சானியா, சோயப்புக்கு எதிராக 'பாத்வா'! பிறப்பிப்பு

'அதிகாரப்பூர்வமாக இன்னும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாகவே இரண்டு பேரும் நடந்து கொள்கிற விதம் முஸ்லிம் மத நெறிமுறைகளின் வரம்பு மீறியவையாக இருக்கிறது.'
எனவே, 'வரும் 15ம் தேதி நடக்க இருக்கும் இவர்களின் திருமணத்தில் எந்த இஸ்லாமியரும் கலந்து கொள்ளக் கூடாது' என ஹைதராபாத்தில் உள்ள சன்னி உலமா முஸ்லிம் வாரியம் அறிவித்துள்ளது.
முஸ்லிம் வாரியத்தைச் சேர்ந்த மூத்த நிர்வாகி மௌலானா ஹஸீபுல் ஹசன் சித்திக் இதுபற்றி இன்று ஹைதராபாத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,
'டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கிற்கும் வரும் 15ம் தேதி திருமணம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், திருமணத்துக்கு முன்னதாகவே இருவரும் மேற்கொள்கிற நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
திருமணம் ஆவதற்கு முன்னதாகவே மாலிக், ஹைதராபாத்திற்கு வந்து ஒரு வாரமாக மணமகள் சானியாவின் வீட்டில் தங்கியிருக்கிறார்.
இரண்டு பேரும் ஒன்றாக ஆட்டம் ஆடுவது, எக்சர்சைஸ் செய்வது போன்ற படங்கள் எல்லாம் வெளியாகிறது. அதுமட்டுமின்றி ஜோடியாக சேர்ந்து பேட்டி எல்லாம் கொடுக்கிறார்கள்.
திருமணத்திற்கு முன்பு மணமகளை மணமகன் ஒரே ஒரு முறை பார்ப்பதற்கு தான் இஸ்லாம் மதச்சட்டம் அனுமதிக்கிறது.
திருமணம் நடப்பதற்கு முன்பு இப்படி சேர்ந்து வாழ்வதை இஸ்லாம் மத நெறிமுறைகள் அனுமதிக்காது.
இவர்களின் இந்த போக்கினால், புனிதமான இஸ்லாம் மதத்திற்கு கெட்டப்பெயர் ஏற்படுத்துகிறார்கள்.
எனவே இவர்களின் திருமணத்திற்கு முஸ்லிம் சமுதாயத்தினர் யாரும் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இஸ்லாமிய புனித நெறிமுறைகளுக்கு எதிராக நடந்து கொள்ளும் மக்கள் சூழ்ந்திருக்கக் கூடிய அந்த நிகழ்ச்சியை முஸ்லிம் மக்கள் புறக்கணிக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.
திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவுக்கு ஆதரவு தெரிவித்து சில ஆண்டுகளுக்கு முன்பு சானியா மிர்சா கருத்து தெரிவித்ததாகக் கூறி அப்போதும் அவருக்கு எதிராக பத்வா பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications