For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயர்நீதிமன்றத்தில் கருணாநிதிக்கு கருப்புக் கொடி - வக்கீல்கள் அடிதடி-பதட்டம்

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சட்ட மேதை அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டார். அப்போது வக்கீல்களில் ஒரு பிரிவினர் அவருக்கு கருப்புக் கொடி காட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்னொரு பிரிவினர் மோதலில் இறங்கியதால் பெரும் அமளி ஏற்பட்டு அடிதடி ரகளையானது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷணன் முன்னிலையில் நடந்த இந்த அமளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்கப்ப்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் சிலையைத் திறந்து வைத்தார். முதல்வர் கருணாநிதி, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதிகள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவுக்கு முதல்வர் வருவதற்கு வக்கீல்களில் சிலர் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முதல்வர் வரக் கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்திருந்த வக்கீல்கள் இன்று முதல்வர் கருணாநிதி தனது பேச்சைத் தொடங்கியதும் அவருக்குக் கருப்புக் கொடி காட்டினர். இருக்கைகளை தூக்கி மேடை முன்பு வீசினர். இதைப் பார்த்த திமுக வக்கீல்கள் அவர்கள் மீது இருக்கைகளை தூக்கி வீசி மோதலில் இறங்கினர்.

இரு தரப்பினரும் சரமாரியாக இருக்கைகளைத் தூக்கி எறி்ந்து தாக்கிக் கொண்டதால் அநத இடமே போர்க்களம் போல மாறியது. முதல்வரைக் கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் வக்கீல்கள் கோஷமிட்டதால் பரபரப்பு கூடியது.

அப்போது கலைஞர் டிவி கேமராமேன்களைத் தாக்கிய சில வக்கீல்கள் அவர்களது கேமராவையும் பறிக்க முயன்றனர்.

நிலைமை மோசமாவதை பார்த்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோகலே, வக்கீல்கள் அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

போலீஸ் டிஜிபி லத்திகா சரண், கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோரும் வக்கீ்ல்களை அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால் அதுவும் பலன் தரவில்லை.

இந்த நிலையில் அமளியைப் பொருட்படுத்தாமல் முதல்வர் கருணாநிதி தனது பேச்சைத் தொடர்ந்தார்.

முன்னதாக நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று எடுத்துக்கூறும் வகையில் இந்த ஆட்சி நடந்து வருகிறது. ஜனநாயகத்தில் யாருக்கும், எவருக்கும் எத்தகைய நிலையும் ஏற்படலாம். ஆனால் ஜனநாயகத்தில் அராஜக நிலையை ஏற்படுத்த யாராக இருந்தாலும் அனுமதிக்க முடியாது. நீதியரசர் முன்னிலையில் இது பற்றி மேலும் சொல்ல விரும்பவில்லை.

எனக்கு 87 வயது ஆகிறது. 70 ஆண்டு காலம் பொதுவாழ்வில் இருந்து வருகிறேன். எதிர்ப்பு, ஏளனம், கல்வீச்சு என கண்டு, களம் பல கண்டு இன்றைக்கு பெரியாரின் மாணவனாக அண்ணாவின் தம்பியாக டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை மனதில் பதிந்து பொதுவாழ்வில் இருந்து வருகிறேன்.

ஆரம்பத்தில் எனது பொதுவாழ்வு தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து தொடங்கியது. ஆதிதிராவிடர் காலனியில் தான் நான் முதன் முதலில் கொடியேற்றினேன். ஆரம்பத்தில் இருந்து அவர்களுக்காக பாடுபட்டு அவர்களுக்காகவே இன்றைக்கும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். எனது கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்.

இங்கு எனக்கு மலர்செண்டு கொடுத்த போது உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அவர் நாகரீகமான மனிதர். நல்ல தலைவர். அவர் அளித்த கோரிக்கையில் வக்கீல்களின் சமுதாயம் சுகபோகத்தில் தழைக்கவில்லை. சாமானியர்களை போன்ற வக்கீல்களும் உள்ளனர். சேமநலநிதிக்காக வக்கீல்களிடம் இருந்து ரூ.10 வசூலிப்பதை ரூ.30 ஆக உயர்த்த வேண்டும். வக்கீல்களுக்கு வழங்கப்படும் சேமநல நிதித்தொகையை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இப்போது சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நான் அறிவித்தால் சட்டசபையில் இது தொடர்பாக கேள்வி கேட்பார்கள். வக்கீல்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்த அறிவிப்பை தமிழக அரசு சார்பில் விரைவில் வெளியிடுவேன்.

வக்கீல்களுக்கான மருத்துவ அறக்கட்டளை அமைத்திட 10 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிறைவேற்றுவேன் என்பதற்கும் உறுதிமொழி தருகிறேன்.என் மீது ஏவப்படும் அம்புகளை மலர்க்கொடையாக ஏற்றுக்கொள்வேன். என் மீது ஏவப்படும் கணைகளை தாங்கித்தான் பழக்கப்பட்டுள்ளேன்.

என் இதயத்தில் பல நூற்றுக் கணக்கான காயங்களை தாங்கி பழக்கப்பட்டவன். மேடையில் அமர்ந்துள்ள நீதிபதிகளிடம் சகாயத்தைத் தான் விரும்புகிறேன். அது சுயநலத்திற்காக அல்ல. அவர்களையும் அரவணைப்பது சமுதாயத்தின் நலனுக்காகவும் சமுக நீதிக்காக போராடும் மக்களுக்காகத்தான்.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஒலிக்க வழிகாண வேண்டும். அது உச்சநீதி மன்றம் வரை ஒலிக்க வேண்டும்.இங்கு பேசிய வீரப்பமொய்லியும் நானும் ஒரே ஜாதி. இருவரும் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபடுபவர்கள். அவரது மனதில் ஏற்பட்ட தாக்கம் அவர் பேசிய பேச்சில் இருந்து நன்றாக தெரிகிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X