For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெயலலிதாவுடன் வைகோ திடீர் சந்திப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்துப் பேசினார்.

சுமார் ஒரு மாத காலமாக கோடநாடு எஸ்டேட்டில் இருந்த ஜெயலலிதா சென்னை திரும்பியதையடுத்து போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் வைகோ அவரை சந்தித்துப் பேசினார்.

அதே போல அதிமுக துணை கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் எஸ்.எஸ். சந்திரனும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

வைகோ மீது 21ல் குற்றச்சாட்டு பதிவு:

இந் நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக பதிவான வழக்கில் வைகோ மீது வரும் 21ம் தேதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்ப்படவுள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் மதிமுக ஈழத்தமிழர் எழுச்சி கருத்தரங்கு நடத்தியது.

அதில் வைகோ மற்றும் அப்போதைய மதிமுக அவைத் தலைவர் மு. கண்ணப்பன் உள்ளிட்டோர் பேசினர்.

அப்போது வைகோ தனித் தமிழ்நாடு வேண்டும் என்று இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக க்யூ பிராஞ்ச் போலீசார் கொடுத்த புகாரின் பேரில் சென்னை வடக்கு கடற்கரை போலீசார் வைகோ மற்றும் கண்ணப்பன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து வைகோவும், கண்ணப்பனும் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தனர். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

ஆனால், அதற்குள் திமுகவில் இணைந்துவிட்ட கண்ணப்பனின் பெயர் அதில் இடம் பெறவில்லை.

வைகோ மீதான இந்த வழக்கு விசாரணை சென்னை 3வது செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந் நிலையில் வரும் 21ம் தேதி வைகோ மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுகின்றன.

அப்போது வைகோ நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை இலங்கை தூதரகத்தை மூட வேண்டும்-வைகோ:

இந் நிலையில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை மூட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சே அரசு, தனது போர் குற்றங்களை மறைப்பதற்காக உலகில் இதுவரை எந்த நாடும் செய்யத் துணியாத செயல்களில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக மூவர் குழுவை ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அமைத்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை அமைச்சர் வீரவன்ச தலைமையில் சென்றவர்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். பான் கி மூன் உருவப்படத்தை செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தியுள்ளனர். இந்த வன்முறை வெறியாட்டங்கள் உலக நாடுகளின் மனசாட்சிக்கு விடப்பட்ட அறைகூவலாகும்.

இந்தத் தாக்குதலுக்கு உலகின் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், இந்தியா கண்டனம் தெரிவிக்கவில்லை. ஐ.நா. குழுவை எதிர்க்கும் ஆணவம் இலங்கை அரசுக்கு ஏற்பட்டதற்கு இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தருகின்ற ஆதரவுதான் காரணம்.

ஐ.நா. அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களை, குறிப்பாக சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை மூட வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X