ஏழை மக்களை ஏமாற்றுகிறார்களே... ஜெயலலிதா கவலைப்படுகிறார்!

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாகக் கூறிவிட்டு, பெரும்பாலானவர்களுக்கு, கேலிக்கூத்தான வகையில், இரண்டு சென்ட் நிலமும், ஒரு சென்ட் நிலமும் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கொடநாடு எஸ்டேட்டில் இருக்கும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக அரசால் தமிழ்நாட்டில் மிகுந்த ஆரவாரத்துடன் துவக்கப்பட்ட திட்டங்களில் ஒன்று தான் நிலமற்ற ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கும் திட்டம். இந்தத்திட்டம் அறிவிக்கப்பட்ட போதே, இது குறித்த முதலமைச்சர் கருணாநிதியின் புள்ளி விவரத்தில் உள்ள தவறுகளை நான் சுட்டிக் காட்டினேன்.

கருணாநிதியால் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தில், மாநில அரசின் கைவசம் உள்ள நிலத்தை விட கூடுதலாக நிலம் ஏழைகளுக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தத்திட்டம் நிச்சயமாக தோல்வியைத் தழுவும் என்று அப்பொழுதே நான் அறிவித்திருந்தேன்.

நான்கு ஆண்டுகள் கழித்து, உண்மையிலேயே இந்தத் திட்டம் தோல்வியுற்றிருக்கிறது என்பது தெளிவாகிறது.

என்னுடைய ஆண்டிபட்டி தொகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் முறை எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.

உதாரணமாக, ஆண்டிபட்டி தாலுகாவில், இரண்டு ஏக்கர் இலவச நில திட்டத்தின் கீழ், 1,377 கிராம மக்கள் பயனாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஒரு பயனாளிக்கு இரண்டு ஏக்கர் என்ற அடிப்படையில், 1,377 பயனாளிகளுக்கு 2,754 ஏக்கர் நிலத்தை அரசு பகிர்ந்து அளித்திருக்க வேண்டும்.
ஆனால், உண்மை நிலை என்னவென்றால், 1191.81 ஏக்கர் நிலம் தான் அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில பயனாளிகள் மட்டுமே இரண்டு ஏக்கர் நிலத்தை முழுவதுமாக பெற்றுள்ளனர்.

கானவாயப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பார்வதி என்ற பெண்மணி வெறும் 40 சென்ட் நிலத்தை (சர்வே எண் 283/9) மட்டுமே பெற்றிருக்கிறார். கடமலைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண்மணி வெறும் 32 சென்ட் நிலத்தை (சர்வே எண் 888/25) மட்டுமே பெற்றிருக்கிறார்.

இவரது இல்லத்திற்கு அருகில் உள்ள வைரம் என்பவர் வெறும் 27 சென்ட் நிலத்தை (சர்வே எண் 888/26) மட்டுமே பெற்றிருக்கிறார். மயிலாடும்பாறை கிராமத்தைச் சேர்ந்த அமிர்தம் என்ற பெண்மணிக்கும் இதே 27 சென்ட்நிலம் (சர்வே எண். 1609/10) தான் கிடைத்திருக்கிறது.

இதே கிராமத்தைச் சேர்ந்த அமாவாசை என்பவருக்கு வெறும் 14 சென்ட் நிலம் (சர்வே எண். 1609/13) தான் கிடைத்திருக்கிறது. இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

ஆண்டிபட்டியிலிருந்து வந்த இந்த அதிர்ச்சிகரமான தகவலையடுத்து, மற்ற மாவட்டங்களின் நிலைமை குறித்து விசாரித்தேன். அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைமை தான் நிலவுகிறது. உண்மை நிலை என்னவென்றால், கேலிக்கூத்தான வகையில், பெரும்பாலானவர்களுக்கு இரண்டு சென்ட் நிலமும், ஒரு சென்ட் நிலமும் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது!.

இந்தத் திட்டத்தின் பயனாளிகள் அனைவரும் சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள். இவர்கள் அனைவரும் தங்களுடைய உரிமையை தட்டிக் கேட்கத் தெரியாது, படிப்பறிவு இல்லாத ஏழை மக்கள். இந்த ஏழை, எளிய மக்களைத் தான் அரசு வெட்கமில்லாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கதை இத்துடன் நிற்கவில்லை. பெரும்பாலான பகுதிகளில் இந்த இரண்டு ஏக்கர் நிலம் நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ஆனால், ஒதுக்கப்பட்ட பயனாளிகளுக்கு அதைப்பற்றிய விவரம் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலங்களை கட்டுமானத்துறையில் உள்ளவர்களும், தொழிலதிபர்களும், கல்வி நிறுவனங்களும் மேற்படி நிலங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

உதாரணமாக, திண்டுக்கல் மாவட்டம் சந்தையூரில், இரண்டு ஏக்கர் இலவச நிலத்திட்டத்தின் கீழ் யாருக்கோ ஒதுக்கப்பட்ட நிலத்தில், ஒருவர் தன்னுடைய ஊறுகாய் நிறுவனத்தை மேற்படி நிலத்தில் நடத்தி வருகிறார்.

திருச்சி மாவட்டம் சூரியூர், மற்றும் நெல்லை தகவல் தொழில்நுட்பப் பூங்காவை சுற்றியுள்ள பகுதிகளில் ஒதுக்கப்பட்ட பெரும்பாலான நிலங்களை, கட்டுமான நிறுவனங்கள் அபகரித்துக் கொண்டுவிட்டன. இது ஏழை மற்றும் சமுதாயத்தின் அடித்தளத்தில் உள்ள ஏழை மக்களை ஏமாற்றும் செயலாகும்.

இவ்வாறு கொடநாட்டிலிருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+