் மட்டுமல்லாது அரசு அதிகாரிகளே கூட பலர் நக்சல்களுக்கு பயந்து கப்பம் கட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இந்திய பொருளாதாரத்தின் பல துறைகளை நக்சல்களால் தங்களின் காலடிக்குள் கொண்டு வந்துவிட முடியும். ஆனால் அதற்கான காலம் கணிய வேண்டும் என கொக்கு போல அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் மத்திய அரசு நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நாளுக்கு நாள் கடுமையாக்கி வருகிறது' என்று தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X